Monday, February 13, 2017

!!இப்படிக்கு, காதல்!!

இப்படிக்கு, காதல்!!

"என்ன நினைத்துக் கிடப்பாளோ என்றிங்கு நான் ஏங்க,
என்னைத்தான் நினைத்திருப்பான் என்றவள் அங்கு சுகிக்க,

பார்த்தவிடத்தில் எல்லாம், இனி என்று பார்த்திடுவோம் என்று இரு புருவமுயர்த்தி வினவ,
தெரியாது என்று அவள் அழகாய் உதடு பிதுக்கிக் கண் சுருக்க,

ஆசையாய் மீண்டுமொரு சந்திப்பின் அரங்கேற்றங்களை மனக்கண்ணில் படம்பிடித்து,
அடுத்த வாய்ப்பான அந்த மந்திரத்திருநாள் நோக்கித் தவம் கிடக்க,

மீண்டும் ஒட்டி வந்தபோது கண்நோக்கிப் பேசத் தோன்றிடாது ,
பதைபதைத்து நின்ற அந்தப்பொற்காலம் இனி எப்போழுது!!

இந்தக் கால இளவட்டங்களிடத்தில் , இத்தனை சுகங்களும், அலைபேசிச் சூட்டில் சுருங்கித்தான் போனது,
காதலுக்கு முகநூலும் வாட்சப்பும் வரம் மட்டும் அல்ல என்பது நிச்சயமான உண்மை.

இந்த அலைபேசிக் களேபரங்களில்லாமல் போன அந்தக்காலங்களில் வாழ்ந்தை என் திருச்சிக் காதலும் சுகமானதே!!

காதலர் தின வாழ்த்துக்கள்

- குருப்ரம்மா

Sunday, February 12, 2017

நான் தமிழன் என்பதில் பெருமை

தமிழனின் பிரமாதமான மூளைத்திறனை என்னவென்பது. நேற்று கும்பகோணம் சென்றிருந்தேன். ஆன்மீகச் சுற்றுலா. கும்பேஸ்வரன் கோவில் சென்றிருந்தபோது, கோவில் கோபுரக்கலசங்கள் பற்றிய ஒரு விவாதம். அதற்குமுன் ஒரு சிறு கதை.
கும்பேஸ்வரன் கோவில் உதயமானதின் வரலாறு என்னவென்றால்,

உலகில் பிரளயம் வரவிருப்பதை உணர்ந்த பிரம்மன் மற்றும் மக்கள், சிவனிடம் சென்று முறையிட, அதைத் தடுக்க முடியாத சூழலில், அமிர்தம் மற்றும் அத்தியாவசிய விதைகளை ஒரு கும்பத்தில் வைத்து, அதை ஆராதித்து வழிபட்டு வந்த சிவன், பிரளய நாள் நெருங்கியதால், அதனை உயர்ந்தெழுந்து நின்ற மேகமரு மலையின் மேல் வைத்து விடுகிறார்.
ஆனாலும் வெள்ளம் மலையின் சிகரத்தினை முட்ட, அந்தக்கும்பம் அடித்துச்செல்லப்படுகிறது.

வெள்ளத்தின் ஓட்டத்தில், தென்திசை நோக்கி நகர்ந்த கும்பம், தமிழ் மாநிலத்தின் பகுதியில் வருகையில், அதிலிருந்த பூ, பழங்கள், தேங்காய் ஒவ்வொன்றாக உதிர , அது உதிர்ந்த இடங்களில் எல்லாம் ஒவ்வொரு சிவலிங்கங்கள் தோன்றுகிறது. வெள்ளம் வடிந்த வேளையில், அந்தக் கும்பம் குடமாக மாறியிருந்த்து.

அதனை வேடுவன் வேடத்தில் வந்த சிவன் அம்பெய்து உடைக்க, அமிர்தம் பொங்கி வழிந்து மண்ணோடு கலக்கிறது. மண்ணில் வழிந்த அமிர்தம் குழைத்து, அதனை சிவலிங்கம் வடிவினில் பிடித்து, அதைச்சுற்றிக் கோவில் எழுப்பி, அதனையே கும்பேஸ்வரன் என்று இன்றுவரை வழிபட்டு வருகிறோம் என்கிறது வரலாறு. ஆஹா.!!

சரி, கோபுரக் கலசங்கள் பற்றிய விவாதத்துக்கு வருவோம். அதில் என்ன இருக்கும்? மாநிலத்தின் ஒவ்வோரு பகுதியிலும், அந்தப்பகுதிக்குப் பெயர்போன தானியங்கள் மற்றும் நெல்
மணிகளைச் சேகரித்து, அதனை கலசங்களில் வைத்து, இயற்கைப் பேரிடர் எதுவும் தகர்க்க முடியாத கோபுரக் கலசங்களில் வைத்துப் பாதுகாத்திருக்கிறான் தமிழன். அதன் வீரியமானது 12 வருடங்கள் வரை மட்டுமே நீடிக்கிறது. அதனாலேயே, ஒவ்வொரு 12 வருடங்களுக்கும், கும்பாபிஷேகம் செய்து, அவற்றை புதுப்பிக்கிறோம். இது எவ்வளவு பெரிய விஞ்ஞானம். இதன் மகத்துவம், இவ்வளவு நாள் எனக்குத் தெரியாமல் போனது, வெட்கப் படக்கூடிய விஷயம். இயற்கையின் சீற்றத்தோடே விஞ்ஞானத்தால் விளையாடியிருந்த  தமிழன், இன்று தனக்குண்டான தலைமையை சரிவரச் செதுக்காமல் நிற்கின்றான் என்றால். அது நம் தலைவிதி!!

இவ்வளவு வரலாற்று உண்மைகளை எனக்குத் தெரியப்படுத்திய என் மனைவிக்கு நன்றி. தமிழினத்தின் மீது தனி மரியாதை இனி!!

நான் தமிழன் என்பதில் பெருமை!!
#குருப்ரம்மா

Friday, February 3, 2017

!!மரணபலம்!!

எட்டாவது படிக்கும்போதே சிகரெட் லைட்டர் க்ளாசுக்கு கொண்டுவந்து.. யாருக்கும் தெரியாம பின்னாடி பெஞ்ச்சு பயலுக்கு கொளுத்திக் காமிக்கறேன்னு, உள் பாக்கெட்ல வச்சுக் கொளுத்தி, சட்டைய பொத்துக்கிட்டு அடி வாங்கினவன் பையன் ஹரி!! செல்லமா கருவாயன்!! வாத்தியாரு அவன, தண்டிக்கறதுக்காக சட்டைய கழட்டி பெஞ்சு மேல நிக்கச்சொன்னா, ஏறி நின்னு WWF சேஷ்டை காமிச்ச பயல்.  கிராமத்துக் குறும்புகளுக்குக் குறைவில்லாத, பக்கா கேடி!! கண்ல எப்போமே குறும்புள்ள பயல்.

1999 - கடைசி நாள் நேஷனல் ஸ்கூல். பத்தாமாண்டு பொதுத்தேர்வு முடிஞ்சு எல்லாம் கிளம்பிட்டுருந்த நேரம்.
மச்சி, அடுத்த பஸ்ல போயிக்கறேன்டான்னு சொன்னவன, மூடிட்டு கிளம்பிட்டு, சாயங்காலம் சீக்கிரம் மலைக்கோட்டைக்கு வந்து சேருன்னு அவசர அவசரமா அனுப்பி வச்சோம். எட்டரைக்கோப்புலருந்து வர்ற பையன்ங்கறதால சீக்கிரம் போயி கிளம்பி வரச்சொன்னோம். பஸ் ஏறினதுக்கு அப்புறமும், பின்னாடியே போயி சட்டைல இங்க் அடிச்சோம். வாயெல்லாம் ப்ளூட்டூத்தோட சிரிச்சுட்டே கிளம்பினான் . "சாயங்காலம் மெயின்கார்டு கேட்ல பாப்போம்"ன்னு சொல்லிட்டுப் போனான். மலைக்கோட்டைக்கு அன்னைக்கு சாயங்காலம் வரல. கெட்ட கெட்ட வார்த்தைல திட்டிக்கிட்டே கிளம்பிட்டோம்.

திரும்பிப் பாக்கறதுக்குள்ள ஆண்டு 2000. தினசரி நாளிதழ்ல முதல் பக்கத்துல அந்தப்பய ஃபோட்டோ, முதலாம் ஆண்டு நினைவஞ்சலின்னு பாத்துட்டு பகீர்னு கிளம்பி ஓடினேன்.  என்னடான்னா ஆக்சிடென்ட்டாம். ஆட்டோல கார்மோதி அத்தனை பேரும் தப்பிக்க, இந்தப்பய மட்டும் நெஞ்சுல கம்பி ஏறி செத்துருக்கான். கதறினோம். யாருக்குமே தெரியாது. தொலைபேசி இல்லாத கிராமத்துலருந்து வந்த தால தொடர்புக்கும் வாய்ப்பில்லை. 4 வருஷ நட்பு. துர் பிரிவு.

எத்தனையோ முறை சிரிக்க வச்சுருக்கான். எங்கள்ட்ட, எவ்வளவோ அடி வாங்கிருக்கான். பேசமாட்டேன் போடான்னுட்டுப் போயிட்டு, அரை மணிநேரத்துல வந்து சாயங்காலம் காயத்ரி டீஸ்டால்ல நில்லுன்னுட்டுப் போவான். அவன் போனத நினைச்சு ரெண்டு மூனு நாட்கள் தொடர் அழுகை. அதோட கரைஞ்சுட்டான். இப்பல்லாம் அவன் நினைப்பே இல்லை. எப்போவாவது தோணும், அவன் அடிச்ச சேட்டையெல்லாம் நினைச்சு சிரிச்சுப்பேன். லைட்டா கண்ல தண்ணி கோர்க்கும். போடா லூசுப்பயலே, எங்களோட இருந்துருக்கலாம்ல நீயெல்லாம்னு !! நினைச்சுட்டு கண்ணத் துடைச்சுட்டு நகர்ந்துடுவேன். அவ்வளவுதான்ல வாழ்க்கை. எவ்வளோ பலம் நமக்கெல்லாம். ஒரு சாவை மறக்கற அளவுக்கு.

ப்ச் இன்னைக்கு சாயங்காலத்துலருந்து என்னமோ அவனோட நினைவாவே இருக்கு. மிஸ் யூ கருவாயா!! ரியலி மிஸ் யூ மச்சி.

Thursday, February 2, 2017

!!பெண்டிர்!!


அடர்ந்த இருட்டினுள்,
படர்ந்த காதலின் முடிவில்,
என் செங்குருதியது சுண்டி,
வெண்துளிகளாய் வெடித்துக்கிளம்பி,
திரைவிலக்கித் திரும்பாமல் நீந்தி,
கோடியணுக்களில் முந்தியது,
முத்தாகத்துடித்து முட்டையினுள் புகுந்து,

அது பொட்டாகி, மொட்டாகி,
கனியாக மெருகேறியதினம்,
ஆசையாய் அழைத்து,
அத்தான் உதைக்கிறதென்றாள் அன்பு மனைவி!!
வளராமழலை மொழி கேட்கநான்,
வளர்ந்த அவள் வயிற்றில் செவி வைக்க,
உப்பிய பானையினுள் வரும்,
ஓமென்ற ப்ரணவம்போல்,
தொப்புளின் வழிவந்த,
ஓசை தெரிந்ததென் பிரமையோ!!

வளரும் பிஞ்சை வதைக்காதிருக்க,
வளர்ந்து பெருத்த உடலதைக்குறுக்கி,
ஒருக்கழித்தே உறங்கிக்கிடந்தாள்,
ஓங்கிச்சீறிய பத்தினியவள்..!!

ஈரிருபதுவாரம் தாண்டி,
அத்துனைக் கடவுளரையும் துணை வேண்டி,
தூங்கிய தருணமதில்,
துடித்துக்கத்தினாள்,
தூக்கிவாரிப்போட்டதெனக்கு..!!

மனையவள்தனை ஏற்றி,
மருத்துவமனை நோக்கி,
மகிழ்வுந்தில் சீரியநேரமவளென்
கைகளதை அழுத்த உடைந்ததென் எலும்புகள்!!

சென்று சேர்ந்த எங்களை,
வந்துகேட்ட மனிதர்கள்,
தள்ளிச்சென்றனர் அவளை!!
என்றாலும் ,
என்கை பற்றி இரு கண்ணோக்கி,
என் மங்கல மங்கையவள்,
சொல்லிச்சென்றாள் கலங்காதே என்று!!

முதல் நாள் பள்ளியில்,
விடப்பட்ட குழந்தைபோல்,
அன்னையுமானவள் போன தடம் பார்த்து,
அயர்ந்து கலங்கி நின்றேன் நான்!!

உயர்ந்து கதறிய அவள்  சத்தமென், 
உதிரச்சூடுதனைக் கூட்ட,
உட்காரத்தோன்றாமல் திரிந்தேன்,
உள்ளத்தவிப்பினை அடக்க.!!

கொதித்த ரத்தம் வெடிக்கும் தருவில்,
அலறிய சத்தம் அமைதியான நேரம்,
திறவாக்கதவினை திகைத்து நோக்கி,
திக்கிட்டுநின்ற என் கொதிப்படங்க,
வெளிப்பட்டாள் பெண்ணொருத்தி,
வெள்ளையாடைதனையுடுத்தி!!

வியர்வையால் வெளிறியமுகம் கொண்டு,
என்னசொல்வாள் என்று கலங்கி நிற்க,
சிரித்து நின்ற செவிலியவள்,
சொல்லிச்சென்றாள் "பெண்ணென்று"!!

கூக்குரலிட்டு குதூகலிக்கத்துடித்தும்,
அடக்கியது மருத்துவமனை நிசப்தம்..
அடக்கிய சத்தம் வெப்பமாகி,
நரம்புவழி கண்களுக்கேறி,
முட்டிநின்ற துளிகள் தள்ள,
ஆணாகினும் அழுதேன் அன்று!!

அழுகைச்சத்தம் அருகில் கேட்க,
இமைதுடைத்து நான் ஏறிப்பார்க்க,
வந்து சேர்ந்தாள் வைரக்குவியலாய்,
என்கைகளுக்கு தங்கப்புதையலாய்..

கைக்கு வந்த தங்கமகளை,
உச்சி முகர்ந்து உளம் பூரித்து,
சட்டென நினைவு வந்தவனாய்,
அறைக்குள் ஓடி அசந்து நின்றேன்,
என்னவள் கண்டு.!!

புதிதாய்த் தாயானவள்,
புதுமலர்தனைத்தந்தவள்,
அசந்துகிடந்தாள் சாதித்து முடித்து!!

அருகினில் அமர்ந்து,
அவளழுகைத்துடைத்து,
ஆரத்தழுவி,
அவள் தலை கோதிய நேரம்,
அன்று பிறந்தோம்
அப்பா அம்மாவாக.!

வண்ணமகள் வளரக்கண்டு,
எண்ணிலடங்கா எண்ணம்கொண்டு,
எட்டுவைக்கும் அடிகளுக்கெல்லாம்,
பாதம்நோகாப் பட்டுவிரி நெய்து,
தட்டுநிறை சோறு தந்து,
மொட்டுமலரக்காணும் இந்தநொடி,

தேடி நின்ற வாழ்வின்
வினைப்பயன் கிடைத்தது!!

மகளிர்க்கு சமர்ப்பணம்..!!

- குருப்ரம்மா -