Thursday, October 18, 2018

!!அழகான வரம்!!

ஆகச்சிறந்த பிறந்த நாள் பரிசு!! 😍😍

"Congrats நண்பா!

ரொம்ப சந்தோஷம், பையனா பொண்ணா? வாவ். பொண்ணா? ஆஹா, lucky guys u are. wife எப்படி இருக்காங்க? குழந்தை எப்படி இருக்கா.."

"சூப்பர். இதுல என் பங்கு ஒன்னுமே இல்ல, அதல்லாம் மனசுதான் நண்பா!! எந்த பிரச்சனையும் இல்ல. முதல்ல குழந்தைய வீட்டுக்கு அழைச்சுட்டு வாங்க. என்ன பண்ணலாம்னு சொல்றேன்."

"ஓ!! ரொம்ப சந்தோஷம்!!😍😍"

(இரண்டு நிமிட இடைவெளி)
"உங்க அம்மாவ பாக்கனுமே நண்பா!!
சீக்கிரமே வரேன்.  சந்தோஷமா இருங்க!! வாழ்த்துக்கள்."

"புரில நண்பா!! மித்ரா?"

கண்ணீர்!!

குழப்பமா இருக்குல்ல?

ரெண்டு நாள் முன்னே வந்த அழைப்பு இது. என்னன்னு சொல்றேன்.!!

மித்ரன் எங்களோட வர்றதுக்கு முன்னே, அவன் வர்றதுக்காக official documents submit செய்ய, police clearance and NOC வாங்க commissioner office போயிருந்த சமயம். அங்கே திடீர்னு DD எடுக்கனும்னு சொல்ல, பக்கத்துல இருந்த  வங்கியில DD challan வாங்கி fill பண்ணிட்டுருந்தேன்.
அதை கையாண்ட வங்கி அதிகாரி, என்ன விஷயம்னு கேட்டப்போ, விஷயத்த சொன்னேன். ஒரு நிமிஷம் உக்காருங்க, வரேன்னு சொல்லிட்டு ஒரு தனி ரூம காட்டினார். அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தவர், "

"சார் தவறா எடுத்துக்காதிங்க,
என் மகனுக்கு கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆச்சு, குழந்தை இல்ல.
உங்க DD requestல for child adoptionனு இருந்துது.
இந்த தத்தெடுக்கறது பத்தி தெரிஞ்சுக்கலாம்னுதான் உங்கள இருக்க சொன்னேன். எல்லாரும் பயமுறுத்தறாங்க. நாங்க ப்ராமணா. அதுபோக என் மனைவிக்கு இதுல உடன்பாடு இல்ல. biological kid தான் பேரக்குழதந்தையா வேணும்னு ஒத்தக்கால்ல நிக்கறா!! எனக்கு என்ன பண்ணறது தெரியலை. நீங்க ரெண்டாவது குழந்தைதானே எடுக்கறிங்க? கொஞ்சம் இதை பத்தி சொல்ல முடியுமா?"!!

கிட்டத்தட்ட நாப்பது நிமிஷம் இந்த CARA பத்தியும், தத்தெடுத்தல் பத்தியும் விளக்கி சொன்ன அப்புறமா, என்னோட நம்பர் கேட்டு வாங்கிட்டார். மறுநாளே அவர் மகன் என்கிட்ட பேசினார். நீண்ட உரையாடலுக்கு அப்புறமா, தன் மனைவிக்கு சம்மதம்தான்னும், அவங்க அம்மாவ பேச சொல்றேன்னும் சொன்னார். நானே நேர்ல வரேன்னு சொல்லிட்டு, 10 நாள் கழிச்சு அவங்கள நேர்ல சந்திச்சு பேசினேன். 1 மணி நேர உரையாடலுக்கு அப்புறமா, உடன்பாடு இல்லன்னுட்டாங்க!!

கிளம்பும்போது ஒரு விஷயம் அவர்கிட்ட சொல்லிட்டு வந்தேன்.
"நண்பா, உங்க அம்மாவ ஒரே ஒருநாள் ஆசிரம குழந்தைங்களோட lunch சாப்பிட வைங்க. சும்மா எதுமே சொல்லாம அழைச்சுட்டு போங்க. பாக்கலாம்!"

இது நடந்து 2 வருஷம் ஆச்சு.. நடூல அப்பப்போ வாட்சப்புல hi /bye அவ்வளவுதான்!!

நேத்தைக்கு காலைல
அவர் அழைப்பு!

"நண்பா, எங்களுக்கு குழந்தை allot ஆகியிருக்கு.. பெண் குழந்தை. Bengalurல. போயி பாத்துட்டு வந்தோம். ரொம்ப பிடிச்சு போச்சுது.
நீங்க பேசிட்டு போன அப்புறமா, அம்மாவ orphanages கூட்டிட்டு போனேன் நண்பா. ரெண்டு மூணு முறை, மனைவி பிறந்த நாள், அவங்க கல்யாண நாள், எல்லாத்துக்கும். கொஞ்சம் கொஞ்சமா ஒத்துக்கிட்டாங்க. உடனே register பண்ணிட்டேன். கிட்டத்தட்ட 1 வருஷம் நண்பா. கிடைச்சுது பொக்கிஷம்னார்.

என் கண்ல லேசா தண்ணி எட்டி பாத்துது..  கேட்டேன்

"நண்பா குழந்தை reg பண்ணினா atleast 1.5 வருஷம் ஆகுமே.. எப்படி இவ்வளவு சீக்கிரமா?"

"அதுவா பாலு, அவ special child. ரெண்டு கால்களும் பிறவீலயே செயல்படலை (Paraplegia) . அதான் சீக்கி்ரமே." கொஞ்சம் கூட தளறாம அவர் பேச,

கொஞ்ச நேரம் பேச்சு வரலை எனக்கு.

அவரே தொடர்ந்தார்,

"எடுக்கனும்னு ஆகிடுச்சுடா, இது போல மத்தவா எடுக்காத குழந்தையா பாத்து ( with physical disability) எடு. நான் ஆத்துல சும்மாதானே இருக்கேன், அப்பாவும் ரிட்டயர் ஆகிடுவார். எங்களுக்கு அந்த குழந்தைய வளர்க்க தெரியும். நம்ம போல well off மக்களாலதானே அது போல குழந்தேள நன்னா பாத்துக்க முடியும்" அப்படின்னு அம்மா சொன்னாங்க நண்பா.. அதான் register பண்ணும்போதே with physical disability வேணும்னு கேட்டுருந்தேன். உடனே அமைஞ்சுது."

எனக்கு அவ்வளவு நேரம் கண்ல நின்னுட்டு இருந்த தண்ணி, சட்டுன்னு வழிய, அதை காமிச்சுக்காம,

"என் குடும்பத்துக்கப்புறமா, இத உங்க கிட்டதான் முதல்ல சொல்றேன். "மித்ரா" வீட்டுக்கு வந்த உடனே உங்களுக்கு சொல்றேன் வாங்க. அம்மாவும் உங்கள பாக்கனும் சொன்னாங்க! ரொம்ப thanks நண்பா.

கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருந்த நான்
" இருங்க இருங்க, மித்ராவா?"

ஆமாம்!! உங்க பையன் பேரு மித்ரன்தானே!! அந்த ஞாபகமா :)

நெகிழ்ச்சி!!

- குரு

Tuesday, February 13, 2018

!!முதுமையில் வறுமை!!

"கண்டுக்காம வாங்க. அது அப்படித்தான்." சொல்லிட்டார். ஆனால் எவ்வாறு கண்டுகொள்ளாமல் செல்வது?

ஒரு சூப்பர் மார்க்கெட்டின் அருகே ரோட்டின் ஓரம் அமர்ந்து கொண்டு போவோர் வருவோரை எல்லாம் வசவு பாடித் தீர்த்த அந்தக் கிழவிக்கு 80 வயதிருக்கும். தலை முடி உடைந்து விழும் அளவுக்கு எண்ணை மறந்த நிலை. பட்டுப்போய் உடைந்து விழும் மரக்கிளையாய் கூன் முதுகு. சுருக்கத்திற்கு நடுவில் சருமத்தை தேடும் அளவு தள்ளாமை. அவ்வளவு கோபம் கண்களில்.

ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது. ஆனால் கடந்து சென்ற ஒருவரையும் விடவில்லை. கண்களாலேயே எரித்து சாம்பலை காலில் போட்டு மிதிக்கும் அளவு கோபம். என்னையும் விடவில்லை. காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற என் காது கிழியும்படி அப்படி ஒரு கிழி. திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்ற என்னிடம் அந்த சூப்பர் மார்க்கெட் வாட்சுமேன் " கண்டுக்காம வாங்க சார். அது அப்படித்தான்" என்றதும்.. நானும் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றுவிட்டதாய் கடந்து விட்டேன்.

உள்ளே சென்று பொருட்களை வாங்கி, கார்டை தேய்த்தாயிற்று. சரி வெளியே செல்லலாம் என்றால், வைத்த கண் வாங்காமல் வாசலிலேயே நின்று 'நீ வெளியதானே வந்தாகனும்.. வாடீ !! வா' என்று என்னைக் குறுகுறுவென்று முறைக்கும் அந்தக்கிழவி. சரி ஆனது ஆகட்டும் என்று வெளியே இறங்கியதும் சரவெடியாய் திட்டு!! வடிவேலுவை ஒருவர் வாயிலேயே வயலின் வாசித்து திட்டுவதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளவும்.

ஒருவழியாக தப்பித்து பார்க்கிங் அருகே வந்து காரினுள் பொருட்களை வைத்தாயிற்று. அவ்வளவு கோபம்.
நான் ஏன் திட்டு வாங்கனும்? என்ன வர்றவங்களை எல்லாம் திட்டறது? ஒரு கை பார்த்துவிட்டுதான் மறுவேலை. திரும்ப தைரியத்தோடு அந்தக்கிழவியை நோக்கி.

ஒருவர் திட்டுவதை வைத்தே அவரின் ஊரை கணித்து விடமுடியும். அவ்வாறு அந்தக்கிழவி வீசிய வார்த்தைகளை பிடித்துப பொறுக்கி அலசியதில், அது கண்டிப்பாக சென்னைவாசி இல்லை. தென் தமிழ்னாட்டுக் கிழவி. நடப்பது நடக்கட்டும். அருகே சென்றேன்.

"#%%#-₹₹¢¢€€¢££÷||¶©°{$*

இப்ப எதுக்கு நீ கத்திட்டு கிடக்க.. யாருமே உன்ன மதிக்கல பாத்தியா?

#&-+₹₹^€π$¶£¢£ மதிக்கலைன்னா *** போச்சு.. போடா. சொல்ல வந்துட்டான். ¢€¢€∆£°\^..

இந்தா.. பசிக்குதா? எதாது வாங்கித்தரவா.? சாப்பிடறியா?

ஒரு #&&#¢£$®©√` வேணாம். பொழப்ப பாத்துட்டு போடா.

மனது கேட்கவில்லை. அதே கடையில் ஒரு ஜூஸ் வாங்கி அருகே வைத்தேன்.

"குடிக்கிறியா? இல்ல கீழ ஊத்தப்போறியா?"

சட்டென்று எழுந்து என்னை ஒரு முறைப்பு. எட்டாம் வகுப்பு கணக்கு டீச்சரிடம் பம்மிய மாணவனாய் நானும் பம்மிவிட்டு நகர முயல.

"டேய்.!!!!
இங்க வா. யார் நீ?" அதி'கார'த்தோடு

"பக்கத்துல எங்க வீடு. உன்னைய பாத்தா பாவமா இருந்துச்சு. ஆமா ஏன் எல்லாரையெம் திட்டிட்டு திரியற? எவனாவது அடிச்சுப்புட்டான்னா என்ன பண்ணுவ.."

"&&₹$¢€£¢ அடிச்சா அடிக்கட்டும். சாவுறேன். செத்தா அள்ளிப்போட ஆள் இல்ல. நாய் நரி தின்னுக்கும். "
சொல்லிவிட்டு பொறுமையாக அந்த ஜூசை எடுத்து திறக்க முயல.. மூடியை திறக்க முடியவில்லை.

"##₹¢¢€€√ என்ன *** மூடி. தெறக்கமாட்டுது. "

வாங்கி திறந்து தந்தேன்

நாலு மொடக்கு உள்ளே இறங்கியதும்,
"அதிராம்பட்டணம்ரா நாங்க. அய்யாவுன்னா எல்லாருக்குமே பரிச்சயம். அய்யாவுக்கு மூணாத்தவ. என் மூக்குத்தியே 4 பவுனுக்கு செஞ்சாக. மூணு புள்ள பெத்தும் பாத்தியா எங்க உட்ருக்குன்னு. ¢€€^€^£¶ மவனுக."

'ஏ நிறுத்து பாட்டி. இந்த கத்து கத்தினா யார் கூட வச்சூப்பா சொல்லு. வாய அடக்கு முதல்ல'.

நான் கூறியதும், அதற்கு துளி கூட சம்பந்தமில்லாமல்,

"பேசாத பேசு பேசுனா என்னைய.
%&3¢¢€€^ மவ!! அம்புட்டையும் வாரி சுருட்டிட்டு போயிட்டா. (அவர்களின் மருமகளாக இருக்க கூடும்) புள்ள அப்பத்தான்னு அளுவுறான். அவனையும் வுடல. உள்ளூர்ல தேச்சு வுட்டா திரும்பி வந்துருவேனாம். வேளாங்கன்னில கொண்டாந்து போட்டு திரும்பி வராதன்னு அனுப்பி விட்டானுவ. கைல காதுல எதையுமே விட்டு வைக்கல. மொத்தமா போச்சு."

"
புரியுது பாட்டி. முடிஞ்சுதுல்ல. திட்னா தீந்துச்சா. வாய் வலிக்கல. "

இன்னும் இரண்டு மொடக்கு ஜூஸ்..

"மனுசம்மார கண்டாலே பதறிவருது. ஆரையும் பக்கத்தால நெருங்க விடறதில்ல. உசுரு மாஞ்சாபோதும்ல. இருக்கற வரைக்கும்தானே ஆடுவானுக.. அந்த எச்சபொழப்புக்கு நாண்டுக்கலாம்ல.. சரிதானே?"

--சற்று புரிந்த்தது. அவர் கணவர் இருந்த வரை நன்றாக பார்த்துக் கொண்டு, அவர் போனதும், பிள்ளைகளால் பிய்த்து எறியப்பட்டு இருக்கலாம். பார்த்தால் புத்தி ஸ்வாதீனம் இல்லாது போலும் தெரியவில்லை. அதனால், ஒரே ஊரில் கழட்டிவிட்டால் திரும்ப வந்துவிடலாம் என்று பயந்து வேளாங்கன்னிக்கு கொண்டுவந்து அங்கே இவர்களை அத்துவிட்டுப் போயிருக்கிறார்களோ.. இதெல்லாம் உண்மையோ பொய்யோ.. யார் கண்டார்!!--

"ஏ.. எதாவது உளறாத, சரி, இங்க வயசானவங்கள பாத்துக்க நிறைய இடம் இருக்கு.. சேத்து விடவா."

சின்னதாய் சிரிப்பு. அதுவும் முழுமை பெறுவதற்குள் ஒரு பொறுமல்.. முகத்தில் வெறுமை..

எனக்கு என்னவோ போல் இருக்க.. "பஸ் டிக்கட்டாச்சும் எடுத்து தரவா? ஊருக்கு போறியா? "

காதில் வாங்காதவாரு கிளம்பத் தயாராகிறார். புரிகிறது. இடுப்பு ஒடிவது போன்று ஒரு படார் சத்தத்தோடு சொடக்கு விழ எழுந்து, திரும்பி நடக்க..

" மதியம் சாப்பாடாச்சும் சாப்பிடறியா? வாங்கித்தரவா?"

"வேணாம்யா, உங்கிட்ட ரூவா இருந்தா கொடு. "

100 ரூபாய் எடுத்து நீட்டினேன். வாங்கி என் தலையை இரண்டு முறை சுற்றிவிட்டு என்னிடமே கொடுத்துவிட்டு
'வீட்ல சாமியுள்ள வெய்யீ. போ. தனிச்சு கிடக்காத. கெட்டசீர் வேணாம். நல்லபுள்ளையா இருக்க.'

சரி பாட்டி.. பாத்துப்போ!! என்றேன்.

"பாட்டியா? ஆத்தான்னு சொல்லுய்யா" என்றுவிட்டு சிரித்துப் போனாள்.

//மனுசம்மார கண்டாலே பதறிவருது. ஆரையும் பக்கத்தால நெருங்க விடறதில்ல.// என்று அந்தப்பாட்டி கூறியது நினைவில் வந்து சென்றது!!

கால்போன போக்கிலே மனம்.!! இறுதியாய் ஒரு நாடோடிவாசம்!!

ப்ரார்த்தனைகளுடன்,
#குரு

Saturday, January 6, 2018

!!எனக்குப் பிடித்த ராஜா!!

#குருபார்வை: 9

#காதல்நோய்!!😂😂

நம்ம வடிவேல் ஒரு படத்துல, மொட்டை ஒருத்தர் தலைல கைய வச்சுட்டு, அதை எடுக்க முடியாம (கைய எடுத்தா கடிச்சுடுவார்) மாசக்கணக்கா சுத்துவார்.
நானும் கடந்த 4 நாட்களா, ஒரு பாட்டை இப்படி பிடிச்சுட்டே சுத்திட்டுருக்கேன். விட முடியலை. ச்சை!!

(Flashback)

அஞ்சு நாளுக்கு முன்ன, ஒரு சமகால சங்கீத ராட்ஷசி (நம்ம ப்ரண்டுதான் கோச்சுக்க மாட்டாங்க) 'எனக்கு பிடித்த பாடல்' (Julie Ganapathy) பாட்டை பாடி அப்லோடு செய்துருந்தாங்க. அவங்க பாடறதப்பத்தி சொல்ல ஆரம்பிச்சா, நாலு நாள் நான் அதைப்பத்தி மட்டுமே பேசவேண்டி வரும் என்பதால், பாட்டை பத்தி மட்டுமே பொலம்பிக்கறேன்.

இத்தன நாளு இந்தப்பாட்ட ஏய்யா தொடாம விட்டோம் (இந்த ஃபர்னிச்சர ஏன் உடைக்காம விட்டோம்னும் புரிஞ்சுக்கலாம்) அப்படின்னு வருத்தப்பட்டு, சரி ஒரு முறை நல்லா கேப்போம்னு DUB ப்ளேயர்ல ரசிச்சு கேக்க ஆரம்பிச்சதும் போதும்.. இப்ப வரை 100 தபா கேட்ருப்பேன்..

இப்ப ட்ரைவிங்ல, என்னோட கூட வந்த ரெண்டு பேரு செம காண்டாகி, ' இறக்கி விட்றா ஷேர் ஆட்டோல போறேன்னு' சொல்ற அளவு ரிப்பீட்டடா கார்ல ஓடிருக்கு.
விட முடியலை.. இன்னும் ப்ளேயர் லூப்ல ஓடிட்டு தான் இருக்கு.. சட்டைய கிழிச்சுக்காம இருக்கேன். அதான் பாக்கி!!

----
ராஜா சார் லெவலுக்கு ரொம்பவே சுமாரான பாடல், இல்லைங்கல.. ஐயோ ஒரு நிமிஷம்..
ராஜா சார் பத்தி பேச பயமா இருக்கு. காப்பிரைட்ஸ் பணம் கட்ட காசு இல்லை என்பதால்..
Jokes apart.
Bass guitar என்பதோட முழு பயன்திறன் இந்தப்பாட்ல புரிஞ்சுக்க முடியுது. பாடலோட முதல் சரணத்துக்கு முன்னாடி வர்ற குட்டி வயலின் பிட்ட வச்சே பத்து பாட்டு போடலாம்.. அப்புறமா, (நிறைய பேரு நோட் பண்ணாங்களா தெர்ல) ஒரு குட்டி தபேலா கூடவே ஓடிவருது.. ப்பா.. க்ளாஸ்!!

ராஜா மனுஷனே இல்ல.. மரிஹ்வானா (Marijuana) இப்படி அடிக்டாக்கி ஆடவைக்கிறியே ராசா.. உங்களுக்கு சாவே வரக்கூடாது! இந்த சாமானியனோட வேண்டுதல்!!

----

ஷ்ரேயா தனி வெர்ஷன், விஜய் ஏசுதாசோட டூயட் வெர்ஷன்னு ரெண்டு இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சது ஷ்ரேயா தனித்தவில்தான்..

அந்தக்கா சக்கரைல தேனக்கலக்கி, ஜெல்லி மென்னுட்டே பாடும்போல.. என்ன ஒரு தித்திப்பு. யம்மீ!!

'நீ தூரப்போகிறாய்' ல ஏக்கம்..
'வானத்தில் பறக்கிறேன், மோகத்தில் மிதக்கிறேன்' சங்கதிகள்.. ஆத்தீ!! (ROFL Trivia: அந்த சங்கதிகள நான் முயற்சி பண்ணப்போ, மனசுல தோணிச்சு.. 'நீ அமெரிக்காவுக்கே திரும்பி போய்டு சிவாஜி)
ம்ம்.. ஷ்ரேயா ... ம்ம்.. ஏக்கப்பெருமூச்சு விடற ஸ்மைலி இல்லையே!!

-----

'நீர்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்,
நீ தொடும் இடங்களில்
வீணையின் தேன்ஸ்வரம்'

'மேகம்போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைகிறாய்'

இதல்லாம் படிக்கும்போதே, இது நா.மு தான்னு தெரியவருது. கஷ்டமான சூழலக்கூட ஈசியா express பண்ற அழகான கவிஞன் இன்னும் கொஞ்ச காலம் இருந்துருக்கலாம்யா நீ.. ப்ச்.. என்னமோ போ!!

---

BaluMahendra இந்த காம்போவ சேத்துவச்சு வேலை வாங்கிருக்கிங்கன்னா, இவங்களத்தாண்டின ஒரு ரசிகனா இல்லைன்னா முடியுமா.. பெரிய ரசிகன். கலா ரசிகன். RIP சார்!!

---

கடைசியா,இந்தப்பாட்டை எனக்கு ஞாபகப்படுத்தின அந்த பாடகி.

எவ்வளவோ பேரு பாடறாங்க, அவங்க பாடறதக்கேட்டு கை தட்டிட்டு போறதோட சரி. அந்தப்பாடகி எவ்வளவு அழகா பாடி இருந்தா, நான் இப்படி பித்துப்பிடிச்சு சுத்திட்டுருப்பேன். சரியான அங்கீகாரம் கிடைக்கனும்னு நான் வேண்டிக்கற பல பேர்ல அவங்களும் ஒன்னு. வாழ்நாள் பூரா நான் சந்தோஷப்பட்டுக்கற விஷயத்துல ஒன்னு அவங்களோட சேர்ந்து நானும் சில பாட்டு பாடிருக்கேன். எங்க காம்போ, எவர் சில்வர் பாத்திரத்துல ஈயம் பூசின மாதிரி இருந்தாலும், அவங்க நான் பாடறது நல்லா இருக்குன்னு தான் சொல்வாங்க. But I always use to say 'I'm no match for her brilliance' She is a divine singer. Wanna hear more. Keep it coming!!

Wish her goodluck buddies
நன்னாரு

---

ஆர அமர இந்தப்பாட்டை கேட்கவும்.. Feel it. And Deal with it 😂

#குரு

!!க்ளோபலிசைசேஷன்-2 !!

Globalஇசைzation: 2
ரஹ்மனிஸ்ட் டயரீஸ்!!

புதுசா வாக்மேன் வாங்கினேன் மச்சி, நல்லாருக்கான்னு ச்செக் பண்ணனும். நண்பன் 1998ல சொன்னது. என்ன பாட்டுப் போட்டு பரிசோதிக்கலாம்? வேறென்ன மச்சி, அதானே? அதேதான். சாங் ப்ளேயிங்..

" கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு"
மனுஷனாய்யா இவரு? எங்கேருந்து கிளம்பி வந்தாரு? அனுபமா ஐயர் கதறல இப்படியும் பயன்படுத்த முடியும்.. ஓப்பராங்கற வித்தைய, இப்படியும் உள்ள இறக்க முடியும். ஓசை வரிகள மறைச்சாலும், அதையும் தாண்டி அனுபமா.. அதையும் தாண்டி ரஹ்மன். அப்படி உருவானதுதானே இது. இதுல என்ன இன்ஸ்ட்ருமென்ட் இல்ல? எல்லாமே இருக்கு. ட்ரம்ஸ இப்படில்லாம் பயன்படுத்தி இந்திய இசைல இதுவரை நான் பாத்ததில்ல.

ஆனா ரொம்ப பிடிச்ச இடம்.. இன்டர்லூடப்போ, ட்ரம்ஸ், பேஸ்கிட்டார், கீஸ், ரிதம்ப்பேட்னு எல்லாமே கலக்கி, ஆஞ்சநேயர் கோயில் தயிர்சாதமாட்டம் சுடச்சுடக் கொடுத்துருந்தாலும், நடூல ஒரு குட்டி பேங்கோஸ் உருளும். அது அந்த தயிர்சாதம்ல உள்ள எண்ணைல வறுத்த குட்டி கருவேப்பிலையாட்டம் காணாம்ப்போனாலும், அதை தேடிக் கண்டுபிடிச்சு திங்கற சுகம்.. ஆகா.. அலாதி!! ரஹ்மானை ரொம்ப பிடிச்சுப்போக காரணம், இந்தப் பாட்டும் கூட. அந்தப் படத்து BGM கூட. ட்ரம்ப்பட்.. யம்மோவ்!!

சில குட்டிப் பாடல்கள் படத்துல சேர்ப்பாரு. அது தூக்கத்த கெடுக்கும் பல இரவுகள ஏற்படுத்திட்டுப் போகும்!!

ரட்சகனா இருந்து பல படங்களக் காத்த
ரஹ்மனிருந்தும் சறுக்கின படங்கள்ல ஒன்னு ரட்சகன். படத்துல, எல்லாரையும் தன்னோட BGMலயும் பாடல்களாலயும் கட்டிப்போட்ட புயல்.. பெப்பி குட்டிப் பாட்டும் தந்துருக்கார். Guess பண்ணுங்க பாப்போம்??. 'கையில் மிதக்கும் கனவா நீ" அப்படின்னு நீங்க யூகிச்சுருந்தா.. ஐ விக்ரம் போல நான் 'அதுக்கும் மேல'ன்னுவேன்.

"போகும் வழியெல்லாம் பார்த்தேன்"

சின்னக்குயில கூவ விட்டு, குதூகலமா அடிச்சு நகர்த்தின ஒரு பாட்டு. சிம்ப்பிளான orchestration. பெருசா instruments இல்லை. ஆர்ப்பாட்டமில்லை. கிட்டார்ல மயங்கறது foreigners மட்டுமில்ல. நாமளும் சில நேரங்கள்ல விழுத்தான் செய்யறோம். இந்தப் பாட்டுல, அந்த ஒரு ஃபினிஷிங் கிட்டார். கூடவே ரிதம்ப்பேட், பேஸ் கிட்டார்.. ஆஹா ஆஹா, ஐயோ சொக்கா, எனக்கில்ல எனக்கில்லன்னு பரபரக்க வைக்கும். கார்ல இந்தப் பாட்டு லூப்ல பல நாட்கள் ஓடிருக்கு. இப்ப கேக்கனும் போல இருக்கு. வேணாம் drug addiction மாதிரி திரும்ப திரும்ப பொரளுவேன்.

இன்னொன்னு, இந்தாளத் திட்டிட்டே கேட்டது. ஏன்னா, எனக்கு மொழி புரியல ஆனாலும் அழவச்சிட்டியேங்கற ஆதங்கம்.. 'Rang de Basanthi' Air BGMனு ஒன்னு இருக்கு. மாதவனோட மறைவப்போவும் அதோடோ சோலோ வரும். கேட்டுப் பாருங்க. கலங்கும்!

ஷாகுல் ஹமீதுங்கற ஒரு ஹை ஸ்கேல் டைனோசர இப்படி எல்லாம் கூட உள்ள இழுத்தாற முடியும்னு 'ராசாத்தி' போன்ற நிறைய பாடல்கள் அடிச்சுருந்தாலும், ரொம்பவே ரசிச்சு உம்மா கொடுக்கற பாடல்கள்
'செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே - வ.சோ.சின்ராசு'
'மாரி மழ பெய்யாதோ - உழவன்' .. அவரோட இழப்பு தமிழ் சினிமாவுக்கு மாபெரும் cavity. ரஹ்மனே இன்னொருத்தரக் கொண்டு வரனும்னு வேண்டிக் கேட்டுக்கறேன். RIP ஷாகுல்.

என்னோட கற்பனைக் காதலர்களான ஸ்வர்ணலதாவுக்கும் , SPB சாருக்கும் 'போறாளே பொன்னுத்தாயி'லயும் 'தங்கத்தாமரை' மகளேலயும் National Award கிடைக்க வழிவகுத்தவரும் இவருதான். அதனால பர்சனலாவும் ஒரு நன்றி சொல்லிக்கறேன். ஆனாலும் சொர்ணா செல்லத்த ரொம்ப ரசிச்சது ரங்கீலா 'Hey rama hey kya' தமிழ் வெர்சன்ல. பட்டாஸ்!!

சவுண்டு மிக்ஸிங்குன்னு ஒரு தனி டிபார்ட்மெண்ட் ஒன்னு படங்கள்ல இருக்குன்னு நான் புரிஞ்சுக்க ஆரம்பிச்ச காலங்கள் 2000 வாக்குல. ஆங்கிலப் படங்கள் மூலமாகத் தான் தெரியும். Post credits title பாத்துதான் தெரிஞ்சுட்டேன். ஆனா அதுல ஒரு சர்ப்ரைஸ்.

மில்லெனியம் ஆண்டுக்குப் பிறகே, பல இந்தியர்கள் ஆங்கிலப் படங்களுக்கு சவுண்டு மிக்ஸ் செய்ய ஆரம்பிச்சுருக்காங்க. (வேணும்னா இப்ப வந்த Justice league, Dr. Strange, பல Animation movies டைட்டில் கார்டுகளப் பாருங்க) இதுல பல பேரு ரஹ்மனப்பாத்து தான் inspire ஆனாங்கன்னு நான் தனியா சொல்ல வேண்டியதே இல்ல. என்னப் பொறுத்த வரை இசைன்னா MSV, ராஜா வரிசைல ரஹ்மன ஆட்சேபனையே இல்லாம நிறுத்துவேன். He deserves a lot.

சங்கீதம்ல சரளி வரிசை ஜண்ட வரிசைம்பாங்க. அது எல்லாம் என்னான்னு கூடத் தெரியாது. ஆனா ரசிக்கத் தெரியும். ரசனைக்கு எதுக்கு ஞானம்?? காதும், மூளைக்கான ரசனை ஸ்டோரேஜ்ல கொஞ்சம் இடமும் போதுமே. உலகம் பூராவுமே பல இசை மேதைகள் நிறைஞ்சுருக்காங்க. பல்வேறு இசைப் படைப்புகள் பொத்துட்டு கொட்டுது. ரஹ்மான் அந்த மேதைகள் வரிசைல முன் சீட்ல உக்காரவச்சு அழகுபாக்கறதுக்குத் தகுதியான ஆளு. மறுக்க முடியாத உண்மை.!! அப்படி முன்வரிசைல உக்காந்தாலும், அவரோட ரெண்டு காலும் , ஒரு காலுக்கு மேல இன்னோன்னு போகாது. ரெண்டுமே தரைலதான் இருக்கும். அது humility. அந்த குணாதிசயம் அவருட்டருந்து நானும் கத்துக்கனும்னு பாக்கறேன். ம்ஹூம். வரவே மாட்டேங்குது. சும்மாவா சொன்னாங்க.. Empty vessel makes more sound. Though Rehman makes more 'sound in d form of Music, he isnt an empty vessel. (இங்கிலீசுலயும் ரசனைகளப் புழிவான், அதான்லே வர்கீசு மொமண்ட்)

தரையை குனிஞ்சு பாக்கறதாலயோ என்னமோ, ரஹ்மனத் தலைவனா ஏத்துட்ட கும்பல் பெருகிட்டே இருக்கு. அந்த கும்பல்ல நானும், கடைசி ரோவுல கையத்தட்டி விசில் அடிச்சுட்டே இருப்பேன். ரஹ்மனுக்கு அந்த விசில் சத்தம் போய்க் கேக்காட்டியும், என் லவ் தொடரும்..

பிறந்த நாள் வாழ்த்துக்கள் புயலே. கரையைக் கடைசிவரை கடந்திடாம சுழட்டி அடிச்சு நவுத்துங்க. மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டட்டும். அந்தப்புயலால வெள்ளம் வரும்.. இந்தப்புயலோ வெல்லத்த தேன்ல கரைச்சு காதுல ஊத்தும். லவ் யூ மேஸ்ட்ரோ!!

வாழ்க வளமுடன்

ரசிகன்,

#குரு