Thursday, December 29, 2016

!!சில்லறைக் கனவுகள்!!

நண்பர்கள் கண்டிப்பா படிங்க. வழிபோக்கர்கள் வெட்டியா இருந்தா படிங்க!!

#இதல்லாம்_நடக்கற_காரியமா

இந்த வாரம் திருப்பதிக்கு சென்றிருந்தோம். மொட்டையடித்து திரும்பியதும், என் மகளிடம் எப்படிம்மா இருக்கு என்றதற்கு
"காமெடி பீசு மாதிரி இருக்கப்பா" என்றாள் சிரித்துக்கொண்டே..  எனது மனைவி முறைத்தபடி அப்படி எல்லாம் அப்பாவை சொல்லக்கூடாது என்று அதட்டிவிட்டு நகர்ந்தார். நானும் சிரித்துவிட்டு கடந்துவிட்டேன்.
ஏன் என் மகள் அப்படிச் சொன்னாள். வெளியே பேசிப்பழகிய வார்த்தைதான் என்றாலும். அந்தக் கேள்விக்கு அந்த பதில் எப்படிப் பொருந்தும். யோசித்தேன்.

அதற்கு நானே முழுப் பொறுப்பேற்கிறேன்!!
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், எல்லாராலும் பாராட்டப்படக்கூடிய குணங்களுள் சர்காசமும் ஒன்றாகிப்போனது. தமிழில் வஞ்சப்புகழ்ச்சி என்பதே சர்காசம். ஒரு கேள்வி கேட்கப்பட்டால், அதற்கு மூன்று விதமாக பதில் சொல்லலாம்..  நார்மல் தமிழுக்கு போவோம்.

# ஆமாம், இல்லைன்னு நேரா பதில் சொல்லலாம்
# கேள்வி கேட்டவரை எதிர் கேள்வி கேட்டு மடக்கி பதில் சொல்லலாம்
# ஏன்டா கேட்டோம்னு கேட்டவரு வருத்தப்படறாப்ல, மொத்த லைட்டையும் அவர் பக்கம் திருப்பி விட்டு நக்கலா பதில் சொல்லி ஓடவிடலாம்.

#1

இந்த சர்காசம் இருக்கே சர்காசம்.. அது கிட்டத்தட்ட அந்த மூணாம் பாலினம்.. சாரி.. சாரி மூணாம் வகை. அந்த நேரத்துல சிரிக்க வச்சாலும், நிறைய  காயப்படுத்திடுது. சினிமா அதுக்கு மூலக் காரணம்னாலும், அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிக்கும் நானும் மோசமானவந்தான். ஒரு எஜ்ஜாம்பிள் சொல்லனும்னா, ரீசன்ட்டா , தேன் மிட்டாய் மூலமாக ஒரு நிகழ்வ சொல்றாப்ல நீளமான கட்டுரைய எழுதி ஒரு டோழர படிச்சுப்பாக்க சொன்னேன். படிக்காமலாச்சும் இருந்துருக்கலாம், படிஷ்டு வந்து கேட்டாங்களே ஒரு கேள்வி . "என்னா குரு, தேன்மிட்டாய் கிடைக்கலன்னா இவ்வளா பெரிய கட்டுரை??"
ப்பா.. செம்ம சர்காஷ்டிக் சார்!!
சபாஸ் சபாஸ்னு மனசுக்குள்ளையே அவங்கள வாழ்த்திட்டு நகர்ந்துட்டேன்!! இதை அவங்க படிச்சா தவறா எடுத்துக்க வேணாம். உள்ளத சொன்னேன்.
இன்னொருத்தர்ட்ட ஷேர் செஞ்சப்போ, "இல்ல குரு நீங்க கஷ்டப்பட்டு எழுதறிங்க. எனக்கு அனுப்பவேண்டாம், நான் அதை படிக்கறதேயில்ல. கண்டிப்பா உங்க ப்ளாக் ஒரு நாள் படிக்கனும்னு தோணும். அன்னைக்கு படிக்கறேன் " னு சொன்னாப்ல. சொன்னப்போ கஷ்டமா இருந்துச்சு. ஆனா அதுக்கப்புறம், அவரை நிறையவே பிடிச்சுப்போச்சு. சூப்பர்ல?? மனசுல உள்ளத வெளிப்படையா அழகா சொல்லிடறது. அதான் இயல்பு..!!

சர்காசத்தையும் மடக்கி பதில் சொல்லி, கேட்டவங்கள தெறிக்கவிடறப்போ பெருமையாதான் இருந்துச்சு எனக்கு. இப்போ யோசிச்சா, ஏன்டா அப்படி செய்தோம்னு இருக்கு.  இனி அப்படி செய்ய வேண்டாம்னு தோணுது. சாத்தியக்கூறு உண்டா இல்லையான்னு தெரிஞ்சுக்க ஜோசியக்காரனப் பாக்கனும்.
இனியாவது, கேள்விகளுக்கு நேர்பட பதில் பேசனும்னு ஆசையா இருக்குது. பழைய வெகுளித்தனம் திரும்ப வருமா, டவுட்டுதான்.

#2

2015ல, மீமீ அதிகம் போட்டப்போ, செம கெத்தா இருந்துச்சு. மக்கள் பாத்துட்டு நல்லாருக்குன்னு சொல்லி , சிரிக்கவும் செய்தாங்க. யோசிச்சா,  என் ஃபீலிங்க அதாது எனக்கே உண்டான ப்ரீசியஸ் உணர்வுகள யாரோ ஒருத்தனோட முகத்து மூலமா காமிச்சு மீமீ , ஃபோட்டோ கமண்ட் பதில் சொல்லிருக்கேன். ஒரு டைம்ல கூடப்பழகற ஆட்கள பாத்தா கூட மீமீ டெம்ப்ளேட் போல தெரிய ஆரம்பிச்சுடுச்சு. கான்செப்ட் சிக்கினா கை நமநமன்னும். கருமத்த ஒழிக்கனும்னு ஆசைப்பட்டேன்.. பாட்டுல கவனம் செலுத்தினேன். இப்ப அந்த மீமீ  அடிக்‌ஷன் போய்டுச்சு,  போடறதேயில்ல. ஃபோட்டோ கமண்டுக அப்பொப்பொ. அதையும் விடனும். 50% வாழ்க்கைய மொத்தமா மொபைலுக்கு கொடுக்கறதுன்னு ஆகிடுச்சு. அதையாவது நானாகவே கொடுக்கறேன். எதுக்கு எவன் மூஞ்சியோ வாடகைக்கு எடுத்து நான் கொட்டாவி விடனும்னேன்.

#3

ஜஙகிள் புக் படத்துல பல மிருகங்கள காமிச்சுருப்பாங்க. அதுக எல்லாமே தண்ணி குடிக்க ஒரு இடத்துல கூடும் (peace rock). ஒரே ஒரு ரூல். எந்த மிருகமும், எதையும் துன்புறுத்தக்கூடாது. வந்த வேலைய பாத்துட்டு போயிடனும்னு. முகநூலும் கிட்டத்தட்ட அப்படித்தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபண்டமென்டல் கேரக்டர் . இது புரியாம நான் சிலபேரோட கேரக்டர எனக்குள்ள எடுத்துக்கப் பாத்துருக்கேன். சனியன் நல்லதா இருந்தாலும் பரால்ல.. ஒருத்தரப் பாத்து , அதிகமா சிரிச்சா நம்மள பெரிய மனுஷனா நினைக்கமாட்டாங்கன்னு ஒரு கேவலமான த்தாட் ஒன்னு வந்துடுச்சு. அதாது எலியப்பாத்து எருமமாடு வால் நீளமா இல்லைன்னு வருத்தப்பட்டாப்ல. ச்சை.. எவ்வளோ இடங்கள்ல சிரிப்பு வந்தும் காட்டிக்காம இருந்துருக்கேன். அது கெத்துன்னு நினைச்சேன். கண்டிப்பா இல்ல. அது மொக்கையோ மொக்கைத்தனம். சிரிச்சா என்னா கேடு.  இனி ஜோக்குகள ரசிக்கனும், நிறைய சிரிக்கனும். எவன் எக்கேடு கெட்டா எனக்கென்னங்கறாப்ல சிரிக்கனும். அதும் சிரிக்காத சுத்தற ஆட்கள் கண்ல படறாப்ல விழுந்து விழுந்து சிரிக்கனும்.
மைண்ட ஃப்ரீயா வச்சுக்கனும். இது ஒரு ஆசை.

இதெல்லாமே ஆசைங்கதான். நிறைவேத்தனும்னு நினைக்கறேன். அதுக்கு உங்க எல்லாரோட உதவியும் வேணும். எனக்குன்னு இருக்கற நண்பர்கள் இதைப் படிச்சுருப்பாங்கன்னு நம்பறேன். வாழ்க பாரதம்!!

2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

Saturday, December 24, 2016

!!எனது வேதபாடசாலை!!

இவள் எப்படி என்னுடையவளானாள்.!!

நான்
பிறந்தநாள் முதல் தனியாக வாழப்பழகியதில்லை..
வளர்ந்த பொழுதுகளில் உறவுகளுக்கு ஏங்கியதில்லை..
தளர்ந்து நின்ற தருணங்களில் தாங்கிய உறவுகளோ ஏராளம்..
பலரது மனங்களில் நானும்..
எனது பொழுதுகளில் அவர்களும்..
ஆண்டு நின்ற அற்புத வாழ்வினில்..
புதிதாய் புலர்ந்த உறவானாள் என் மனைவி..

இத்தனை அன்பு சூழ் என்னில்,
வருபவள் தாயாய் மாறத்தேவையிருக்கவில்லை..
தோழியாய் தோள்கொடுக்க அவசியமில்லை..
என்னவாகி நிற்பாள் என்றெண்ணி..
இமைமூடா இரவுகள் ஏராளமுண்டு...
இத்தனை நாள் நீ பழகிய அன்பு இருக்கட்டும்..
இன்னுமிருக்கிறது ஏராளம் நீ ரசிக்க..
அத்தனையும் உனக்குத்தரவே நான் வந்தேன்
பழகிப்பார் பாங்குணர்வாய் கணவனே என்று,
புயலெனப் புகுந்து,
என்னை தாங்கி நிற்கின்றாள் இன்றுவரை.

முதுகொடிந்து நான் கிடந்த நாட்களில்..
முடிவல்ல இது உனக்கென்றாள்..
செவிலிபோல என் செல்களினூடே சென்று
பாசமுணர்த்தி பக்குவப்படுத்தியிருக்கிறாள்..
எத்தனை முறை நோகடித்திருக்கிறேன்..
கணக்கிலடங்காச் சண்டைகளிட்டுருக்கிறேன்..
எதையுமே கண்டுகொண்டதில்லை..
எனைச்சீரமைக்கும் பணி மட்டுமே கொண்ட என் சீமாட்டி..

படிப்பில் கெட்டிக்காரி..
பழக்கத்தில் பாந்தக்காரி..
பக்குவத்தில் மூதாட்டி..
பாலாவினடத்தில் படு சுட்டி..

நான் படிக்கப் பணமின்றி பாதியில் விட்டபோதும்..
அதை ஒத்த சில அவமானங்கள் சுற்றி நின்று சுட்டபோதும்..
பயணமது முடியவில்லை தொடர்ந்தெடு உன் படிப்பை என்றவள்..
தலைமை ஏற்றிச் சேர்த்தாள் புதுப்பள்ளியில் மாணவனாய்..

குழந்தை பிறந்திருந்த நேரம்,
அயராது அவளது படிப்பையும் தொடர்ந்து,
வென்று சாதித்தவள் அவள்,
என்று நான் கர்வமாய் சொல்லித்திரிய..
எத்தனை பாடுகளைக்கடந்தாளவள்.. அன்பு!!

என்னவென்பது நான் அவளை
தாயென்பதா? தோழி என்பதா?
உறவென்பதா? இல்லை உணர்வென்பதா?
இல்லை.. அவள் என் மனைவி..

மனைவி என்பவள்..
தேவதையல்ல.. ஒரு வேதபாடசாலை.!!
நான்மறைகளின் நல்லதுகள் மட்டுமே
நமக்கூட்டிப் பாராட்டும் நற்பண்பின் நாயகி..
அப்படியே நடத்திச்செல்கிறாள்
தொடர்கிறேன் குழந்தையாய் நானும்

அடுத்த பிறவியிலும், உனை அடையும் ஆசையெனக்கிருந்தாலும்..
உனக்கு எனைவிடத் தாங்கும் கணவன் வருவானடி என்ற என்னிடம்,
நீயின்றி நான் வாழ்வேன்...
எனைவிட்டால் நீ உயர ஏணியில்லை என்றாள்..
இதைத்தாண்டிய ஒரு மனைவி எனக்கு வாய்க்க வாய்ப்பில்லை..
அவளிடம் தோற்பதற்கு என்றும் நான் வருந்தியதில்லை..

வாழ்க்கைப்புத்தகம் வாங்கித்தந்தது என் உறவுகள் என்றாலும்..
பக்கங்களைச் சீரமைத்து படிக்கப் பழகிக்கொடுத்தவள் என் மனைவி..
இவளின்றியும் வாழ்ந்திருப்பேன்..
இதுபோன்று சீராகவா என்பதே கேள்வி..
சத்தியமாக இல்லை.. இதுவே பதில்.. உண்மையும் கூட!!

இவள் கற்றுக்கொடுத்த வாழ்க்கையை
இனியும் இவளுக்காகவே வாழும்
இன்பக்கனவு நிறைவேற..

ப்ரார்த்தனைகளுடன்..

அர்ச்சனாவின் கணவன்

Friday, December 23, 2016

!!கசப்பு மிட்டாய்!!

தினமும் ஆபீஸ் பஸ்ஸிலிருந்து இறங்கியதும், அருகாமையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் ஒரு தேன் மிட்டாய் வாங்கிச் சாப்பிடும் பழக்கம் எனக்குண்டு. ஒரு ரூபாய்க்கு ஒரு மிட்டாய். அதுவே பழக்கமாகிப்போனது. என்னைக் கண்டதும், இந்தாங்கண்ணா என்று மிட்டாயை எடுத்து நீட்டும் அந்தச்சிறுமி எனக்கு மிகவும் பரிச்சயமாகிப் போயிருந்தாள். சிறிய கடை, ஒருவர் உட்காரும் அளவு மட்டுமே இடமுள்ள ஒரு பெட்டிக்கடை.

ஐநூறு ஆயிரங்கள் செல்லாது என்ற அறிவிப்பின்போது, என்னிடந்தான் அதிகப் பணமில்லையே, இது என்னை எந்த விதத்தில் பாதித்து விடப்போகிறதென்ற தைரியம், எனக்கு அதிகமாக இருந்தது. வீட்டு வேலையாட்களுக்கும், குழந்தையை ஏற்றிச் செல்லும் வேன் டிரைவருக்கும், அத்தியாவசியப் பொருட்களுக்கும் , தேவைகளுக்கும் மட்டுமே செக் மூலமாக பணம் எடுத்து வந்து வைப்பேன். (உதவிக்கு வீட்டில் உறவுகள் இருந்தபடியால் க்யூ பயமில்லை).

பர்சில் சில நூறுகள் மட்டுமே வைத்துக்கொண்டு சுத்தி வந்த நேரத்தில், திடீரென்று ஒருநாள் யோசித்தேன். இப்பொழுது நான் தேன்மிட்டாய் சாப்பிட்டு ஒரு மாதம் ஆகியிருந்தது. நான் ஏன் அதைச் சாப்பிடவில்லை?? காசிருக்கிறது.. நேரமிருக்கிறது, ஆசையும் இருக்கிறது. பிறகு ஏன் வாங்கவில்லை? ஏனென்றால், என்னிடமிருந்து போகும் ஒவ்வோரு ரூபாய்க்கும் கணக்கு போட ஆரம்பித்திருந்தேன். மிட்டாய் சாப்பிட எண்ணும்போதெல்லாம், அது தேனே அல்ல, சக்கரை நீர். உடலுக்குக் கேடு. சக்கரை வியாதி வரும். வேண்டாமே அந்தத் தேவையில்லாத செலவு, என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டிருந்திருக்கிறேன். சில நேரங்களில், ஆசை இருந்தும் சில்லறை இல்லாத காரணத்தினாலும். இத்தனை நாள் வராத எண்ணம், இப்பொழுது ஏன். முதல் சம்பளம் முதல் இன்று வரை, நான் கணக்குப் பார்த்து செலவழித்ததேயில்லை. இப்பொழுது ஆரம்பித்திருந்தேன். என்னையும் அறியாமல். மகிழ்ச்சியாக இருந்தது. மிச்சப்படுத்த ஆரம்பித்திருக்கிறேனே. அதேநேரம், எனது அத்தியாவசியங்கள் ஒன்றுக்கும் குறைவில்லை என்பதும் உண்மை.

இன்று அந்த மிட்டாய் சாப்பிட்டாக வேண்டும் என்ற திடீர் தோன்றலின் காரணமாக அந்தக்கடைக்கு சென்றேன். கடை மூடப்பட்டிருந்தது. கேட்டதற்கு, பக்கத்துக்கடை அண்ணன் சொன்னார், "போனவாரந்தாங்க மூடினாங்க, வரவுல பிரச்சனையாம்"
"சரிண்ணா, பாவம் ஒருகடைதான வச்சுருந்தாங்க அதையும் மூடிட்டு எப்படின்னே பொழப்பு" என்று கேட்டதற்கு சிரித்துவிட்டு "என்னாங்க பண்றது, யாரு கைலயும் காசில்ல" பீடியை இழுக்க ஆரம்பித்துவிட்டார்.
யோசித்துப் பார்த்தால் நானும் ஒரு காரணமே. அத்தியாவசியங்கள் மட்டுமே போதும் என்றிருந்தால், எத்தனை பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதற்கு யார் காரணம்?

அரசாங்கமா? நானா? என்னைப் பொறுத்தவரையில் நானே. ஒரு ரூபாய் தேன் மிட்டாய் தின்பதால் என் குடி மூழ்கி விடுமா என்ன? கண்டிப்பாக இல்லை. எனக்கு அது மிட்டாய். அவர்களுக்கு கடை வரவில் ஒரு ரூபாய் குறைகிறது. என்னைப்போல நூறு பேர் வெவ்வேறு பழக்கங்களை நிறுத்தியிருந்தால், நூறு ரூபாய். அந்தக்குட்டிக் கடைக்கு, நூறு ரூபாய் பெரிய விஷயம்.

ஏடிஎம் க்யூ, பேங்க் நெரிசல், புழக்கம், காரணங்கள் நூறு சொல்லலாம். உற்று யோசித்தால், உயிர்வாழ உணவும், நீரும் பிராண வாயிவும் போதும் என்று நிறுத்தியிருக்கிறோமா என்ன!! இந்த டீமானிட்டைசேஷன் நல்லதா தீயதா என்று ஆராயும் அளவு நான் புத்திசாலியில்லை. என்னைப்பொறுத்த வரை, அரசை குறைகூறிக்கொண்டு ஆடம்பர வாழ்வைக் குறைக்கிறேன் என்ற பெயரில், பணப்புழக்கத்தைக் குறைத்து, பல ஏழை வியாபாரிகள் ஒரு வேளைச் சோற்றை கேள்விக்குறியாக்கிய கொடியவர்களில் அரசு மட்டுமல்ல, நானும் ஒருவனானேன்.

இன்று கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு கேஷ்லெஸ் சூப்பர் மார்க்கெட்டில் , கார்டை ஸ்வைப்பி, ஓரு பாக்கெட் தேன்மிட்டாய் வாங்கி வந்து வீட்டில் ஒன்றினை எடுத்துச் சுவைத்துப்பார்த்தேன். அந்தச்சிறுமி ஞாபகத்தில்

தேன் கசந்தது!!

குருப்ரம்மா!!

Wednesday, December 21, 2016

!!சர்ப்ரைஸ் ச.நா - நில்லாயோ- பைரவா!!

ஏற்கனவே சொன்னாப்ல ச.நா ஒரு கிட்டார் மேனியாக்!! நான் பாத்த ம்யூசிக் டைரக்டர்கள்ல, கிட்டார இப்படி அடிச்சுக் கதறவிட்டது ஒரு சிலபேர்தாங்க. அதில் இவரும் ஒருத்தர்.

ஆனா இந்த பாட்டு ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜ்.. மெலடிங்கறாதலயோ என்னவோ, அவர் கைல எடுத்துருக்கறது வயலின. வயலினோட உயிர் இழையாடுது பாட்டு பூராமே.. எடுத்த உடனே வர்ற அந்த ஓப்பனிங் ஸ்ட்ரீம் வயலின், பேஸ் வயலின் ரெண்டுமே கேட்டவுடனே ஒட்டிக்கிச்சு.. அதை தொடந்து பியானோவும், ஒரு ஈன ஸ்வர தேஞ்ச விசிலும் நல்ல காம்போ.. அதும் ஒரு ச்சில்லிங் எஃபெக்ட் பேக்ரவுண்டோட.. நைஷ்

"சிறு பெண்ணாகி முன்னே போகும்" வரை ப்ளைனா விட்டுட்டு,
"பதறும் உடலும்" எடுக்கறப்போலருந்து மைல்டா ஒரு கிட்டார் ஸ்ட்ரோக்!!  அந்த இடத்துக்கு அது அழகா சீட்டாகி இருக்கு!!

"செல்லப்பூவே" பின்னாடி அடிஷனல் பேக்கேஜா வர்ற குட்டி பேங்கோஸ் (ட்ரம்பேட்) பிட்டு, கீஸும் உன்னிப்பா ஹெட்ஃபோன்ல கேட்டா மட்டுமே தெளிவ்வா கேக்குது! அட்டகாஷ்!

பல்லவி முடியறப்போ, ஒரு குட்டி ப்ரேக் விட்டுட்டு "நில்லாயோ" அழகா எடுக்கறாப்ல ஹரிசரண். ரா மெலடிக்கு ஏத்த குரல். பதறலும் சிதறலும் இல்லாத கன்வெர்ஜ்டு வாய்ஸ் பேட்டர்ன். அதுக்கு ஜீவன் சேக்கறாப்ல ஒரு கோரஸ் "தனத்தன" + பேஸ் கிட்டார், ட்ராவல், அழகான பல்லவிக்கு அடித்தளம் அமைச்சுத்தந்துருது..

இன்டர்லூடு பூராமே விசில், வயலின் ரெண்டையும் மிகஸ் பண்ணி செமயா க்ரியேட் செய்துருக்காரு.. Old wine in new bottle. ஆனா போதை கன்பார்ம்!!

முதல்சரணம் ப்ரேக்கில்லாம எடுக்கப்படறதும் ஒரு தனி அழக கூட்டுது. "சிலிக்கான் சிலையோ" வரி வரும்போது பின்னாடி அதென்ன உடுக்கையா? தட்டிட்டுப்போகுது மைண்ட. "உன் பேரென்ன" ல ஹரி தர்ற அணுக்கம் "ஏ" க்ளாஸ். குரலும் ஐஸ் க்ரீம்.. பின்னாடி குட்டி ஜலதரங்க குவியல், எதோ முத்துமணிகள் மொத்தமா கீழ விழறாப்ல ஒரு எழுதமுடியாத தோணியா இசையத் தூவுது. அந்த ஃபீமேல் கோரஸ் "ரூ.. ரூ.." கடைசியா..ஆஹா (ஹார்ட்டின் சுமைலி)

செகண்ட் சரணத்துல பெரிய சேஞ்ச் இல்லைன்னாலும்
கிட்டார் ஸ்ட்ரோக்குகள் டைமிங் செம்ம.. முக்கியமா அந்த " செம்பொன் சிலையோ" இடத்துலருந்து!! கடைசியா "உன்னாலே ஏஏஏஏஏ" இழுவை + ஆசம் தன்னத்தானா பிட், அடிப்பொலி ஹரி!! அதுலையே விழுந்துட்டேன். அதைத்தொடர்ந்து வர்ற அந்த சோலோ ஃபீமேல் அப்புறம் மேல் ஹம்மிங் ஃபினிஷும் பிரமாதமான காம்போ. நல்ல க்ளோசிங் இந்த அருமையான பாடலுக்கு!!

"நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்"
வகையறாதான் இதுவும். வர்ணிப்புக்கு வர்ணம் கூட்டலாமே தவிற வெள்ளையடிஷ்டு புதுசா மாத்த முடியாது!! ஆனா சிறப்பா மெருகேத்திருக்காங்க.

பாட்டு தூள் ஆஹா ஓஹோன்னு சொல்லணும்னா முடியலை. ஏன்னா இது அப்படிப்பட்ட பாட்டும் இல்லை. ரசிச்சுக்கேட்டு மயங்க வேண்டிய பாட்டு வகையறா. அதைத்தான் செஞ்சுருக்கேன். மயக்கிருக்காங்க ஹரியும் ச.நாவும்!!
விஜய் சாரோட அழகான எக்ஸ்ப்ரஷன்சால இந்தப்பாட்ட மேலும் அழகாக்குவார்னு நம்பறேன்.

மேலும் அலசுவோம்
#குருப்ரம்மா

Tuesday, December 20, 2016

!!கிட்டார் தளபதி- பைரவா!!

இன்னைய தேதிக்கு ட்டாக் ஆஃப் தி டவுன்!! பைரவா பாட்டுக..

யமஹா மோட்டார் சைக்கிள் உறுமலோட ஆரம்பிக்கற அந்த ரேசி ஓப்பனிங்!!  ரசிகர்கள் நரம்புகளுக்குள்ள சூடேத்த!! கிட்டார் லீடும், பேஸ் கிட்டாரோட சப்போர்ட்டும் அதைத்தொடர்ந்து வர்ற அந்த "பேஞ்சோ" "சிம்போலா" இன்ஸ்ட்ருமென்ட்ஸ்.. ரெண்டுமே அந்த பாட்டை லீட் பண்ணத்தொடங்குது. இந்த இசைக்கருவி, கெய்ஷா வகையறா. அது சொன்னா நாளாகும். மூசிக்குக்கு போவோம்!! (இல்ல இதையும் கிட்டார்லயே முடிஷ்டாரோ தெரில) இந்த இன்ஸ்ட்ருமென்டுக தமிழுக்கு புதுசுன்னு சொல்லமாட்டேன். ஏற்கனவே ஏழாம் அறிவுல ஹேரிசும் இன்னும் சில பேரும் தொட்டாச்சு. ஆனா ஃபீல் வேற. அது நெகிழ்ச்சி..

இது பட்டாசு!!

சந்தோஷுக்குன்னே உண்டான ஒரு யுனீக்நெஸ் கலந்த தில்லு, மாஸ் ஹீரோக்களோட இன்ட்ரோல சம்மந்தமில்லாத இன்ஸ்ட்ருமென்ட்ஸ எடுத்துட்டு வந்து விளாசுவாப்ல. உதாரணம், கபாலி இன்ட்ரோல வர அந்த டார்க் லைன் , பேஸ் மற்றும் செல்டிக் கிட்டார். எக்ஸ்பெரிமெண்டல் ஆர்கெஸ்ட்ரேஷன் !! தில்லு வேணும் இதுக்கு. இது எந்த ஜானர் ம்யூசிக்னு யோசிக்க வைக்கற (குழப்பற) ஒரு இசை அணுகுமுறை. அதாது சண்டையா, ஓப்பனிங்கா, இல்ல ரிவன்ஜான்னு குழப்பும்..பைரவால அதே போல வித்தியாசமான தீம் இளையதளபதிக்கு. கண்டிப்பா மாஸ்.. நோ டவுட்.அதும் அருண்ராஜா காமராஜ்.. கேக்கனுமா


" வர்லாம் வர்லாம் வா, வர்லாம் வா, பைரவா"

ஷேர்லாக் ஹோல்ம்ஸ் , லாஸ்ட் ஆஃப் தி மோஹிக்கன்ஸ் போன்ற படங்கள்ல, இந்த இசைக்கருவிகள வச்சு எப்படி விறுவிறுப்பக்கூட்டறதுன்னு சொல்லிக்கொடுத்துருக்காங்க. அதை அப்படியே காதுல வாங்கி செம்மயா செஞ்சுருக்கார் சந்தோஷ்!! இவரு கிட்டார் பிரியர் போல. எல்லா வகையான கிட்டார்களையும் வெளாசித் நள்றாப்ல.. முக்கியமா பேஸ்!! செம்ம அதிர்வு காதுக்குள்ள பாட்டு முடிஞ்ச அப்புறமும்.

ஆனா

செக்கண்ட் இன்டர்லூட்ல ப்யூர் கிட்டார்.. அதாது எலக்ன்ரோப்ளேட் செய்யபடாத கிட்டார்!! அதும் செம்ம. புயலுக்கு நடுவ பீச்சு காத்து போல. சட்டுன்னு அடுத்த வரியே மாத்திடுது .. குறுக்க குறுக்க மோட்டார் பைக் சவுண்டு வேற ( வர்லாம் வா வரும்போதெல்லாம் ஹைலைட்பண்ணறாப்ல ஒரு சின்ன க்ளாப் அல்லது கோரஸ் செஷன், எதுன்னு தெர்ல)!! ரசிகர்களுக்கு வேட்டைதான்.

இது நல்லா ரசிச்சு கேக்கவேண்டிய இசை இறைச்சல்!! இன்னும் லிரிக்ஸ் கேக்கலை. கேட்டுட்டு வந்துடறேன்.

மேலும் அலசுவோம்,

#குருப்ரம்மா

!!வயலினும் வசியமும்!!

 சக ராஜரசிகர்களுக்கான பதிவு, "சக ராஜரசிகர்கள்" புரிஞ்சுருக்கும்னு நினைக்கறேன்.



அவர் பாட்டை எடுத்து அதோட டீட்டெய்லிங் பேசினோம்னா லோடு லோடா கொட்டலாம்யா.. ராஜா சார்லாம், ஜிகா பைட் க்லௌவ்டு டெக்ஸ்ட்டிங் ரேஞ்ச் தாண்டிப்போற அளவு சரக்கிருக்கற பொக்கிஷக் கிடங்கு. அவரைப் பத்தி நானென்னத்த சொல்ல, உலகத்துக்கே தெரியுமே..
அவரோட ஆர்க்கெஸ்ட்ரேசன் யுனீக் . எதையும் இசையாக்குவாப்ல. அவர் தொட்ட எல்லாமே துலங்கும்னாலும், அவரோட தெய்வலெவல் எதுன்னு என்னைக்கேட்டா வயலின்னு சொல்லுவேன். வயலின தமிழ்நாட்ல, ஏன் இந்தியாவுலையே ராசய்யா அளவு பயன் படுத்தினது யார்னு யோசிச்சு தலையத்தூக்கிப்பாத்தா, வானந்தான் தெரியுது. வேற ஆரும் தெரியலை.
வயலின, மெயின் ஸ்டேஜ்ல ஏத்தி அவர் சொழட்டி அடிச்ச
How to name it, Madras messiah, அப்புறம் ஆயிரமாயிரம் பாடல்கள் , பின்னணி இசைக்கோர்வைகள்(கல்யாண மாலை, காலம்காலமாக வாழும், நானொரு சிந்து வகையறா) எல்லாம் உலகத்தரம்னு வேர்ல்டுக்கே தெரியும். யார்கண்டா, ஏலியர்கள் கூட இன்னேரம் அதுக்கு மயங்கிக் கெடக்கலாம்.
அப்பேர்ப்பட்ட வயலின, அடக்கி வாசிச்சும் அடிப்பொலியாக்கிருக்காரு ஏகப்பட்ட படங்கள்ல. என்னவோ, அந்த இசைக்கருவி, ஒரு விதமான நெகிழ்ச்சிய ஊள்ளூர உண்டாக்கத் தவறுவதேயில்ல.
கேட்டதுக்காக இரண்டு தங்கங்களப் பத்திப்பாப்போம்..

"ஒரு ஜீவன் அழைத்தது"..

"ரெக்கார்டு தேஞ்சு, கேசட்டு தேஞ்சு, சிடி தேஞ்சு, இப்ப டிவிடியும் தேயற அளவு கேட்டுஞ் சலிக்கல!!
தொடக்கத்துல மூசிக் இல்லாம
"ஒரு ஜீவன் அழைத்தது" ன்னு பாடறாங்க. வாவ்னு நிமிர்ந்து குந்தறோம்.!!
பல்லவி முடியறப்போ,
"இனி எனக்காக அழவேண்டாம்,
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்னு"
தபேலா கீபோர்டு எல்லாத்தையும் துணைக்கு வச்சுக்கிட்டு அந்த அம்மாவுக்கு ஆர்டர் போடறாப்ல, .. எல்லாமே நேர்பேச்சுபோலவே பேசிட்டு,
ஆனா பாருங்க.. இந்த
"உன்னையே எண்ணியே வாழ்கிறேன்" தன்னிலை லவ் விளக்கத்துக்கு மட்டும் நைசா வயலின கூட்டியாந்து நலங்கு வைக்கறாரு .. வயலினோட அந்த சப்போர்ட்ல , வரிகளும் சேர்ந்து கப்புன்னு நெஞ்சே நிறைஞ்சாப்ல ஆகிடும். அப்புறமென்ன லவ்வுதான். ஹீரோக்கு ஹீரோயின் மேலயும், நமக்கு ராஜா மேலயும். பவர் ஆஃப் ஸ்ட்ரிங்ஸ். கேட்டுப்பாருங்க.. அந்த இடத்த உன்னிப்பா கேட்டுப்பாருங்க.
அந்த ஃபீல உள்ள இழுத்து கேட்டுப்பாருங்க. மெய்யாலுமே மெய்சிலிர்க்கும்!!


===================================================================================


அடுத்து "சின்னத்தாயவள்" 
(பாட்டைக் ஹெட்ஃபோனில் கேட்டுட்டே படிச்சா நலம்)
மனசு வெறுத்த சமயங்கள்ல இந்த பாட்டு எங்கையாச்சும் பாடிச்சுன்னா அந்த தெசப்பக்கமே போகாம வேற பக்கமா ஓடிருவேன். சும்மா இல்லைங்க, பவர்ஃபுல் சோகம் அது. புத்திர சோகதாரிகள், குழந்தையில்லாதவங்க இதை கேக்கவே யோசிப்பாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன். அய்யோ, கதறவச்சுருப்பாரு நம்ம மொட்டராசா. அந்தப்பாட்டோட பலமே முழுக்க முழுக்க வயலினும் புல்லாங்குழலும். ஆனா ரொம்பத் தெளிவ்வா ஒரு விசயம் யோசிச்சு செஞ்சுருப்பாரு..
பொதுவா, செம்ம காண்டாகி, வெறுத்துப்போன சோகத்தோட, அழுகைய வெளியவிடாம சேத்து சேத்து வச்சுட்டுருப்போம். நம்ம அம்மாவோ , இல்ல நம்மளச் சேந்தவங்களோ வந்து என்னடா ராசான்னு கேக்கும்போதுதான் அழுகை பொத்துக்கிட்டு வெடிச்சுக்கிளம்பும்.. அதை தெளிவ்வா கையாண்டுருப்பாரு நம்ம மேஸ்ட்ரோ!!
சரணத்துல,
"தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா"

இதல்லாம் அந்த குழந்தையப் பாக்காமலே.. இது கற்பனைதானே, அது மேலோட்டமா கடந்து போகட்டும்னு லைட்டா மூசிக்கோட பொழச்சுப்போங்கடான்னு விட்டுருப்பாப்ல .
இதுலலல்லாம் உசாரா வயலின இழுத்துருக்கவே மாட்டாரு.. ஏன்னா வயலின உள்ள கொண்டாந்தா அங்கேயே உடைஞ்சுடுவோம்னு அவருக்குத் தெரியும்.. விசும்பவிட்டு வேடிக்க பாப்பாரு.. கேடி!! (செல்லமாக)
" உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட"
தன்னோட கற்பனைங்கறது ஆசையா ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகுதுங்கறப்போ வெயிட்டேஜ் தரணும்ல..இங்க லைட்டா மோனோ வயலின இழுத்தாந்து , தம்பி அழவைக்கப்போறேன் அலர்ட்டாகிக்கன்னு எச்சரிச்சுருப்பாப்ல..
"விழிமூடாதோ......." ன்னு அந்த ஆசை ஏக்கமாகும்போது, ஜானகியம்மா குரலும் தழுதழுக்கும், அப்போஎடுப்பாப்ல பாருங்க வயலின் கோர்வைய, பொட்டுல அடிச்சாப்ல கண்ல தண்ணி கொட்டும், தொண்டை அடைக்கும். யோவ் பேமானி அழவச்சுட்டியேய்யான்னு திட்டத்தோணும். ஆழ்மனசுல உள்ள அத்தனை கடுப்பும் அந்த அழுகைல கரைஞ்சுடும். கலங்கினா , கண்ல உள்ள அழுக்கல்லாம் கரைஞ்சுபோறாப்ல, உள்ளத்தோட கடுப்பும் கலைஞ்சுபோயி இறுக்கமெல்லாம் தளர்ந்து ப்ரைட்டாகி கண்ணத்தொடச்சுட்டு உக்காரும்போது ராஜாவ நினைச்சு, "ச்சீ போய்யா, நீல்லாம் மனுசனேயில்ல" ன்னு ஒரு சலிப்புச்சிரிப்பு கண்டிப்பா வரும்.
வரவைப்பாரு.. ராஜா!!
அழனும்னா லிங்க்க அமுக்கவும்!!

வயலின வச்சே இவ்வளா வித்த ஒரே பாட்டுல.. அப்போ இன்னும் எத்தனையெத்தன .. எய்யாடீ.. இந்தாளு எமகாதகன்யா!!
மேல பகிரந்துட்ட விசயங்கள்லாம் எனக்கு மூசிக் தெரியும்னு காமிச்சுக்க செய்யலை. அறியாமைதான் பேரின்பம்ங்கறது இசைக்கும் பொருந்தும் .ராசய்யா போல டீச்சர் கிடைச்சா, எனக்கு எதுவுமே தெரியாதுங்கன்னு பெஞ்ச்மேல நின்னே திரும்பத்திரும்ப கேட்டு கேட்டு வாங்கி ஜோபில போட்டுக்கறதவிடவாங்க ஓரு ஆனந்தம் கிடைக்கப்போகுது.
"ஞானப்பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்.. ஐயனே என் ஐயனே"

மேலும் அலசுவோம்.

Thursday, December 15, 2016

!!விச்சுவின் விஸ்வரூபம்!!

தமிழின் தலைசிறந்த ஆர்கெஸ்ட்ரேஷன்ல எதாச்சும் ஒன்ன டக்குன்னு சொல்லுப்பான்னு உங்கள்ட்ட கேட்டாங்கன்னா, தயங்காம சொல்லுங்க இந்தப்பாட்ட.. இப்போ வளந்துட்டுருக்கற எத்தனையோ இசைக்கலைஞர்களுக்கு, ஒரு போதிமரமா அமைஞ்ச அவுட்ஸ்டான்டிங் ஆர்க்கெஸ்ட்ரேஷன் உள்ள பாட்டுங்க இது!

"பார்த்த ஞாபகம் இல்லையோ"

கிட்டாரும் ப்யானோவும் வயலினும் , பேஸ் வயலினும் கதற ஆரம்பிக்கற அந்த ப்ரீலூட், பாட்டோட மொத்த இசைக்கான ஒத்திகை போல. ஆனா, எதுமே எஃபெக்ஸ் இல்லை, லைவ் ஆர்கெஸ்ட்ரேஷன்னு நினைச்சாலே மூச்சு வாங்குது. இந்த கதகளி முடிஞ்சதும், ஒரு ஓப்பனிங்குக்காக கொடுக்கற அந்த பேங்கோஸ் அப்போ,அந்தாளு  ரசனைக்காரன்யான்னு MSV ஐயாவ நினைச்சு உச்சுக்கொட்ட வைக்கற மொமண்ட். நிஜந்தாங்க, அரசு மட்டுமல்ல, வரலாறே பெருமைப்படக்கூடய  கலைஞர்கள் MSV சாரும் ராம்மூர்த்தி சாரும். சேந்தே இருந்துருக்கலாம், விதி!!

அப்படி ஒரு அதகள இசை தந்த ஓப்பனிங்க உடைக்கனும், ஸ்ட்ரைட்டா சாங்குக்கு போனா ஒரு ப்ரேக்கிங் ஃபீல் வந்துடும்னு, ஃபவுண்டேஷனுக்காக எடுப்பாங்க பாருங்க சுசிலாம்மா ஒரு செட்யூசிவ் ஹம்மிங்,
"ஆஹா அஹ அஹ ஹா"..
என்னா ஒரு தெளிவு. வழுக்கற குரல், பல்லாயிரக்கணக்கான பேர வழுக்கி விழ வச்ச குரல். சுசிலாம்மா.. தெய்வமே!!

பார்த்த ஞாபகம் இல்லையோ,
பருவ நாடகம் தொல்லையோ"

அனுக்கங்களே இல்லாத  ஸ்ட்ரைட் பிட்ச்சுல ஆரமிக்கும்போதே, இது எந்த ஜெனரேஷன் பாட்டுன்னு கேக்கறவங்கள யோசிக்க வச்சுடும்!! காலாகாலத்துக்கும் இந்தப்பாட்டு புதுசா நிக்கும்யான்னு எடுத்தவுடனே சொல்ல வைக்கிற பாட்டு இது. "வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோல" ஸ்கேல இறக்காம குரலத்தளர்த்தி இவங்க செய்யற மேஜிக், இப்போ பலபேருட்ட பாக்க முடியறதில்ல. அதுபோதாதுன்னு ஒரு கோரஸ் கொண்டாந்து இடைல சேர்த்து, பாட்டுக்கு இன்னும் வெயிட்ட ஏத்திருக்காங்க. வைரத்துக்கு பட்டை தீட்டறாப்ல. ஷார்ப்பு !!

அடுத்து ஒரு ட்ரம்பட் கலந்த ட்ரம்ஸ், அக்கார்டின், பேங்கோஸ் வெஸ்டர்னைசேஷன்!! ஒரு நீள வயலின் கம் கீபோர்ட்ல முடிச்சு.. ப்பா.. வயலின்ல என்னதான் வசியம் இருக்குதோ!! இழுத்து உள்ள போட்டு, டோர சாத்தி, கேளுடா அடுத்த ஸ்டான்சாவ!! ன்னு கூப்டு விட்டுப்போகுது.

நீலம்ங்கற கலரை, ஜாஸ் ம்யூசிக்ல உணரவச்சு, அந்த நீல நதிக்கரைல இருந்து தொபுக்கடீர்னு தண்ணீல விழுந்த ஒரு ஃபீல் கொடுத்து, நம்மள இசைல நனையவிட்டுருக்காரு அந்த மனுஷன் . இத்தனை ஆயிரம் முறை கேட்டும் இந்தப்பாட்டு சலிக்கலைன்னா, அதுக்கு காரணமும் அந்த பாட்டுக்குள்ள நம்ம உணர்வுகளக் கோர்த்துவிடற அந்தப் பாங்குதான்!!

இந்த பாய்ஸ்லாம் புதுசா பாக்கற கேர்ள்ஸ்ட்ட சில நேரம் சொல்வாங்கல்ல, உங்களை இதுக்குமுன்னே எங்கேயோ பாத்த மாதிரி இருக்குன்னு, அதுக்கேத்தாப்ல அந்தம்மா ஹீரோவ பாத்த ஒரு விஷயத்த தன்னோட காதல் கலந்த கற்பனைல வர்ணிச்சு,
நீல நதிக்கரையோரம் சந்திச்சோமே, பாதிலையே அத்துவிட்டுப்போனியே, மீண்டும் வந்துருக்கேன் வா பழகலாம்னு மீனிங் வர்றாப்ல இருக்குல்ல?? கவிஞர் அடிபின்னிருக்காரு இங்கே. இசைய டாமினேட் செய்து காமிச்சுருப்பார்!! ஒருத்தோருக்கொருத்தர் சளைச்சவங்களா என்ன.. விஸ்வரூபிகள். டிக்‌ஷனரிகள்!!

"அந்த நீலந்திக்கரை ஓரம்"
(கோரஸ் ஆரம்பம்)
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகிவந்தோம் சிலகாலம்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ!!

இன்டர்லூட் ஆரம்பம் . அடிச்சு ஓங்கற கீ மற்றும் கிட்டார் பீசு!! குட்டி ஜலதரங்கம்.. அப்படியே  லைட்டா கிண்டிவிட்டுப்போகுது!! சட்டுன்னு வயலினப்போட்டு தேச்சு அடுத்த வரிக்கு அடித்தளம் கொடுத்து!!

இந்த இரவைக்கேளது சொல்லும்
அந்த நிலவைக்கேளது சொல்லும்..

ஒரு கேப்விட்டு , ஃப்ளூட் மற்றும் கோரஸ் உள்ள.. ஆழ்மனச கிளறிவிடறாப்ல!! விசில், கோரஸ் இதுகளுக்குதான் எவ்வளவு சக்தி பாருங்க. ரெண்டையுமே MSV சார் ரொம்ப நம்பினார். கடைசிவர கைவிடல. அந்த கோரஸ் கேட்டுப்பாருங்க. புரியும் ஏன் இவ்வளோ முக்கறேன்னு!!ஓப்ரால்லாம் பிச்சை வாங்கனும்..
இது கொஞ்சநாளு என் ரிங்டோனா கூட இருந்துச்சு!! மறக்கவே முடியாது. Miss you MSV , Ramamoorthy ஐயா :-(

" அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் என்ற நினைவை"

என்னைத்தாண்டி போனதும் மறந்துட்ட, இன்னிக்கு புதுசா பிறந்து மீண்டும் வந்துருக்கேன்!! இனி தொடர்வேன்ங்கற நினைப்ப எப்போமே வச்சுக்கோன்னு சொல்லி முடிக்கறார் கவிஞர். காதலை இப்படிக்கூட சொல்லலாம்ல.  படத்தை உத்து கவனிச்சிங்கன்னா, சிவாஜி சார் சுருட்டுப் புகைய உள்ளே இழுத்துப்பார், ஆனா வெளிய விடவே மாட்டார். அதுபோலதான் எனக்கும், இந்த பாட்டு மைண்ட்ல ஏறிட்டு இறங்க மறுக்குது. இனியொரு படைப்பு இதைப்போலே சாத்தியமாங்கற கேள்வி, திரும்பத்திரும்ப எழுந்துட்டே இருக்கு. என்னான்னு தெரியலை. அவ்வளோ மோகம் இந்தப்பாட்டு மேல. ஓ உலக இசை ரசிகர்களே!! எங்க கிட்டேயும் மாஸ்டர் பீசுக ஏகப்பட்டது கொட்டிக்கிடக்கு. தேடத்தான் நேரமில்லை. இந்த ஜெனரேஷன் பசங்களும் இதைக்கேட்டா, கண்டிப்பா ரசிப்பாங்க. ரசிக்கறதென்ன, அனுபவிப்பாங்க. லவ் யூ  வி.ரா ட்யூவோ!!

இன்னொரு விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்ணதாசன்  வேணும். சுசிலாம்மா மீண்டும் இதுபோலப் பாடணும். இப்படி கனவு கண்டுட்டே இருக்கறதும் ஒரு சுகந்தான்ல. லிஜண்ட்ஸ்!! ஏற்கனவே கேட்டப் பாட்டுதானேன்னு விட்டுடாதிங்க.. புதுசா கேக்கறாப்ல இருக்கும், கேளுங்க!!

பாடலைக்கேக்க கீழ உள்ள லிங்க்க அமுக்குங்க. பிடிச்சா பகிர்ந்துக்கங்க.

https://m.youtube.com/watch?v=xNInBEF8E7M

மேலும் அலசுவோம்
#குருப்ரம்மா