Saturday, December 3, 2016

தன்னைத்தானே!!

நேற்று மாலை வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்த என்னை, ஓடி வந்து கட்டிக்கொண்ட எனது செல்ல மகள் என்னிடம் சொன்னாள் அப்பா நீ ஒரு SELF MADE MAN என்று..

மீண்டும் மீண்டும் 4-5 முறை சொல்லிக்கொண்டாள் தனக்குத்தானே. எனது மனைவி பெருமையாக சொல்லிக்கொடுத்து அனுப்பி இருக்கிறாள் என்று புரிந்தது.. அதைச் சொன்னபோது, என் மனைவி மகள் இருவர் கண்களிலும் அவ்வளவு பெருமை. எனக்கும் உள்ளூர ஒரு ஆனந்தம்.. ஆமாம் நானும் ஒரு SELF MADE MAN தானே.. சின்னதாய் ஒரு கர்வகீற்று மனதோரம். 

இரவு எனக்கு நானே சொல்லிச் சிரித்துக்கொண்டேன் " பாலா உன்னை நீயே உருவாக்கிக்கொண்டவன் என்று" (நான் எதுவும் சாத்தித்து விடவில்லை, ஆனாலும் எனது மனைவி, மகள் கண்களுக்கு நான் பெரிய மனிதன்)

திடீரென மின்னல் வெட்டாய் ஒரு கேள்வி..
1. SELF MADE MAN என்பது எவ்வளவு பெரிய விஷயம்.. அதற்கு நான் தகுதியானவனா? - என் வாழ்வில் சிறிது பின்னோக்கி -

1983 - 2010:
நினைவு தெரிவதற்கு முன் தந்தையை இழந்த நான், எனது உறவுகளாலே பராமரிக்கப்பட்டேன். ஐந்துக்கு ஐந்து வீட்டில் 6-7 பேர் கூடி வாழ்ந்த போதும், எனக்கென தனி இடம் கொடுத்து கொசுவிலும் மழையிலும் நனைந்து திண்ணையில் படுத்துக்கொண்ட உறவுகள் உண்டு..! எனக்கு விஷக்காய்ச்சல் வந்தபோதும் அம்மை வாரி இறைத்த போதும், சமயபுரம் அம்மனுக்கு அங்கப்ரதர்ஷனம் செய்த தாயுண்டு! புறாகூண்டு போன்ற வீடே ஆனாலும், அதனுள் ஒரு இளவரசனாக என்னை பாவித்து தூக்கி வைத்துக்கொண்டாடிய சொந்தங்கள் உண்டு!! ITI என்பதே பெரிய படிப்பாக இருந்த என் குடும்பத்தில், பட்டயப்படிப்பு படிக்கவைத்த மனங்கள் உண்டு! அடுத்த வீட்டில் சென்று டிவி பார்ப்பது பிடிக்காமல், பொருளாதார நெருக்கடியிலும் எனக்கென்று தொலைகாட்சி வாங்கிக்கொடுத்து ரசித்த உயிர்கள் உண்டு!! பெற்றோர் தங்கள் வாரிசுகளுக்கு தரவேண்டிய, ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனைகளும் எனக்கு நிறைவாய் உண்டு!!

2010 - இன்று வரை:
எனது மனைவி, திருமணமான நாள் முதல் இன்று வரையில், நான் மேற்கூறிய எல்லா உறவுகளையுமே உள்ளடக்கி, எப்பொழுதும் எனது ஆரோக்கியம் மற்றும் நலன் மற்றுமே பிரதானம் என்று வாழ்ந்து, அலுவலகம் சென்று, தானும் சம்பாதித்து, அதற்கிடையில் குழந்தையை பராமரித்து, கிடைத்த நேரத்தில் மேற்படிப்பும் படித்து, இன்று சமுதாயத்தில் என்னையும் ஒரு மனிதனாக காட்டிக்கொள்ள தனக்கே தெரியாமல் பேருதவி புரிந்து வருகிறார். துவண்டு நிற்கும்போதும் தட்டிக்கொடுத்து நல்ல வார்த்தை சொல்பவள். படித்து முடித்த காலத்தில், சமுதாயத்தில் நான் இந்த நிலையில் இருப்பேன் என்ற எனது அனுமானத்தை விட ஒரு படி மேலே வைத்து என்னை அழகு பார்க்கும் குணவதி.

மீண்டும் கேள்விக்கு வருவோம்: SELF MADE MAN என்பது எவ்வளவு பெரிய விஷயம்.. அதற்கு நான் தகுதியானவனா?
உலகில் தன்னை தானே உருவாக்கி கொண்டவர் என்று ஒருவரும் இருக்க முடியாது.
இந்த சதைக்கட்டிடம், உருவாகக் காரணமாகி நின்ற பெற்றோரும், தாங்கி நிற்கும் தூண்களாய் உறவுகளும், நண்பர்களும், மேலும் கண்ணுக்குத்தெரியாத ஆயிரமாயிரம் உணர்வுகளும் உள்ளடக்கி பூசப்பட்டதே. அதற்கு மேலுள்ள வண்ணங்கள் மட்டுமே நமது உருவாக்கம்.

எனது மகளுக்கு நான் சொல்லிக்கொடுக்க இருப்பதும் இதுவே..
"எவ்வளவு உயரம் தொட்டாலும், கால்களை தரையில் வை. உயரமானது உன் கை தொடும் தூரம் அல்ல.. உன்னை தாங்கிப்பிடித்தோரை, நீ விட்டு விடாமல் தூக்கிச்செல்வதே" என்பதை. 

Iam not self made.
Self Made Man என்று மார்தட்டும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்

No comments:

Post a Comment