செம போதைல எழுதினது!!
ஒரே இருட்டு. அது என்ன இடம்னு தெரியலை. ஒருவேள, நான் வழிமாறி வந்துட்டேனா? என்ன எதோ கனம்மா இருக்கு? இப்படி நான் இல்லையே!! இதென்ன புதுசு புதுசா என்னென்னமோ தெரியுது?
ஆ!! கால், கை எல்லாம் வருது. நான் எங்கே அனுப்ப பட்டிருக்கேன். இது புத்தம் புது உலகமா இருக்கே. பயங்கர துர்நாற்றம் வேற. ஐயோ, யாரு தள்ளறது, வலிக்குது, எதோ கயிறு போல கட்டி இழுக்குது வேற. ஆ.. வலி. வலி. பளிச்சுன்னு ஓரு வெளிச்சக்கீற்று கண்ல அடிக்குதே.. ஆ.. வலீ.. அழனும் போல இருக்கு..
என்ன பாக்கறிங்க? கருவுல இருக்கற ஒரு குழந்தை அனுபவிக்கும்னு அனுமானிச்ச விஷயத்தைதான் மேலே சொல்லிருக்கேன். பிறப்பு சாதாரணமான ஒன்னு இல்லைங்க. வலிகளோட ஆரம்பிக்கறதுதான். பயமும், வலியும், தயக்கமும், ஆச்ச்ரியமும் கலந்து கட்டித் தள்ளிவிட்டுதான் நாம வெளிய வந்து விழறோம்.
கொஞ்சம்கூட வலியே இல்லாம, கண்ணெல்லாம் நெகிழ்ச்சி கலந்த கண்ணீரோட , மனசு பாரம் எல்லாம் அந்த சில நொடிகள் காணாமப்போயி, மீண்டும் புதுசா பிறக்கனும்னா..
ச்சில்லுன்னு பெண் கோரசோட தொடங்கி, ஒரு கணீர் வயிலின முகவரி ஆக்கிக்கிட்டு 'தன்ன நன தான நான தான நான்' னு ஆரம்பிக்கற 'தென்றல் வந்து' கேட்டுப்பாருங்க. எழுதும்போதே , அந்த இடம் மண்டையக் குடையுது, தொண்டை அடைக்குது, சுத்தி முத்தி பாத்துக்கறேன். நல்ல வேள கண்ணு வேர்க்குறத யாரும் பாக்கலை. தெய்வீகம்லாம் வார்த்தை இல்லைங்க. இது அதுக்கும் மேல 'ராஜ தீகம்'.
நல்லா ஞாபகம் இருக்கு.. 2010ல இவரை நேரா பக்கத்துல சந்திக்கற வாய்ப்பு. காமராஜர் அரங்கம். மேடைக்குப் பின்புறம். VIP நண்பர் ஒருத்தர் ஆனமட்டும் கூப்பிட்டாரு. வாடா போயி பாக்கலாம் போட்டோ எடுத்துக்கலாம்னாரு. எழுந்து போயிட்டேன். ஆனா திரும்ப வந்து உக்காந்துட்டேன். சாமிய சிலையாவே பாத்துக்கறேன். நேர்ல பாக்கற தைரியம் எனக்கில்லைன்னு சொல்லிட்டேன். இப்பவரை இவரை, பாலு சாரைலாம் நேர்ல பாக்க வாய்ப்புகள் வந்தும், நான் பாக்கலை. சக்தி இல்லை. பக்தி மட்டுமே!!
இவரைப் பத்தி நான் என்ன எழுத நினைச்சாலும் , அதை ஏற்கனவே எங்கேயோ படிச்ச ஒரு ஃபீல் வர்றத தவிர்க்க முடியறதில்லை. அவ்வளவு அணுஅணுவா ரசிக்கற கூட்டம் கோடானு கோடி. இவர் பாடல்களைப் பத்தி நிறையபேரு பிச்சு தீத்துட்டாங்க.. பின்னணி இசைல எனக்குப் ரொம்ப பிடிச்சு அடிக்கடி விசிலடிக்கற சிலதுகள இங்கே பகிர்ந்துக்கறேன். முடிஞ்சா படிங்க.. கேளுங்க
10. வீரா
முக்கிமான ஒரு இடம். வினு சக்ரவர்த்தி வடிவுக்கரசிய அடிச்சுடுவாப்ல. ரஜினிக்கு இந்த விஷயம் தெரிஞ்சு, அருவாளத் தூக்கிட்டு வெட்டக் கிளம்பிடுவாரு. அவரு நடந்து போகப்போக, 'உறுமி, உடுக்கை, வயலின்லாம் சேத்து ஒரு ருத்ரதாண்டவம் ஆடி விளையாடிருப்பாரு' கேட்டுப்பாருங்க. அதுபோக, ரஜினி மீனாவ அந்த கோயில் வாசல்ல சந்திக்கும்போது வர வயலின்.. க்ளாஸ்!!
9. சத்ரியன்
இது ஊரறிஞ்ச ஒன்னு. இன்னுமும் ரன்னிங், ஜிம் எல்லாம் போகும்போது, இதைக்கேக்காம ஓடறதில்லை. கம்ப்ளீட் எனர்ஜி பேக்கேஜ். உள்ளூர ஒரு உஷ்ணம் கிளம்பி மூளை வரைக்கும் அடிக்கற போலீஸ் BGM. அது போக, ரேவதிக்கும் ஒரு வீணை RR, பானுப்ரியாவுக்கு ஒரு மேண்டலின் பீசு.. ப்பா. மொட்ட நீ சான்சே இல்லை!!
8. நான் சிகப்பு மனிதன்
இந்தப் படத்தோட பின்னணி இசை அவ்வளவா பேசப்பட்டுதான்னு தெரியலை. ஆனா ஒவ்வொரு வாட்டி ராபின்ஹூட் கோபம் வந்து அவர் துப்பாக்கி எடுக்கும்போதும், வர்ற அந்த பேஸ் ட்ரம்ப்பட், கிட்டார், வயலின், கீஸ், ட்ரம்ஸ்.. யம்மாடீ.. வேற லெவல்.. தங்கை பாசத்துக்கும் அம்பிகா காதலுக்கும் வீணைகள்!! மொட்ட.. தூள்!!
7. சேது.
இது பாலாவுக்கே உண்டான ராஜாசாரோட சிறப்புப் பரிசு. அடிதடியப்போ வர்ற அந்த அதகள BGMஐ விட.. அமைதியா அந்த மயில்தோகைய சியான் வருடும்போது வர்ற அந்த ஆண் ஹம்மிங் கலந்த குழல்/ வயலின்.. இப்பவும் கேக்குது சார். தியேட்டர்ல அந்த எங்கே செல்லும் இந்தப் பாதை பாட்டு தொடங்கற இடம் பலருக்கும் மறக்காதே! எவ்வளவு கதறி இருப்போம்ல.. ப்ச்
6. பூவிழி வாசலிலே
அதென்னமோ ஃபாசில்னா நம்மாளுக்கு தனி அக்கறை. இதுல வர்ற 'சின்னச் சின்ன ரோஜாப்பூவே' BGMல கொடுத்த அந்த வீணை.. நோட்சப் படிக்கும்போதே வாசிச்சவர் கண்ணு கலங்கிருப்பாரு!!பவர்ஃபுல் சோகம். ப்பா. கண்ணு கலங்குது. 'யாயா' 'ராஜா' மைண்ட்ல வந்து போறாங்க.
7. சிகப்பு ரோஜாக்கள்
இந்தப்படத்தோட டார்க்னெஸ் அந்த டிக் டிக் ம்யூசிக்கே சொல்லிடும். கிட்டார கீச்சி கூட டிக் டிக்னு வர்ற அந்த மிஸ்டிக் ம்யூசிக்கும் சரி.. கடைசில ஸ்ரீதேவி ஆப்பிள் கொடுக்கப் போறச்சே கமல் கண்ண உருட்டி கண்ணீரோட நிக்கறப்போ ,கொடுக்கற சோலோ பியானோவா இருக்கட்டும். உயிரிசை!!
4. ஜானி
படம் பெரிய அளவு செல்ஃப் எடுக்கல. ஆனா ம்யூசிக்குக்கு நிறைய பேருக்கு க்ளாஸ் எடுத்திருக்கு. படம் பூராவா அதுக்குன்னு பேயாட்டம் ம்யூசிக் போடுவாரு இந்தாளு. நீயல்லாம் உலக லெவல்யா. பியானோ போயிட்டே இருக்கும்போது குட்டியா ஜலதரங்கம்.. அதாவது வெண்முத்து மாலைல வைரம் வச்சாப்ல. 'உம்ம்ம்மா ராஜா'
3. கோபுர வாசலிலே.
நிறைய எழுதலை. டைட்டில் ஸ்கோர் மட்டும் எடுத்துப் பேசினாலே ரெண்டு இரவு மூணு பகல் தேவைப்படும். புல்லாங்குழல் மூங்கில்லருந்து வந்துருக்கலாம், ஆனா அதிலருந்து உயிர் வரவழைச்சது ராஜா!! ஊட்டி ட்ரைனோட குழலும் கிளம்பற சத்தம் காதுல கேக்குதா ???? அதுபோக, கடைசியா கார்த்தி செத்துக் கிடக்கறாப்ல இருக்கற இடத்துல, எதுமே வாசிக்காம நிப்பாட்றது. ராஜா!!
2. சிந்து பைரவி.
நானோரு சிந்து பாட்டை, அப்படியே குழலா கொடுத்த பின்னணி இசை. படம் முடியறச்சே.. சுகாசினி எல்லாத்தையும் விட்டுட்டு கிளம்புவாங்க. எப்படி பாலசந்தர் காமிச்சுருப்பார்னா, ரயில் மாதிரி நாலஞ்சு குட்டிப்பசங்க ஓடுவாங்க. அதுக்குப் பின்னால் இந்த இசை ஓடும். கண்டிப்பா கண்ணு கலங்கலங்கிடும். KBயும் ராஜாவும் இன்னும் நிறைய படம் சேந்துருக்கனும் :(
1. வருஷம் பதினாறு.
ஓரே ஒரு உயிர அசைக்கற இடங்க.. வாழ்க்கையும் தன் உறவுகளையும் பறிகொடுத்துட்டு, பல வருஷம் ஜெயில்ல இருந்துட்டு திரும்பி வர்ற கார்த்திக், ஒரு ஆட்டுக்குட்டிய அவரோட தாத்தா பாணில எடுத்துக் கொஞ்சுவாரு. அப்போ பூர்ணம் சார் குரல் பின்னால 'கண்ணா! உன் கையால விளக்கேத்துடா, அது என்னைக்கும் எரிஞ்சுட்டே இருக்கனும்' னு சொல்றப்போ ஒரு குழல்நாதம். நினைச்சாலே உயிர் அசையுதுங்க. ராஜா கால்லயே கிடக்கலாம். தகும்!!
இன்னும் ஆயிரமாயிரம் இருக்குங்க. பேசப்பேச சுகம். இதல்லாம் மைண்டுல ரெஜிஸ்டர் ஆகிடுச்சுது. இந்த மனுஷன் தொடாத உயிரும் இல்ல, உயரமும் இல்ல.. போதை பழக்கம் எனக்கில்லை. பழகிக்கனும்னு தோணலை் . அதான் ராஜா இருக்காறே. ராஜபோதை!!
அவர் பிறந்தநாள்ல சொல்லிக்க விரும்பறது ஓன்னு மட்டுமே,
'இப்படியே சரித்திரங்களை படைச்சுட்டே இருங்க, என் கொள்ளுப்பேரன் காலம் வரை'. சரி அதுக்கப்புறம்? அவனும் ராஜா சார் ஃபேன்தானே ஆகப்போறான்! அவனே வந்து வாழ்த்திப்பான்!
நல்லாருங்கய்யா!! நல்லாருங்க.
நெகிழ்வுடன்,
குரு
No comments:
Post a Comment