இவள் எப்படி என்னுடையவளானாள்.!!
நான்
பிறந்தநாள் முதல் தனியாக வாழப்பழகியதில்லை..
வளர்ந்த பொழுதுகளில் உறவுகளுக்கு ஏங்கியதில்லை..
தளர்ந்து நின்ற தருணங்களில் தாங்கிய உறவுகளோ ஏராளம்..
பலரது மனங்களில் நானும்..
எனது பொழுதுகளில் அவர்களும்..
ஆண்டு நின்ற அற்புத வாழ்வினில்..
புதிதாய் புலர்ந்த உறவானாள் என் மனைவி..
இத்தனை அன்பு சூழ் என்னில்,
வருபவள் தாயாய் மாறத்தேவையிருக்கவில்லை..
தோழியாய் தோள்கொடுக்க அவசியமில்லை..
என்னவாகி நிற்பாள் என்றெண்ணி..
இமைமூடா இரவுகள் ஏராளமுண்டு...
இத்தனை நாள் நீ பழகிய அன்பு இருக்கட்டும்..
இன்னுமிருக்கிறது ஏராளம் நீ ரசிக்க..
அத்தனையும் உனக்குத்தரவே நான் வந்தேன்
பழகிப்பார் பாங்குணர்வாய் கணவனே என்று,
புயலெனப் புகுந்து,
என்னை தாங்கி நிற்கின்றாள் இன்றுவரை.
முதுகொடிந்து நான் கிடந்த நாட்களில்..
முடிவல்ல இது உனக்கென்றாள்..
செவிலிபோல என் செல்களினூடே சென்று
பாசமுணர்த்தி பக்குவப்படுத்தியிருக்கிறாள்..
எத்தனை முறை நோகடித்திருக்கிறேன்..
கணக்கிலடங்காச் சண்டைகளிட்டுருக்கிறேன்..
எதையுமே கண்டுகொண்டதில்லை..
எனைச்சீரமைக்கும் பணி மட்டுமே கொண்ட என் சீமாட்டி..
படிப்பில் கெட்டிக்காரி..
பழக்கத்தில் பாந்தக்காரி..
பக்குவத்தில் மூதாட்டி..
பாலாவினடத்தில் படு சுட்டி..
நான் படிக்கப் பணமின்றி பாதியில் விட்டபோதும்..
அதை ஒத்த சில அவமானங்கள் சுற்றி நின்று சுட்டபோதும்..
பயணமது முடியவில்லை தொடர்ந்தெடு உன் படிப்பை என்றவள்..
தலைமை ஏற்றிச் சேர்த்தாள் புதுப்பள்ளியில் மாணவனாய்..
குழந்தை பிறந்திருந்த நேரம்,
அயராது அவளது படிப்பையும் தொடர்ந்து,
வென்று சாதித்தவள் அவள்,
என்று நான் கர்வமாய் சொல்லித்திரிய..
எத்தனை பாடுகளைக்கடந்தாளவள்.. அன்பு!!
என்னவென்பது நான் அவளை
தாயென்பதா? தோழி என்பதா?
உறவென்பதா? இல்லை உணர்வென்பதா?
இல்லை.. அவள் என் மனைவி..
மனைவி என்பவள்..
தேவதையல்ல.. ஒரு வேதபாடசாலை.!!
நான்மறைகளின் நல்லதுகள் மட்டுமே
நமக்கூட்டிப் பாராட்டும் நற்பண்பின் நாயகி..
அப்படியே நடத்திச்செல்கிறாள்
தொடர்கிறேன் குழந்தையாய் நானும்
அடுத்த பிறவியிலும், உனை அடையும் ஆசையெனக்கிருந்தாலும்..
உனக்கு எனைவிடத் தாங்கும் கணவன் வருவானடி என்ற என்னிடம்,
நீயின்றி நான் வாழ்வேன்...
எனைவிட்டால் நீ உயர ஏணியில்லை என்றாள்..
இதைத்தாண்டிய ஒரு மனைவி எனக்கு வாய்க்க வாய்ப்பில்லை..
அவளிடம் தோற்பதற்கு என்றும் நான் வருந்தியதில்லை..
வாழ்க்கைப்புத்தகம் வாங்கித்தந்தது என் உறவுகள் என்றாலும்..
பக்கங்களைச் சீரமைத்து படிக்கப் பழகிக்கொடுத்தவள் என் மனைவி..
இவளின்றியும் வாழ்ந்திருப்பேன்..
இதுபோன்று சீராகவா என்பதே கேள்வி..
சத்தியமாக இல்லை.. இதுவே பதில்.. உண்மையும் கூட!!
இவள் கற்றுக்கொடுத்த வாழ்க்கையை
இனியும் இவளுக்காகவே வாழும்
இன்பக்கனவு நிறைவேற..
ப்ரார்த்தனைகளுடன்..
அர்ச்சனாவின் கணவன்
No comments:
Post a Comment