Saturday, December 3, 2016

நெகிழ்ச்சி மகிழ்ச்சி நிம்மதி!!



நெகிழ்ச்சி:

இன்று தி நகரில் மதியம் 12.30 மணிக்கு, சரவணா ஸ்டோர்ஸ் வாசலில் கரும்பு சாறு குடித்து கொண்டிருந்தேன். என்னிடம் வந்த ஒரு 8 வயது சிறுமி தன் கையில் இருந்த சில ஸ்டிக்கர்களை காண்பித்து வாங்கிக்கொள்ளுங்கள் அண்ணா என்றாள். வாங்கிக்கொண்டேன். அந்த சிறுமியிடம் கரும்பு ஜூஸ் அருந்துமாறு கேட்டேன்.. வேண்டாம் என்றாள்.. வற்புறுத்தினேன், வாங்கிக்கொண்டாள். அந்த பசி எடுக்கும் வேளையிலும், அந்த பிஞ்சு அதை குடிக்காமல் எங்கோ கொண்டு சென்றாள். பின் சென்றேன். தன்னுடன் சேர்ந்து புத்தகம் விற்கும் 4 நண்பர்களுடன் அதனை பங்கிட்டு அருந்தினாள். பொட்டில் அடிபட்டது போல் அங்கேயே நின்றேன், கலங்கிய கண்களுடன். நெகிழ்ச்சியுடன்..

மகிழ்ச்சி:
அந்த சிறுமியிடம் உன்னை போல் இங்கு உள்ள அத்துனை பேரையும் அழைத்து வா என்று கூறினேன் . 12 பேர் வந்தனர். அவர்களுக்கும் வாங்கி கொடுத்தேன். அந்த பரபரப்பான வேளையிலும் எங்களை கடந்து சென்ற சிலர் நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.. அந்த பிஞ்சுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எனக்கு நன்றி கூறினர். - அகம் பூரித்து மகிழ்ந்து போனேன்.. மகிழ்ச்சி.

நிம்மதி:
கடைக்காரர் என்னிடம் கேட்டார், என்ன சார் எதுவும் விசேஷமா என்று.. இன்று என் பிறந்த நாள் என்று கூறினேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை 200 ரூபாய் குடுங்க சார் போதும் என்றார்.. ஒரு ஜூஸ் 25 ரூபாய் என்றால் 12 ஜூஸ் 300 ரூபாய் ஆயிற்றே, ஏன் வெறும் 200 ரூபாய்? என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில், " நேற்று என் அம்மாவின் நினைவு நாள் சார்.. ஏதாவது செய்யனும் நு நெனச்சேன் எதுவும் தோணல, நீங்க ஏதோ செய்யறிங்க எங்க அம்மா சார்பா நான் 100 ரூபாய் இதுல பங்கு எடுத்துக்கறேன் சார்" என்றார். கண்களில் கண்ணீருடன் பிரம்மை பிடித்தார் போல் நின்று சரி சார் என்றேன். எங்களை கூடி நின்ற கூட்டத்திலிருந்த அனைவரும் டிராபிக் போலீஸ் உட்பட ( 15 பேருக்கும் மேல்) வந்து பிறந்த நாள் வாழ்த்து கூறிசென்றனர்.. செய்வதறியாது கண்களில் நன்றி தெரிவித்து, தொண்டை தாண்டிய எனது அழுகையை மறைத்து நின்றேன். முத்தாய்ப்பாக அங்கே பூவிற்ற ஒரு 50 வயதைக்கடந்த பாட்டி எனக்கு சிறுது சாமந்தி பூ கட்டி கையில் வந்து கொடுத்து " சாமிக்கு போடு தம்பி" என்றாள். எவ்வளவு என்று கேட்டதற்கு "உன் பங்குக்கு 200 ரூபாய் கொடுத்த, அவரு பங்குக்கு 100 ரூபாய் கொடுத்தாரு. இன்னைக்கு ஒனக்கு பொறந்த நாள் தானே, எப்புடியும் சாமிக்கு பூ வாங்குவல்ல, அது என் பங்காக இருந்துட்டு போட்டும் தம்பி" என்றாள். வடிவேலு அவர்கள் கூறியது போல் " நானும் எவ்வளவு நேரம் தான்யா அழாமலே நடிக்கறது?" காரில் ஏறி உக்கார்ந்து அழுது தீர்த்துக்கொண்டேன். "நிம்மதி"

"மனிதநேயம் மரித்து விடவில்லை.. மழுங்கிதான் கிடக்கிறது".. நண்பர்களே, எனக்கு இன்று கிடைத்த இம்மூன்றும் தற்செயலே. உங்களுக்கும் வேண்டுமா? வெகு தொலைவில் இல்லை. பிறருக்கு உதவுகள் என்று கூறவில்லை. முற்படுங்கள் என்றே விண்ணப்பித்துகொள்கிறேன். பல சேவைகளை சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் ,செய்யப்போகும் அன்பர்களுக்கும், உங்கள் பாதங்களில் எனது சிரம் பதித்து நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
பொருமையாக படித்தமைக்கு எனது நன்றிகள், மற்றும் வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment