Monday, December 25, 2017

!!பயணக்கைதி!!

விடியலில் இறங்கி, குடிலதில் மகிழ்ந்து,
மழலைகள் மத்தியில், மதியச்சோறு மென்று,
மாமனும் மைத்துனரும், மாலையில் அமர..
மன்றம் அமைத்து, மனம் மகிழ்ந்த்தூறி,
இருட்கவ்வியதுவும், இல்லாள் தேடி,
பொன்விடியல் பூத்ததுவும்,

"இன்றோர்விடியல் இமைக்கும் முன் பறந்திட்டது,
மற்றோர் விடியலில் வந்திறங்குவேன்
மனம்தளறாதீர்"
ஏங்குவோரிடம் இதைக்கூறி, தன் ஏக்கம் மறைத்திட்டு,
இறுதி வரை இறவாத இறந்தகாலச்
சுக ஞாபகச் சுமைகளை மட்டுமே
ஏந்தித் திரியும் இவ்வாழ்வும்,
என்றோ ஓர்நாள் இனியதாகும்.!!

எண்ணம் மட்டுமே இப்போது என்னிடம்!!
வாழ்வின் வண்ணங்களும் மாறும்..
வாசல் பார்த்துக் கிடப்பேன்.
வசந்தகாலத்திற்கான அழைப்பு ஓலை அனுப்பியாயிற்று..
தூரமில்லை.. சுமையில்லா விடியலுக்கு!!

Saturday, December 23, 2017

The God Mother

கனவு மெய்ப்பட வேண்டும்:

விடிய விடியத் தூங்காமல், பகலிலும் , மித்ரன் எதற்கோ அழுகிறான். பசியாறிவிட்டான். மீண்டும் ஏன்?
அவனது special shoeவால் ஏற்பட்ட கால் வலியாக இருக்கும், என்று எங்களை நாங்களே சமாதானப் படுத்திக் கொள்ளும் தருணம்,
சோஃபாவில் அமர்ந்துகொண்டு டிவி பார்த்தவள், புயலென எழுந்தோடுகிறாள். தம்பியின் அருகினில் அமர்ந்துகொண்டு, அவன் அழுவதைத் தாங்கமாட்டாது, மடியில் கிடத்தி பேச்சுக் கொடுக்கிறாள்.

"மித்ரா.. மித்ரா.. அழாத குட்டி. அம்மாவும் அப்பாவும் நைட்டு பூரா உன்னை தூக்கி வச்சுட்டுதானே இருந்தாங்க? நீ அழுதுட்டே இருந்தா, அவங்க பாவம்தானே. அழுதா உனக்குதானே வலிக்கும். சமத்து நீ. அழாதே..

நான் story சொல்லவா?"

மித்ரன் சற்றே அழுகை குறைக்கிறான்.

"ஒரு ஊர்ல ஒரு பாம்பு. இல்லயில்ல குரங்கு, அந்த குரங்கு மரத்துல ஏறி விளையாடறப்போ, தெரியாம ஒரு பாம்ப பிடிச்சுடுதுடா. என்ன பண்றதுன்னே தெரியலை அந்த குட்டி குரங்கனுக்கு. உடனே அவன் Friendsகிட்ட கேக்கறான். யாராவது help பண்ணுங்கன்னு"

மித்ரன் அவளையே பார்க்க.. அதற்குள் என் அம்மாவின் குரல்,.. பப்பு குளிக்க வா.

"பாட்டி, மிட்டுஷ் தனியா இருக்கான், எப்படி விட்டுட்டு வர்றது? அப்பா போன் பேசிண்டு இருக்காம்மா. நீ போ, அவனை சமாதானப்படுத்திட்டு வரேன்."

கதை தொடர்கிறது.

"அந்த மங்க்கி பயல் இருக்கானே, அவன் நாள் பூராவுமே அந்த snakeஅ கால பிடிச்சுண்டே தொங்கறான்டா. சாப்டவே இல்லை. பாவம். அழுதுட்டே இருக்கான். அப்பொ அந்த பக்கமா ஒரு யானை வந்துது. (யானை போல நடந்து காண்பிக்கிறாள்) வந்துதா.. இருவரேன்"

எழுந்து சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு அமர்கிறாள். கதை..

"யானை வந்து மங்க்கிட்ட சொல்றது, டேய் மங்க்கி.. அந்த snake செத்துப்போயி ரொம்ப நேரம் ஆச்சு."
நிறுத்திவிட்டு என்னிடம் திரும்பி..

" அப்பா, snake பாவம்தானே, அதை கொல்ல வேண்டாம்" நான் சரி என்று தலையசைக்க..

"அப்பொ அந்த யானை மங்க்கி கிட்டே சொன்னதுடா, அந்த snake மயங்கிடுத்து, நீ அதை கீழ விடு சொல்லித்தா.. குரங்கு அந்த snakeஅ கீழ விட்டுது. Snake பொத்துன்னு விழுந்துது" அதிர்ந்து சிரிக்கிறாள். மித்ரனும்!!

"இப்படித்தான்டா மித்து, மனுஷா எல்லாருமே அவங்களோட வலி, அவங்களோட சளி, அவங்க கஷ்டம்லாம் மனசுலையே வச்சுக்கறா. Overtake(overcome என்பதை அப்படிச் சொன்னாள்) பண்ணி வந்துடனும்தானே. உன்னை மாதிரி ஒரு குட்டி champ மாதிரி அந்த குரங்கு இல்லைடா. பாவம். நீ பாரேன், வலிச்சாலும் மறைச்சுண்டு சிரிக்கற அக்காவப் பாத்து " சிரிக்கச் சிரிக்க, அவனும் வலி மறந்து சிரிக்கிறான்.

இதை எட்ட நின்று கலங்கியபடி பார்த்த எனக்கு மனதில் தோன்றியது இதுவே. மித்ரனின் வருகை என்பது நாங்கள் செய்த புண்ணியம் என்றாலும், ஆராத்யா அவனுக்கு அக்காவாக வாய்த்திருப்பது, அவனது புண்ணியம். இப்படி ஒரு சகோதரி எனக்கில்லை என்று என்னை கலங்க வைத்துவிட்டாள் என் மகள். அவள் மகளல்ல வரம்!! மித்ரனுடைய God Mother!!

அவளை, அவர்களை என்றும் என் தோள்களில் ஏற்றிச் சுமந்திட அத்தனை ஆசை!!

கனவு மெய்ப்பட வேண்டும்!!

#குரு

Tuesday, August 8, 2017

!!அகப்புறம்!!


கட்டுண்ட கால்சக்கரங்கள்,
சந்திக்கத் தயாரான போட்டிகள்,
விதியனுப்பிய பொறாமைப் படிமானங்கள்,
விண்செல்லும் கற்பனைக் கோடுகள்,
ஆசைகள் மீறிய அனுபவங்கள் ,
வலிகளோடியங்கும் வன்வாழ்வு,

இவைகள் தாண்டி
இன்பவாழ்வு வாழ்ந்திட
வரம்வேண்டும் மாமனிமதர் படையில்,
ஓரத்திலும் தூரத்திலும் ஓருவனாய்,
விடியலை எட்டிப்பார்த்துக் கைத்தட்டி,
என்றாவதோர் நாள் அது எனக்குமுண்டு,
என்றயரும் என்னைப்போன்ற எவனுக்கும்,

அகமும் புறமும் ஒன்றே!!

Saturday, June 17, 2017

!!கயலாள்!!

மழை ஓய்ந்திருந்த ஓரு நள்ளிரவு!!

கழுவிவிட்டாற்போல ஒரு தார்சாலையில்,
க்ரீச் க்ரீச்சென்று சப்தமிட்டவாறே, டையனமோ மங்கலாய் எரிய, யாருமில்லா அந்த நடுநிசியில் சைக்கிளை அழுத்திக்கொண்டு வந்த புகழேந்திக்குப் பசியான பசி. நைட் ஷிப்டுக்கு ஆட்கள் வர தாமதமானபடியால், இவனை இருந்து வேலைகளை முடித்துச் செல்லுமாறு முதலாளியின் கட்டளை. உழைப்பாளிக்கே உரிய உடைதாண்டிய அந்தக் காக்கிவியர்வை காற்றில் கமகமக்க மிதிவண்டி அழுத்திக்கொண்டிருந்தான். அவன் திருச்சி TST மோட்டாரில் சீஃப் மெக்கானிக்காகப் பணியிலிருந்தான். கைநிறைய சம்பளம், (நாணயங்களாக மாற்றி வைப்பானாயின்.)

அத்தனை பசியிலும், அங்கிருக்கும் ஐயப்பன் கோவில் தாண்டும்போது, ஒரு நிமிடம் நிறுத்தி "பகவானே, உலகத்தாருக்கு எல்லாமே சந்தோஷம், நிம்மதி, ஆரோக்யம், நிறைஞ்ச ஆயுள்" எல்லாத்தையும் கொடுப்பா.. வேண்டுதல்களில் கூட, அத்துனை உயிர்களையும் உள்ளிழுத்து வாழும் உத்தமன். மனைவியும் ஒரு மகளுமுண்டு. மகள் 5 வயதானவள். டிப்ளமா படித்த பட்டயதாரி, வேறு ஊர் சென்று பிழைக்க மனமில்லாது, சொந்த ஊரிலேயே செழிக்காமல் பிழைக்கின்றவன்!!

குழந்தை இலக்கியப் படைப்பாளி. அளவில்லாத புத்தகங்களை எழுதிக்குவித்திருந்தான். பணவரவில்லையென்றாலும், அவனுக்கு ஏகப்பட்ட குழந்தை விசிறிகள். சமீபத்தில் அவனெழுதியிருந்த "துள்ளித் திரி" புத்தகம் பல்லாயிரம் பிரதிகள் விற்றிருந்து. ஆனாலும், தன் சிறுநீரகப் பிரச்சனை உண்டாக்கிய மருத்துவமனைக் கடன்சுமைக்கே லாபங்கள் சரியாகியிருந்தது. பெயரைப்போல, புகழேந்தி. பொருளன்றி, புகழ் மட்டுமே ஏந்துபவன்.

ஐயப்பா!! பகவானே, உலகத்தாருக்கு எல்லாமே சந்தோஷம், நிம்மதி, ஆரோக்யம், நிறைஞ்ச ஆயுள்" எல்லாத்தையும் கொடுப்பா.. சொல்லி முடித்து மிதிவண்டி அழுத்த.. சட்டென்று வெட்டிக்கொண்டது சங்கிலி!! "உஸ்ஸ்" என்றவாரே திரும்பி ஐயப்பனை ஒரு முறை முறைத்தான்.. பின்பு சிரித்துக்கொண்டான்.. காற்று சிலு சிலுக்க. மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டே சிறிது அருகாமையில் அமர்ந்து வெட்டியதைக் கழட்டலானான். மெக்கானிக்காயிற்றே. சொல்லித்தரவேண்டுமா.

இத்தனையும் கவனித்தவன், தினமும் கடந்து வந்த பாதையில், கோவிலுக்கு எதிரே உள்ள இடுகாட்டினை மறந்திருந்தான். ஓரு கணம் சட்டென்று நினைவு தட்ட, உடனே ஒரு குட்டி பயம் தொற்றிக்கொண்டது புகழுக்கு!! பொறுமையாக, கண்களை அந்தப்பக்கம் திருப்பாமலே, வண்டியைச் சரிசெய்யலானான். பக்கத்திலேயே மத்தியப் பேருந்து நிலையம் இருந்த போதும்.. அந்த ரெனால்ட்ஸ் சாலை, மொத்த நிசப்தங்களையும் குத்தகைக்கெடுத்து இருந்தது.

மணி சரியாக 1.20. கொட்டாவி விட்டுக்கொண்டே, தனது பாக்கெட்டிலிருந்து ஸ்க்ரூ ட்ரைவர் எடுக்க முயல, டக்கென தாடையில் தட்டி அது ரோட்டின் மீது உருண்டது.. எடுக்க முயன்றான், இன்னும் உருண்டு போனது.. அப்படியே அதைத் தொடர, டமார் என்ற சப்தம்..

பகீரென்றது அவனுக்கு, ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்து மொத்த சாலையும் மையிருட்டினுள் இப்பொழுது. திருப்புளியும் கையிலில்லை. சைக்கிள் நின்ற இடத்திற்கு பொறுமையாகச் செல்ல, திடீரென சட்டை பின்னால் இழுக்கப்பட்டது. அவன் கைப்பற்றி "வாங்க அங்கிள், நான் கூட்டிப்போறேன் " கூட்டிப்போகிறேன்" என்ற குரலும் ஸ்பரிசமும் அவனை ஒரு உலுக்கு உலுக்கியது.

"யாருமற்ற இருள் சாலை, இத்தனை நேரம் ஆள் அரவமின்றி இருந்த இடத்தில், எப்படி திடீரென்ற ஆக்கிரமிப்பு. யாரிது? குழந்தை போலத் தெரிகிறது. ஐயோ. சுடுகாட்டுப் பக்கம் வேறு. ஐயப்பா, என்னோடவே இரு.. விட்டுடாத சாஸ்தாவே" என்று மனதிற்குள் புலம்பியபடி, அந்தப் பிஞ்சுக்கை இழுத்த திசை நோக்கி அடிமேல் அடிவைத்து நடக்கலானான்.!!

கண்டிப்பாக இப்போதைக்கு இங்கே யாரும் வரப்போவதில்லை என்று நிச்சயமாகத் தெரியும். ஆனாலும் கோவிலுள்ள தைரியம் ஆழ்மனதினில் .
"அங்கிள், இந்தாங்க" .. கைகளில் ஏதோ வைக்கப்பட்டது. பொத்திப் பார்த்தவனுக்கு, தனது திருப்புளி என்று நடுங்கிய கைகள் சொன்னது.

குரல் தளர்த்தி "யாரும்மா நீ, இந்த நேரத்துல இங்க (எச்சில் விழுங்கி) என்ன பண்ற? "

குழந்தைக்கே உண்டான மலர்ந்த சிரிப்பு.. அத்தனை பயத்திலும், ரசித்தான் புகழேந்தி. அதையும் தாண்டிய இருள் பயம். வியர்வை கலந்த சிறப்புடனே.

"யாரும்மா நீ"

"நீங்க புகழேந்தி அங்கிள்தானே"

ஆச்சர்யம் கலந்த ஒரு மௌனம் புகழிடம். தன்னை எப்படி அறிவாள் இச்சிறுமி? பேய்தானோ? இல்லை தெரிந்த குழந்தையா? நிச்சயமாக இந்த நேரத்தில் தனியாக குழந்தை இப்படிப்பட்ட இடத்தில் சாத்தியமே இல்லை. அதையும் தாண்டி, அவள் குழந்தை என்ற ஓரு விஷயத்தை மட்டுமே மனதில் வைத்து பதிலளித்தான் புகழேந்தி. குழந்தைகளுக்குப் பிடித்தவனுக்கு, குழந்தைகள் என்றால் உயிர்!!

"ஆமா கண்ணா!! நான் புகழேந்திதான்.. நீ இங்க என்ன பண்ற?

சப்தமிட்டாள் அச்சிறுமி!!

"ஏ.. ஸ்வாதி, கவிதா சீக்கிரம் வாங்க பிள்ளைங்களா. இவங்கதான் அந்த அங்கிள். சொன்னேன்ல.. "

புகழுக்கு வியர்த்துக்கொட்டத் தொடங்கி விட்டது. ஓன்று போதாதென்று இன்னும் இரண்டாம்.. இன்று வீடு போய் சேர்ந்தாலாச்சு என்று எண்ணிக் கொண்டான்..

"அங்கிள், என் பேரு கயல்விழி ". வெடுக்கென்றது புகழுக்கு.
"உங்க கதைனா ரொம்ப பிடிக்கும். சித்தப்பா சொல்லிருக்காங்க. உங்க புக்கோட அட்டைப்படம் பின்னாடி உங்கள பாத்துருக்கேன் அங்கிள். இவங்க கிட்ட சொன்னேன். நம்பவே இல்ல. அங்கிள் அங்கிள்.. ப்ளீஸ் .. மீட் மை ஃப்ரெண்ட்ஸ் ஸ்வாதி அண்டு கவிதா."

உன் முகமே முழுசா தெரியலையே தாயீ.் அதுல இவிங்கள எங்க பாக்கறது'.. மனதில் நினைத்தாலும், காற்றில் ஒரு திசையில் கையசைத்து வைத்தான்.. 'ஹாய் ஸ்வாதி, ஹலோ கவி' சரி நீங்கலாம் இங்க என்ன செய்யறிங்க..?

"அங்கிள், நாங்கலாம் ஃப்ரண்ட்ஸ், எங்க வீடு இங்கதான் இருக்கு. தினமும் இங்கதான் விளையாடுவோம்.. இன்னைக்கு தூக்கம் வரல, நீங்க சைக்கிள்ல வந்தப்போ பாத்தேன், உங்களைப்பத்தி சொல்லிட்டுருக்கும் போதே பவர் போயிடுச்சு. "

"உங்க வீடெல்லாம் எங்கம்மா இருக்கு?"

"இதோ இங்கேதான் அங்கிள்.. இருட்டினில் அவள் காண்பித்த திசை எதுவென்று தெரியவில்லை. " எங்க கண்ணா வீடு"??

டக்கென்று கரண்ட் வந்தது. தனியாக நின்றிருந்தான் நடுவீதியில், சுற்றி யாருமில்லை. கப்பென்று நெஞ்சு அடைத்துக்கொண்டது. கண்டிப்பாக பேய்கள்தான். விடு விடுவென ஓடிச்சென்று, தனது மிதிவண்டியை தூக்கிக்கொண்டு ஓடினான். பாலம் தாண்டி மாருதி மருத்துவமனை வாசலில், டீ விற்ற ஒருவரைக்கண்டு மனம் ஒரு நிலைக்குத் திரும்பியது.

பேய் பயம் தன்னை உந்தி, கிட்டத்தட்ட 300 அடி தூரம் சைக்கிளைத் தூக்கியபடியே ஓடிவந்தபடியால், மொத்தமாக நனைந்துவிட்டிருந்தான் புகழ்.
"அண்ணே ஒரு டீ" ..
நெஞ்சு படபடக்க, அந்த டீயை கை நடுக்கத்தில் பாதி கொட்டிப் பாதி குடித்து. ஒரு வழியாக, பயம் விலகிச் சென்ற நேரம்.. காசு கொடுக்கத் திரும்பியவன், அங்கே சைக்கிள் மட்டும் நின்றிருக்க, தனக்கு டீ ஊத்திக்கொடுத்தவரைக் காணாமல் திடுக்கிட்டான். ஐயோ இவரும் பேயா என்று யோசித்து நின்ற கணம், இடது தோளை யாரோ பற்றி இழுக்க, வெடுக்கென்று திரும்பினான்..
அங்கே டீ அண்ணன்.. குனிந்து அவர் காலைப் பார்த்து சமாதானம் செய்து  கொண்டான்.

"என்ன தம்பி படபடன்னு இருக்கிங்க? " பீடியை வழித்தபடி..

"ஒன்னுமில்லைண்ணே".. நனைந்திருந்த 5 ரூபாய் நோட்டை அவர் கைகளில் திணித்துவிட்டு, நடையைக்கட்டினான் சைக்கிளுடன்.

வீடு வந்து சேர 2.30 ஆகியிருந்தது. அரைமயக்கத்தில் கதவு திறந்த மனைவியிடம் எதுவுமே பேசிடாது போய் படுத்துக்கொண்டவன், போகும் முன் தன் மகளைப் பார்த்தான். அழகாய் தன்னுடைய கட்டை விரலை சூப்பிக்கொண்டே தூங்கிய அவளை பார்த்து ரசித்த அந்த நேரம்,

"அங்கிள்" ஏன் பாதிலையே போயிட்டிங்க?"

பகீரென்றது. அந்தக்குழந்தையின் குரல், அய்யோ, தன்னைத் தொடர்ந்து அவளும் வந்துவிட்டாளா. பீதியில் முகமெல்லாம் விரிந்து திரும்பியவன் கண்களில் எதுவுமே அகப்படவில்லை. மனப்ராந்தி என்றே தேற்றிக்கோண்டு.. சிறுது கலக்கத்துடனே படுக்கச் சென்றான்..

கண் சொக்கிய நேரம்..
"அங்கிள்..

பற்றி எழுந்து கண்ணாடியை எடுத்துப்போட்டான். அவன் முன்னே அவன் மகள்.. அவனைப்பார்த்து சிரித்தபடி., கருப்பு கவுனுடன் நின்றுகொண்டிருந்தாள்.

"பாப்பா.. என்ன பண்ற இங்கே.. போ.. போயி தூங்கு.. "

"அங்கிள்.. ஏன் பாதிலையே போயிட்டிங்க"

புரிந்தது. ஐயோ.. என் மகள் இப்பொழுது என் மகளல்ல.. கண்களெல்லாம் பீதி.. செய்வதறியாது கத்தினான். "தேவி..தேவி" அவன் மனைவி நல்ல உறக்கத்தில்.

"ஆன்ட்டி தூங்கறாங்க அங்கிள். நான் உங்களோடதான் பேச வந்தேன்."

"ஏ.. நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன். ஏன் என் குழந்தைய படுத்தற. போ. வெளிய போ. ப்ளீஸ்." பதட்டத்தில் புகழ். முதன்முறையாக தனது வாழ்வில், தன்னைத்தேடி வந்த குழந்தையை விரட்டபேசிடாது,
"சரி அங்கிள். நான் போறேன். கண்டிப்பா போயிடுவேன். டென் மினிஸ் உங்களோட பேசினா போதும் அங்கிள். ப்ளீஸ்."

அந்தக்குழந்தை, ஒரு இறுகிய பாரத்தை இறக்கி வைக்க முடியாமல் தடுமாறுவது போல் தெரிந்தது. மறுக்க மனமில்லை. எழுந்து உட்கார்ந்து அவளை நிமிர்ந்து பார்த்தபடி "சீக்கிரம் சொல்லிட்டு போ" என்று சிறிது பயத்தபடி கேட்டான்.

"அங்கிள், உங்க மடீல உக்காந்துட்டே சொல்லவா, ப்ளீஸ் அங்கிள்"

புகழுக்கு என்னவாயிற்று? எல்லாவற்றிர்க்கும் சரியென்றான். அந்தக்குழந்தை, சிரித்தபடி அவன் மகள் வடிவில், அவன் மடியில்.

"அங்கிள்..நாங்க இந்த ஊருக்கு வந்தப்போ.

" நீ எந்த ஊரு?"

"ஸ்ரீ லங்கா அங்கிள்"

புரிந்தது புகழுக்கு. போர் மட்டை அடித்துத் தள்ளிய ஆயிரம் இறகுப்பந்துகளில் இருந்து விழுந்த ஓர் இறகு.

"அப்பாவும் அம்மாவும், அங்கேயே தங்கிட்டாங்கன்னு அப்பத்தா சொல்லும்"

மண்ணுக்கடியில் தங்கிவிட்டனர் என்ற உண்மை கூட புரியா குழந்தையல்ல புகழ் , என்னவோ இதைக்கேட்ட உடன், தன் மகள் வடிவில் வந்த அந்தக்குழந்தை தலை கோதலானான்.

"இங்க அப்பத்தாதான் கூட்டிட்டு வந்தாங்க. 4த் standard வரை படிச்சேன் அங்கிள். நல்லா படிப்பேன். நாந்தான் என் க்ளாஸ் லீடர்." 'கிளுக்" சிரித்துக்கொண்டாள். புகழுக்கோ தொண்டை அடைத்தது.

"அப்புறமா, திருச்சிக்கு வந்தோம் அங்கிள். அப்பத்தாக்கு வயசாகிடுச்சுன்னு என்னை படிக்கவெக்க முடியலை. அவங்களோட ஒரு சர்ச்சுக்கு என்னை கூட்டிப்போனாங்க. அங்கே ஓரு ஹோம் இருந்துச்சா.. அங்கே கொண்டு போயி சேத்துவிட்டாங்க. அப்புறமா அங்க படிச்சேன் கொஞ்சநாளு"

விம்மியபடி

"அப்பத்தா அப்புறமா வரவே இல்லை"

புகழ் சற்றே அவளை அணைத்து ஆசுவாசப்படுத்தினான்.

"அன்னைக்கு சர்ச்ல ஓரு அங்கிளும் ஆன்ட்டியும் வந்தாங்க. என்னை அவங்களோட போறியான்னு கேட்டாங்க. வேண்டாம்னு சொல்லிப்பாத்தேன் அங்கிள், அவங்க கண்டிப்பா போகனும் சொல்லிட்டாங்க. நிறைய துணிலாம் கொண்டு வந்தாங்க. அதுல எனக்கு ப்ளு கலர்தான் அங்கிள் ரொம்ப பிடிச்சுது. மீண்டும் சிரிக்கிறாள். முடியவில்லை புகழால்.!!

" அப்புறமா அவங்களோடவே போனேன். அந்த அக்காதான் நல்லா பாத்துட்டாங்க. ஸ்ரீ அக்கா நிறைய கொஞ்சுவாங்க. அந்த சார் எப்பவுமே உர்னு இருப்பாரு. என்னோட எப்போமே விளையாடறது அந்த சாரோட தம்பிதான். சாருக்கும் அவருக்கும் சண்டையாம். ஏன்னு எல்லாம் தெரியல அங்கிள். அக்காவும் சாரும் சித்தப்பா கூட பேச மாட்டாங்க. சித்தப்பான்னுதான் கூப்பிட சொன்னாரு. ரொம்ப பிடிக்கும் அவரை. அவரு, எங்க வீட்லையே மாடியில தங்கிருந்தாரு. அந்த தெருல நிறைய பசங்க இருந்தாங்க. தெனமும் வெளாடுவோம். நல்லா இருக்கும்."

புகழ் கண்ணிமைக்காது கேட்டுக் கொண்டிருந்தான்.

"ஒரு நாளு, சித்தப்பா என்னைய கூட்டிட்டு சினிமாக்கு போனாரு. போற வழில ஒரு ஆட்டுக்குட்டி பைக்லருந்து விழுந்துட்டோம். எனக்கு கால நல்லா அடி பட்டுருச்சு. அந்த bad ஆடுக்கு ஓன்னுமே ஆகலை ஹாஹாஹா.".

இப்பொழுது ஒரு புன்முறுவல் புகழிடத்தில். தன்னையும் மறந்து.

அப்புறமா ஸ்ரீ அக்கா மருந்துலாம் போட்டு விட்டாங்க. அம்மான்னு கூப்பிட சொல்லுவாங்க அங்கிள் அவங்கள. நான்தான் அக்கானே கூப்பிடுவேன். நீங்களே சொல்லுங்களேன் அம்மானா ஒருத்தங்கதானே இருக்கமுடியும்.

புகழிடத்தில் வார்த்தைகள் இல்லை. மாறாக கோபம். போர் தான் எவ்வளவு உக்கிரம். ச்ச. கோபத்தை மறைத்துக்கொண்டு " ம்ம்"

"அன்னைக்கு சித்தப்பா வந்து சாரி சாரின்னு கேட்டுட்டே இருத்தாரு. ரொம்ப ப்ரியம் என்மேல!!

அப்புறமா, ஒருநாளு சித்தப்பா ரூமுக்கு போனேன். பெரிய டிவி இருக்கும் அங்கே. கார்டூன் நிறைய வாங்கி வச்சுருந்தாறா, போயி சாருக்கு தெரியாம ரெண்டு பேரும் பாப்போம். எதாவது சாப்பிட தருவாரு. நொறுக்கு தீனி. சாருக்கு நான் போறது தெரியாது. சித்தப்பா, கண்டிப்பா சொல்ல மாட்டேன்னு promise பண்ணிருந்தாரு.

அன்னைக்கு சித்தப்பா மேல எதோ வாசனை. சார் shaving பண்ணிட்டு எதோ தடவிப்பாரு அங்கிள். அந்த வாசனை. டிவி பாத்துட்டு இருத்தாரா. திடீர்னு என்னை கூப்பிட்டு மடீல உக்காந்துக்க சொன்னாரு. நானும் ஜாலியா உக்காந்து பாத்துட்டுருந்தேன். புதுசா முத்தமெல்லாம் கொடுத்தாரு. எங்க அப்பத்தாக்கு அப்புறமா இப்படி கொஞ்சறது சித்தப்பாதான். ரொம்பவே ஹேப்பியா இருந்திச்சு அங்கிள்.

ஆனா என்ன கோபமோ தெரியலை, என்னைப்போட்டு நசுக்கினாரு. வலிச்சுது. அப்புறமா கடிச்சாரு. கிள்ளினாரு. வலிக்குது சொன்னேன். திடீர்னு பளார்னு அறைஞ்சிட்டாரு அங்கிள். வலிச்சுது .. விசும்புகிறாள்.. "

புகழ் கொஞ்சம் கொஞ்சமாய் நிமிர்ந்து உட்கார்ந்தான்..

அப்புறம் என்கிட்ட கோபமா சொன்னாரு.. "நான் என்ன பண்ணினாலும், அதை அக்காகிட்டையும் சார் கிட்டையும் சொல்லக்கூடாது, புரியுதா" நானும் அழத்தொடங்கிட்டேன். அப்புறமா என் வாயைப்பொத்தி.. கீழ தள்ளிட்டாரு..  போட்டுருந்த கவுனை..

கேட்க முடியவில்லை புகழுக்கு.. வெடுக்கென்று மடியிலிருந்து அவளைத் தள்ளி விட்டுவிட்டு நகர்ந்து கொண்டான்..

அதன் பிறகு தொடர்ந்து அந்தப்பிஞ்சு பேசிய வார்த்தைகள் எதுவுமே அவன் மூளைக்கு எட்டவில்லை. பிரம்மை பிடித்தவனாய் நின்று கொண்டிருந்தான்.. சிறிது நேரம் அந்த அறை மட்டுமல்ல, உலகே இருண்டிருந்தது. கண்ணீர் அவன் தாடை தாண்டி ஓட..

"அங்கிள்.. அங்கிள்.. என்னாச்சு" கலக்கம் தாண்டி, கவனம் குழந்தை மேல் வந்தது புகழுக்கு.

"அப்புறம் என்னாச்சு தெரியுமா. எனக்கு நானே தெரிஞ்சேன் அங்கிள். ஆனா பயங்கற வலி கால் வரைக்கும் பயங்கற ப்ளட்டு. டர்ட்டியா படுத்து இருந்தேன். சித்தப்பா தூங்கிட்டாரு."

இறுகிக் கட்டிக்கோண்டு 'ஓ' வெனக்கதறிவிட்டான் புகழ். இந்த வெடித்துக்கிளம்பிய அழுகை, அவன் அன்னை இறப்பின்போதும் வந்திருக்கவில்லை. அப்படி ஒரு அழுகை. "கடவுளே!! இவளை ஏன் என் கண்களில் காண்பித்தாய். இவளை ஏன் இப்படி ஒரு ரணத்திற்கு ஆளாக்கினாய். ஐயோ இந்தக்குழந்தை துடித்துச் செத்திருக்கிறாள்"

தொடர்ந்தாள்.. "அப்புறமா, காலைல அந்தக்காவும் சாரும் வந்தாங்க. என்னை பிடிச்சு ஆட்டினாங்க. சித்தப்பாவ அடிச்சு சண்டைல்லாம் போட்டாங்க. சாரு சித்தப்பாவை அடிச்சு வெளுத்துட்டாரு அங்கிள். பாவம் சித்தப்பா. அழுதுட்டே இருந்தாரு. அப்புறமா, என்னை குளிக்க வச்சு, படுக்க வச்சுருந்தாங்களா.. நிறைய பேரு வந்தாங்க. அக்கா சார்ட்ட எல்லாம் பேசிறாங்க. அப்புறமா என்னை தூக்கிட்டு வந்து.. நேத்து உங்களைப் பாத்தேன்ல, அங்கே தான் மண்ணுக்குள்ள புதைச்சாங்க.

அப்புறமாவும் எங்க வீட்டுக்கு போவேன் அங்கிள். யாருமே என்கிட்ட பேசமாட்டாங்க. கண்டுக்க கூட மாட்டாங்க. சித்தப்பாதான் அழுதுட்டே,  பாவம் எனக்கு சாரி சொல்லிட்டே, எதோ பாட்டிலெல்லாம் போட்டு உடைச்சிட்டே இருந்தாரு. கொஞ்சநாள்ல எனக்கே போர் அடிச்சுடுச்சு அங்கிள். அதான் அங்கேயே நிறைய ஃப்ரண்ட்ஸ் கூட விளையாடிட்டு இருப்பேன். அப்பதான் உங்களைப் பாத்தேன்."

புகழுக்கு அழுகை நின்றபாடில்லை. அவளை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு முத்த மழை பொழிந்தான். இதுதான் குழந்தை மனம்.
தன்னை கொன்ற பாவிக்கும் பாவப்படும் அவள், உலகின் மொத்த தெய்வங்கைக் காட்டிலும் உயர்வாய் தெரிந்தாள்.
தழுதழுக்கும் குரலில் 'கண்ணா, என்கிட்ட ஏன் இதை சொன்ன?'

சொன்னேன்ல அங்கிள், உங்க கதைன்னா ரொம்ப பிடிக்கும்னு? சித்தப்பா சொல்லிருக்காருன்னு. அதனாலதான். நீங்க என்னை அடிச்சு ப்ளட் வராப்ல பண்ணமாட்டிங்கன்னுதான் உங்களிட்ட சொன்னேன். அப்புறம் ஒரு ஹெல்ப் பண்ணுவிங்களா?

என்னம்மா?

என்னோட அப்பத்தா தேடினா. நான் அங்கதான் இருப்பேன்னு சொல்லிடறிங்களா, ப்ளீஸ்? நான் இப்போவே போயிடுவேன் அங்கிள், உங்கள் தொல்லை பண்ணமாட்டேன். அங்கிள் கொஞ்சம் கீழ இறக்கி விடுங்க
ரொம்ப வலிக்குது இங்கே என்று, இடுப்பினருகே கை காண்பித்தாள்."

புகழுக்கு பீறிக்கொண்டு வந்தது அழுகை. அவன் மகள் இப்பொழுது அவன் கண்களுக்கு தெரியவில்லை.. உருவமிலா கயல்விழியே தெரிந்தாள். அடக்கிடத் துணிவில்லை.
அவளை கீழே இறக்கிவிட்டுவிட்டு, சமையலைறைக்குள் ஓடிச்சுன்று, எண்ணை எடுத்து வந்து பார்த்தான்.. அவன் மகள் உறங்கிக் கொண்டிருந்தாள்.
பைத்தியம் போல் "கயல்.. தங்கம்.. எங்கே இருக்க, வலிக்குது சொன்னியே கண்ணா.. அங்கிள் எண்ணை எடுத்து வந்துருக்கேன்டா" என்று தேடினான். காணவில்லை. அந்த இடுகாட்டிற்கு ஓடிச்சென்று விடியும் வரை தேடினான். கயல் கிடைக்கவில்லை. மறைந்திருந்தாள்!! அங்கேயே உட்கார்ந்து ஐயப்பனை முறைத்தபடி அழுதான். அடக்கவே முடியாத அழுகை. குழந்தை வதை. எவ்வளவு மகா கொடுமை. உயிரோடே எண்ணையிட்டுத் தீ வைத்த எரிச்சல் அந்தக்குழந்தைக்கு..
எப்போழுதும் வேண்டும்போது யாருக்கும் தீங்கு நடந்துவிடக்கூடாது என்று வேண்டுபவன், இனி வேண்டுவான் "குழந்தைகளை துன்புறுத்த எண்ணுவோர் புழுவெனக்கதறி துடித்துச் சாகவேண்டும்"

"சாரிடா தங்கம்.". எனக்கதறினான். அவன் எதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும்? இது நடவாமல் தடுத்திட அவனில்லை என்ற காரணத்தினாலா? தெரியவில்லை.

அன்றிலிருந்து, தினம் இரவு அந்த இடுகாட்டினைத் தாண்டும்போது " கயல் தங்கம்.. இருக்கியா? " என்று பாவமாக கேட்டபடியே வீடு வருவான். கயல், அவன் கண்களில் கிடைக்கவே இல்லை. ! தன் சுமைகளை புகழின் மீது ஏற்றிவிட்டு, அவள் காற்றில் கலந்திருந்தாள். கயல்.. மிஸ் யூ!! அந்த நிலைக்கு அவளை ஆளாக்கிய கள்வனும், இன்னும் தண்டனையில்லாமல் திரிகிறான். ஆனாலும், தவறு அவனுடையது மட்டுமே அல்ல.. எத்தனை கயல்கள் இப்பொழுதும் வதைக்கப்படுகிறார்களோ!!

சில மாதங்களுக்குப் பின்னர், மது ஒழிப்புப் பிரச்சாரக்கூட்டத்தில் உரை முடித்துவிட்டு வீடு வந்த புகழிடத்தினில், தனது புத்தகங்கள் அட்டை போடும் பணியைக் கொடுத்துவிட்டுச் சென்றாள் அவன் மகள்.. அட்டைபோட்டு லேபிள் ஓட்டி தன் அழகுக் கையெழுத்தினில் பெயரெழுதுகிறான்..

"கயல்விழி" "UKG-B"

அதை எழுதும்போது கண்களில் கோர்த்து நின்ற சில துளிநீர் எழுதாமல் எழுதுகிறது,

"மிஸ் யூ கயல் கண்ணா"

#குரு