"டேய், இது என்னான்னு பாரு!! " எனது அம்மா கூப்பிட, மகளுடன் பார்க்கச்சென்றேன். அடித்த புயலில், ஒரு கருங்குருவி, அடிபட்டு எனது பால்கனியில் ஒதுங்கிக்கிடந்தது. அதைச்சுற்றத் துணிதேடி எடுத்து வருவதற்குள், ஒரு கூடையில் அதை வைத்து துணியால் மூடிப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள் என் மனைவி.
"அப்பா, இவன் ஏன்ப்பா நகர மாட்டேங்கறான்" என்று ஏக்கமாகக் கேட்டவளுக்கு, இது குருவிம்மா, அவன் இவன்னு சொல்ற!! என்ற என்னிடம், "அவன் என்னை விடக்குட்டி தானே, அதான் அவன்னு சொன்னேன், இல்லைன்னா அவர்னு சொல்லிருப்பேன் அப்பா" என்றவளைப் பார்த்து வியந்து நின்றேன். "அவன்" சிறிது ஓய்வெடுக்கட்டும் என்று வெதுவெதுப்பான இடத்தில் வைக்கச் செல்வதற்குள், "அப்பா, அவனுக்கு சாப்பாடு வாங்கிட்டுவா" என்ற அடுத்த ஆர்டர். எனது மனைவி, சிறிது அரிசி நொறுக்கித் தண்ணீர் கலந்து ஊட்ட, அதை "அவன்" லபக் லபக்கென்று கபளீகரம் செய்து அயர, அடுத்தவேலை பார்க்கச்சென்றேன்.
மாலை, வீடு முழுதும் கார்த்திகை விளக்கெரிய, "அவன்" இன்னும் தூங்கிக்கிடக்க, "அப்பா, இன்னும் தூங்கறான், பயமாருக்கு, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப்போ "என்று அன்புக்கட்டளையிட்டாள் தங்கமகள். சரியென்று, அவனை கூடையில் வைத்து நகர, கையில் வாங்கிய என் மகள் " டேய் கண்ணா, பயப்படாதே!! சமத்தா அப்பா கூட போயிட்டு வா" என்று அதற்கு அறிவுரை கூறிவிட்டு, என்னிடத்தில் " அப்பா, இஞ்செக்ஷன் வேண்டாம்னு சொல்லு, ரொம்ப குட்டிப்பயலா இருக்கான்" என்று கூறிவிட்டு, அவனுக்கு ஒரு முத்தமும் கொடுத்து அனுப்பிவைத்தாள்!!
கரண்ட்டில்லா இருட்டுச்சாலைகளில் குத்துமதிப்பாக வண்டியோட்டி, ஒருவழியாக அருகிலிருந்த பெட் க்ளினிக்கிற்கு எடுத்துச் சென்று, அங்கே "அவனுக்கு" வேண்டுமென்பதைச் செய்து பணம் கட்ட முனைகயில், வேண்டாம் சார் என்று அன்போடு சிரித்துக்கொண்டே மறுத்த மருத்துவர் சொன்னார் "காலைல சரியாகிடும்!!"
வீட்டிற்கு அழைத்துவந்து, அடுத்த டோஸ் அரிசி கொடுத்து கூண்டில் தூங்க வைத்துவிட்டு நகர, ஓடிவந்த மகள் சொன்னது "அப்பா, இன்னைக்கு இவனை நம்மகூட தூங்க வச்சுக்காலாமா"!!
சமாதானம் செய்து உறங்க வைத்துவிட்டு, வந்து பார்க்கையில், அரிசி தந்த தெம்போ என்னவோ, " அவன்" சிறகு விரித்துக்கிடந்தான். வெளியே எடுத்த எனது கைகள் தாண்ட, முண்டியடித்துக் கிடந்த அவனைக்காண எழுந்தோடி வந்து, "அப்பா, சரியாகிட்டான்ப்பா" எனக் குதூகலித்த என் குழந்தையிடம், கண்டேன் கருணை சேர் கனிவை!! இனியும் கூண்டில் வைத்திருந்தால் பாவம் என்றெண்ணி, பறக்க விட்டுவிடத் துணிந்து எனது அம்மா, மனைவி எல்லோரும் கொஞ்சி பிரியாவிடை கொடுத்து அனுப்ப, பறக்கவிடக் கொண்டு சென்றோம், நானும் என் மகளும்!!
வெளியே வந்து, அருகிலிருந்த ஒரு பூங்காவினுள், அவளையே பறக்கவிடச்சொன்னேன். திடீரென்று, "அப்பா, இவன நாமளே வளக்கலாமா" என்றாள் கண்ணீர்மல்க. "அவனோட அப்பா அம்மா தேடுவாங்கல்ல, விட்டுடுவோம்டா கண்ணு" என்று சொன்னவனிடம், "இவ்வளோ நேரம் அவனத் தேடி யாருமே வரலையேப்பா, ப்ளீஸ் நாம வச்சுப்போமே!!" என்றாள் கண்களை விரித்து. உடைந்தேன் நானும், வெளிக் காண்பித்துக் கொள்ளவில்லை!!
கொஞ்சி, கெஞ்சி ஓருவழியாக அவள் அரைமனதுடன் சம்மதிக்க, அவள் கையில் கொடுத்து பறக்கவிடச் சொன்னேன். என்னிடமே திரும்பக்கொடுத்துவிட்டுச் சொன்னாள், "அப்பா, அவனுக்கு என்னை ரொம்ப பிடிச்சுடுச்சு, நான் விட்டா பறக்கமாட்டான், நீயே விடு அப்போதான் சமத்தா பறந்து அவன் அம்மாகிட்ட போவான்".
குழைந்த அவளிடமிருந்து , அழுத என் கண்களை மறைத்துத் துடைத்துத் தொண்டை கமர "ஒன், டூ, த்ரீ" என்று பறக்கவிட, கைதட்டி மகிழ்ந்து, வந்து கட்டிக்கொண்டாள். அவளிடம் எப்படிச்சொல்வேன், "உயரச் சென்றது அவன் மட்டுமல்ல, தங்கமே உன் மீது நான் கொண்ட மரியாதையும்தான் "என்று!! வருங்காலத்தில், " நான் ஆராத்யா அப்பா" என்று மார்தட்டப்போகும் பல நிகழ்வுகளில், இது நிலைக்கும்!!
திரும்பி வீட்டிற்குள் நுழையும்போது, தீபங்கள் ஒளி வழிந்திருந்த வீடு, இன்னும் பிரகாசமாகத் தெரிந்தது!! அன்பின் சுடர் தாண்டும் அக்கினியின் ஒளியும் உண்டோ!
நிறைவு!!
பெருமையுடன்
- ஆராத்யாவின் அப்பாவான நான்!!
வாவ் செம்ம பப்பூ லவ் யூ
ReplyDeleteதங்கத்துக்கு என் முத்தங்கள் 😘😘❤ செம மாம்ஸ்
ReplyDeleteநீ செய்ததுல உருப்படியான காரியம் இப்படி ஒரு தேவதைய பெத்ததுதான்
ReplyDeleteஅவங்க அம்மா வளர்ப்பு!!
ReplyDelete