Monday, December 25, 2017

!!பயணக்கைதி!!

விடியலில் இறங்கி, குடிலதில் மகிழ்ந்து,
மழலைகள் மத்தியில், மதியச்சோறு மென்று,
மாமனும் மைத்துனரும், மாலையில் அமர..
மன்றம் அமைத்து, மனம் மகிழ்ந்த்தூறி,
இருட்கவ்வியதுவும், இல்லாள் தேடி,
பொன்விடியல் பூத்ததுவும்,

"இன்றோர்விடியல் இமைக்கும் முன் பறந்திட்டது,
மற்றோர் விடியலில் வந்திறங்குவேன்
மனம்தளறாதீர்"
ஏங்குவோரிடம் இதைக்கூறி, தன் ஏக்கம் மறைத்திட்டு,
இறுதி வரை இறவாத இறந்தகாலச்
சுக ஞாபகச் சுமைகளை மட்டுமே
ஏந்தித் திரியும் இவ்வாழ்வும்,
என்றோ ஓர்நாள் இனியதாகும்.!!

எண்ணம் மட்டுமே இப்போது என்னிடம்!!
வாழ்வின் வண்ணங்களும் மாறும்..
வாசல் பார்த்துக் கிடப்பேன்.
வசந்தகாலத்திற்கான அழைப்பு ஓலை அனுப்பியாயிற்று..
தூரமில்லை.. சுமையில்லா விடியலுக்கு!!

Saturday, December 23, 2017

The God Mother

கனவு மெய்ப்பட வேண்டும்:

விடிய விடியத் தூங்காமல், பகலிலும் , மித்ரன் எதற்கோ அழுகிறான். பசியாறிவிட்டான். மீண்டும் ஏன்?
அவனது special shoeவால் ஏற்பட்ட கால் வலியாக இருக்கும், என்று எங்களை நாங்களே சமாதானப் படுத்திக் கொள்ளும் தருணம்,
சோஃபாவில் அமர்ந்துகொண்டு டிவி பார்த்தவள், புயலென எழுந்தோடுகிறாள். தம்பியின் அருகினில் அமர்ந்துகொண்டு, அவன் அழுவதைத் தாங்கமாட்டாது, மடியில் கிடத்தி பேச்சுக் கொடுக்கிறாள்.

"மித்ரா.. மித்ரா.. அழாத குட்டி. அம்மாவும் அப்பாவும் நைட்டு பூரா உன்னை தூக்கி வச்சுட்டுதானே இருந்தாங்க? நீ அழுதுட்டே இருந்தா, அவங்க பாவம்தானே. அழுதா உனக்குதானே வலிக்கும். சமத்து நீ. அழாதே..

நான் story சொல்லவா?"

மித்ரன் சற்றே அழுகை குறைக்கிறான்.

"ஒரு ஊர்ல ஒரு பாம்பு. இல்லயில்ல குரங்கு, அந்த குரங்கு மரத்துல ஏறி விளையாடறப்போ, தெரியாம ஒரு பாம்ப பிடிச்சுடுதுடா. என்ன பண்றதுன்னே தெரியலை அந்த குட்டி குரங்கனுக்கு. உடனே அவன் Friendsகிட்ட கேக்கறான். யாராவது help பண்ணுங்கன்னு"

மித்ரன் அவளையே பார்க்க.. அதற்குள் என் அம்மாவின் குரல்,.. பப்பு குளிக்க வா.

"பாட்டி, மிட்டுஷ் தனியா இருக்கான், எப்படி விட்டுட்டு வர்றது? அப்பா போன் பேசிண்டு இருக்காம்மா. நீ போ, அவனை சமாதானப்படுத்திட்டு வரேன்."

கதை தொடர்கிறது.

"அந்த மங்க்கி பயல் இருக்கானே, அவன் நாள் பூராவுமே அந்த snakeஅ கால பிடிச்சுண்டே தொங்கறான்டா. சாப்டவே இல்லை. பாவம். அழுதுட்டே இருக்கான். அப்பொ அந்த பக்கமா ஒரு யானை வந்துது. (யானை போல நடந்து காண்பிக்கிறாள்) வந்துதா.. இருவரேன்"

எழுந்து சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு அமர்கிறாள். கதை..

"யானை வந்து மங்க்கிட்ட சொல்றது, டேய் மங்க்கி.. அந்த snake செத்துப்போயி ரொம்ப நேரம் ஆச்சு."
நிறுத்திவிட்டு என்னிடம் திரும்பி..

" அப்பா, snake பாவம்தானே, அதை கொல்ல வேண்டாம்" நான் சரி என்று தலையசைக்க..

"அப்பொ அந்த யானை மங்க்கி கிட்டே சொன்னதுடா, அந்த snake மயங்கிடுத்து, நீ அதை கீழ விடு சொல்லித்தா.. குரங்கு அந்த snakeஅ கீழ விட்டுது. Snake பொத்துன்னு விழுந்துது" அதிர்ந்து சிரிக்கிறாள். மித்ரனும்!!

"இப்படித்தான்டா மித்து, மனுஷா எல்லாருமே அவங்களோட வலி, அவங்களோட சளி, அவங்க கஷ்டம்லாம் மனசுலையே வச்சுக்கறா. Overtake(overcome என்பதை அப்படிச் சொன்னாள்) பண்ணி வந்துடனும்தானே. உன்னை மாதிரி ஒரு குட்டி champ மாதிரி அந்த குரங்கு இல்லைடா. பாவம். நீ பாரேன், வலிச்சாலும் மறைச்சுண்டு சிரிக்கற அக்காவப் பாத்து " சிரிக்கச் சிரிக்க, அவனும் வலி மறந்து சிரிக்கிறான்.

இதை எட்ட நின்று கலங்கியபடி பார்த்த எனக்கு மனதில் தோன்றியது இதுவே. மித்ரனின் வருகை என்பது நாங்கள் செய்த புண்ணியம் என்றாலும், ஆராத்யா அவனுக்கு அக்காவாக வாய்த்திருப்பது, அவனது புண்ணியம். இப்படி ஒரு சகோதரி எனக்கில்லை என்று என்னை கலங்க வைத்துவிட்டாள் என் மகள். அவள் மகளல்ல வரம்!! மித்ரனுடைய God Mother!!

அவளை, அவர்களை என்றும் என் தோள்களில் ஏற்றிச் சுமந்திட அத்தனை ஆசை!!

கனவு மெய்ப்பட வேண்டும்!!

#குரு