Sunday, March 26, 2017

!!வல்லமை தாராயோ!!

!!பாவியாகிய நான்!!

இன்று, என் மகளுக்காக முதன்முதலில் வாங்கிய சைக்கிள் , வீட்டின் இடத்தை அடைத்துக்கொண்டு நின்றதால் OLX மூலமாக விற்றேன். வாங்கியவர், அதனை எடுத்துக்கொண்டு சென்றபோது, ஏதோ ஒரு இனம் புரியாத வருத்தம். அவர் காம்பவுண்ட் தாண்டும் வரை பார்த்துக்கொண்டே நின்றேன்!!

ஆன்லைனில் வாங்கி, முதன்முதலில் அதனை என் கைப்பட என் மகளுடன் உட்கார்ந்து அசெம்பிள் செய்த நாட்கள் கண்முன் வந்து போயின. அதனை ஆவலுடன் அவள் எடுத்து ஓட்டிய கணங்கள் நிழலாடியது. என் வீடு மாளிகையாயிருந்தால் , அதனை ஒரு ஓரத்தில் கடைசிவரை நிற்கவைத்திருக்கலாம் என்றே தோன்றியது.

என்னதான் புதிய, பெரிய ப்ராண்ட்டட் சைக்கிள் வாங்கியிருந்தாலும், முதல் காதல் போன்றதொரு விஷயமாயிற்றே. கேவலம், நானும் மனிதனே. செண்டிமென்ட் மரபுகளுக்குள் நானும் அடக்கமே!! விற்றுவிட்டு வீட்டிற்குச்செல்ல லிஃப்டில் ஏறியபோது, மனதில் பொறி தட்டியது.

ஒரு மிதிவண்டி கைமாறியதற்கே , மனது இந்தப்பாடு படுகிறதே, வாழ்வாதாரமான பரம்பரை பரம்பரையாக தனக்கும் பிறருக்கும் சோறு போட்டுச் செழித்து நின்ற உழவு நிலத்தையும், உழவு மாடுகளையும் , அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாமல் விற்று நிற்கும் உழவர் மனம் எப்படிப்பட்ட ரணத்திற்கு உள்ளாகியிருக்கும்? எப்பாடு பட்டிருப்பர்? தன் குழந்தைகள் கால்பதித்த சுவடுகளோடு, நெல் பயிரிட்ட நிலமும் சுரண்டப்பட்டு, அதன்மேல் கான்க்ரீட் கலவை இடக்கண்ட அந்த விவசாயக்குடும்பம் அடைந்திருக்கக்கூடிய அளவிடமுடியாத சோகம், நினைத்துப்பார்க்க முடியாத கொடூரம்.

இன்று பத்தடுக்கு மாடியில் சௌகரியமாக நான் வசிக்கும் எனது அபார்ட்மெண்ட்டும் ஒரு விவசாய நிலத்தின் மேல் எழும்பி நிற்பதால், பல குடும்பங்களை அழித்த பாவத்தில் நானும் பங்கெடுக்கிறேன். இறைவா, இந்த பாவத்தின் சம்பளம் எனக்கு மட்டுமே கொடு, என் குடும்பத்தினை விட்டுவிடு என்று மட்டும் வேண்டிக்கொண்டு வீடேறினேன்.

உடன்சேர்த்து இன்னொரு வேண்டுதலும்,
" படைத்தலின்போது குழந்தைகளை ஊனமாகப் பிறப்பிப்பதை விடக் கொடிய செயலாகிய இப்படிப்பட்ட கொடூரங்களை, இனியும் செய்து ,உமது பாவங்களை இன்னும் சேர்த்துக்கொள்ளாதீரும் இறைவரே, எங்கள் பாவங்கள் உன்னிடம் கழிகிறது. உன் பாவம் கழிக்க உலகமிருக்காது பார்த்துக்கொள்ளும்" இனியாவது ஓர் விதி செய்து, இக்கொடுமை தீர்த்திட
#வல்லமை தாராயோ 🙏

பாரங்களுடன்,

குருப்ரம்மா