Friday, December 23, 2016

!!கசப்பு மிட்டாய்!!

தினமும் ஆபீஸ் பஸ்ஸிலிருந்து இறங்கியதும், அருகாமையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் ஒரு தேன் மிட்டாய் வாங்கிச் சாப்பிடும் பழக்கம் எனக்குண்டு. ஒரு ரூபாய்க்கு ஒரு மிட்டாய். அதுவே பழக்கமாகிப்போனது. என்னைக் கண்டதும், இந்தாங்கண்ணா என்று மிட்டாயை எடுத்து நீட்டும் அந்தச்சிறுமி எனக்கு மிகவும் பரிச்சயமாகிப் போயிருந்தாள். சிறிய கடை, ஒருவர் உட்காரும் அளவு மட்டுமே இடமுள்ள ஒரு பெட்டிக்கடை.

ஐநூறு ஆயிரங்கள் செல்லாது என்ற அறிவிப்பின்போது, என்னிடந்தான் அதிகப் பணமில்லையே, இது என்னை எந்த விதத்தில் பாதித்து விடப்போகிறதென்ற தைரியம், எனக்கு அதிகமாக இருந்தது. வீட்டு வேலையாட்களுக்கும், குழந்தையை ஏற்றிச் செல்லும் வேன் டிரைவருக்கும், அத்தியாவசியப் பொருட்களுக்கும் , தேவைகளுக்கும் மட்டுமே செக் மூலமாக பணம் எடுத்து வந்து வைப்பேன். (உதவிக்கு வீட்டில் உறவுகள் இருந்தபடியால் க்யூ பயமில்லை).

பர்சில் சில நூறுகள் மட்டுமே வைத்துக்கொண்டு சுத்தி வந்த நேரத்தில், திடீரென்று ஒருநாள் யோசித்தேன். இப்பொழுது நான் தேன்மிட்டாய் சாப்பிட்டு ஒரு மாதம் ஆகியிருந்தது. நான் ஏன் அதைச் சாப்பிடவில்லை?? காசிருக்கிறது.. நேரமிருக்கிறது, ஆசையும் இருக்கிறது. பிறகு ஏன் வாங்கவில்லை? ஏனென்றால், என்னிடமிருந்து போகும் ஒவ்வோரு ரூபாய்க்கும் கணக்கு போட ஆரம்பித்திருந்தேன். மிட்டாய் சாப்பிட எண்ணும்போதெல்லாம், அது தேனே அல்ல, சக்கரை நீர். உடலுக்குக் கேடு. சக்கரை வியாதி வரும். வேண்டாமே அந்தத் தேவையில்லாத செலவு, என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டிருந்திருக்கிறேன். சில நேரங்களில், ஆசை இருந்தும் சில்லறை இல்லாத காரணத்தினாலும். இத்தனை நாள் வராத எண்ணம், இப்பொழுது ஏன். முதல் சம்பளம் முதல் இன்று வரை, நான் கணக்குப் பார்த்து செலவழித்ததேயில்லை. இப்பொழுது ஆரம்பித்திருந்தேன். என்னையும் அறியாமல். மகிழ்ச்சியாக இருந்தது. மிச்சப்படுத்த ஆரம்பித்திருக்கிறேனே. அதேநேரம், எனது அத்தியாவசியங்கள் ஒன்றுக்கும் குறைவில்லை என்பதும் உண்மை.

இன்று அந்த மிட்டாய் சாப்பிட்டாக வேண்டும் என்ற திடீர் தோன்றலின் காரணமாக அந்தக்கடைக்கு சென்றேன். கடை மூடப்பட்டிருந்தது. கேட்டதற்கு, பக்கத்துக்கடை அண்ணன் சொன்னார், "போனவாரந்தாங்க மூடினாங்க, வரவுல பிரச்சனையாம்"
"சரிண்ணா, பாவம் ஒருகடைதான வச்சுருந்தாங்க அதையும் மூடிட்டு எப்படின்னே பொழப்பு" என்று கேட்டதற்கு சிரித்துவிட்டு "என்னாங்க பண்றது, யாரு கைலயும் காசில்ல" பீடியை இழுக்க ஆரம்பித்துவிட்டார்.
யோசித்துப் பார்த்தால் நானும் ஒரு காரணமே. அத்தியாவசியங்கள் மட்டுமே போதும் என்றிருந்தால், எத்தனை பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதற்கு யார் காரணம்?

அரசாங்கமா? நானா? என்னைப் பொறுத்தவரையில் நானே. ஒரு ரூபாய் தேன் மிட்டாய் தின்பதால் என் குடி மூழ்கி விடுமா என்ன? கண்டிப்பாக இல்லை. எனக்கு அது மிட்டாய். அவர்களுக்கு கடை வரவில் ஒரு ரூபாய் குறைகிறது. என்னைப்போல நூறு பேர் வெவ்வேறு பழக்கங்களை நிறுத்தியிருந்தால், நூறு ரூபாய். அந்தக்குட்டிக் கடைக்கு, நூறு ரூபாய் பெரிய விஷயம்.

ஏடிஎம் க்யூ, பேங்க் நெரிசல், புழக்கம், காரணங்கள் நூறு சொல்லலாம். உற்று யோசித்தால், உயிர்வாழ உணவும், நீரும் பிராண வாயிவும் போதும் என்று நிறுத்தியிருக்கிறோமா என்ன!! இந்த டீமானிட்டைசேஷன் நல்லதா தீயதா என்று ஆராயும் அளவு நான் புத்திசாலியில்லை. என்னைப்பொறுத்த வரை, அரசை குறைகூறிக்கொண்டு ஆடம்பர வாழ்வைக் குறைக்கிறேன் என்ற பெயரில், பணப்புழக்கத்தைக் குறைத்து, பல ஏழை வியாபாரிகள் ஒரு வேளைச் சோற்றை கேள்விக்குறியாக்கிய கொடியவர்களில் அரசு மட்டுமல்ல, நானும் ஒருவனானேன்.

இன்று கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு கேஷ்லெஸ் சூப்பர் மார்க்கெட்டில் , கார்டை ஸ்வைப்பி, ஓரு பாக்கெட் தேன்மிட்டாய் வாங்கி வந்து வீட்டில் ஒன்றினை எடுத்துச் சுவைத்துப்பார்த்தேன். அந்தச்சிறுமி ஞாபகத்தில்

தேன் கசந்தது!!

குருப்ரம்மா!!

No comments:

Post a Comment