எட்டாவது படிக்கும்போதே சிகரெட் லைட்டர் க்ளாசுக்கு கொண்டுவந்து.. யாருக்கும் தெரியாம பின்னாடி பெஞ்ச்சு பயலுக்கு கொளுத்திக் காமிக்கறேன்னு, உள் பாக்கெட்ல வச்சுக் கொளுத்தி, சட்டைய பொத்துக்கிட்டு அடி வாங்கினவன் பையன் ஹரி!! செல்லமா கருவாயன்!! வாத்தியாரு அவன, தண்டிக்கறதுக்காக சட்டைய கழட்டி பெஞ்சு மேல நிக்கச்சொன்னா, ஏறி நின்னு WWF சேஷ்டை காமிச்ச பயல். கிராமத்துக் குறும்புகளுக்குக் குறைவில்லாத, பக்கா கேடி!! கண்ல எப்போமே குறும்புள்ள பயல்.
1999 - கடைசி நாள் நேஷனல் ஸ்கூல். பத்தாமாண்டு பொதுத்தேர்வு முடிஞ்சு எல்லாம் கிளம்பிட்டுருந்த நேரம்.
மச்சி, அடுத்த பஸ்ல போயிக்கறேன்டான்னு சொன்னவன, மூடிட்டு கிளம்பிட்டு, சாயங்காலம் சீக்கிரம் மலைக்கோட்டைக்கு வந்து சேருன்னு அவசர அவசரமா அனுப்பி வச்சோம். எட்டரைக்கோப்புலருந்து வர்ற பையன்ங்கறதால சீக்கிரம் போயி கிளம்பி வரச்சொன்னோம். பஸ் ஏறினதுக்கு அப்புறமும், பின்னாடியே போயி சட்டைல இங்க் அடிச்சோம். வாயெல்லாம் ப்ளூட்டூத்தோட சிரிச்சுட்டே கிளம்பினான் . "சாயங்காலம் மெயின்கார்டு கேட்ல பாப்போம்"ன்னு சொல்லிட்டுப் போனான். மலைக்கோட்டைக்கு அன்னைக்கு சாயங்காலம் வரல. கெட்ட கெட்ட வார்த்தைல திட்டிக்கிட்டே கிளம்பிட்டோம்.
திரும்பிப் பாக்கறதுக்குள்ள ஆண்டு 2000. தினசரி நாளிதழ்ல முதல் பக்கத்துல அந்தப்பய ஃபோட்டோ, முதலாம் ஆண்டு நினைவஞ்சலின்னு பாத்துட்டு பகீர்னு கிளம்பி ஓடினேன். என்னடான்னா ஆக்சிடென்ட்டாம். ஆட்டோல கார்மோதி அத்தனை பேரும் தப்பிக்க, இந்தப்பய மட்டும் நெஞ்சுல கம்பி ஏறி செத்துருக்கான். கதறினோம். யாருக்குமே தெரியாது. தொலைபேசி இல்லாத கிராமத்துலருந்து வந்த தால தொடர்புக்கும் வாய்ப்பில்லை. 4 வருஷ நட்பு. துர் பிரிவு.
எத்தனையோ முறை சிரிக்க வச்சுருக்கான். எங்கள்ட்ட, எவ்வளவோ அடி வாங்கிருக்கான். பேசமாட்டேன் போடான்னுட்டுப் போயிட்டு, அரை மணிநேரத்துல வந்து சாயங்காலம் காயத்ரி டீஸ்டால்ல நில்லுன்னுட்டுப் போவான். அவன் போனத நினைச்சு ரெண்டு மூனு நாட்கள் தொடர் அழுகை. அதோட கரைஞ்சுட்டான். இப்பல்லாம் அவன் நினைப்பே இல்லை. எப்போவாவது தோணும், அவன் அடிச்ச சேட்டையெல்லாம் நினைச்சு சிரிச்சுப்பேன். லைட்டா கண்ல தண்ணி கோர்க்கும். போடா லூசுப்பயலே, எங்களோட இருந்துருக்கலாம்ல நீயெல்லாம்னு !! நினைச்சுட்டு கண்ணத் துடைச்சுட்டு நகர்ந்துடுவேன். அவ்வளவுதான்ல வாழ்க்கை. எவ்வளோ பலம் நமக்கெல்லாம். ஒரு சாவை மறக்கற அளவுக்கு.
ப்ச் இன்னைக்கு சாயங்காலத்துலருந்து என்னமோ அவனோட நினைவாவே இருக்கு. மிஸ் யூ கருவாயா!! ரியலி மிஸ் யூ மச்சி.
No comments:
Post a Comment