Tuesday, February 13, 2018

!!முதுமையில் வறுமை!!

"கண்டுக்காம வாங்க. அது அப்படித்தான்." சொல்லிட்டார். ஆனால் எவ்வாறு கண்டுகொள்ளாமல் செல்வது?

ஒரு சூப்பர் மார்க்கெட்டின் அருகே ரோட்டின் ஓரம் அமர்ந்து கொண்டு போவோர் வருவோரை எல்லாம் வசவு பாடித் தீர்த்த அந்தக் கிழவிக்கு 80 வயதிருக்கும். தலை முடி உடைந்து விழும் அளவுக்கு எண்ணை மறந்த நிலை. பட்டுப்போய் உடைந்து விழும் மரக்கிளையாய் கூன் முதுகு. சுருக்கத்திற்கு நடுவில் சருமத்தை தேடும் அளவு தள்ளாமை. அவ்வளவு கோபம் கண்களில்.

ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது. ஆனால் கடந்து சென்ற ஒருவரையும் விடவில்லை. கண்களாலேயே எரித்து சாம்பலை காலில் போட்டு மிதிக்கும் அளவு கோபம். என்னையும் விடவில்லை. காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற என் காது கிழியும்படி அப்படி ஒரு கிழி. திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்ற என்னிடம் அந்த சூப்பர் மார்க்கெட் வாட்சுமேன் " கண்டுக்காம வாங்க சார். அது அப்படித்தான்" என்றதும்.. நானும் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றுவிட்டதாய் கடந்து விட்டேன்.

உள்ளே சென்று பொருட்களை வாங்கி, கார்டை தேய்த்தாயிற்று. சரி வெளியே செல்லலாம் என்றால், வைத்த கண் வாங்காமல் வாசலிலேயே நின்று 'நீ வெளியதானே வந்தாகனும்.. வாடீ !! வா' என்று என்னைக் குறுகுறுவென்று முறைக்கும் அந்தக்கிழவி. சரி ஆனது ஆகட்டும் என்று வெளியே இறங்கியதும் சரவெடியாய் திட்டு!! வடிவேலுவை ஒருவர் வாயிலேயே வயலின் வாசித்து திட்டுவதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளவும்.

ஒருவழியாக தப்பித்து பார்க்கிங் அருகே வந்து காரினுள் பொருட்களை வைத்தாயிற்று. அவ்வளவு கோபம்.
நான் ஏன் திட்டு வாங்கனும்? என்ன வர்றவங்களை எல்லாம் திட்டறது? ஒரு கை பார்த்துவிட்டுதான் மறுவேலை. திரும்ப தைரியத்தோடு அந்தக்கிழவியை நோக்கி.

ஒருவர் திட்டுவதை வைத்தே அவரின் ஊரை கணித்து விடமுடியும். அவ்வாறு அந்தக்கிழவி வீசிய வார்த்தைகளை பிடித்துப பொறுக்கி அலசியதில், அது கண்டிப்பாக சென்னைவாசி இல்லை. தென் தமிழ்னாட்டுக் கிழவி. நடப்பது நடக்கட்டும். அருகே சென்றேன்.

"#%%#-₹₹¢¢€€¢££÷||¶©°{$*

இப்ப எதுக்கு நீ கத்திட்டு கிடக்க.. யாருமே உன்ன மதிக்கல பாத்தியா?

#&-+₹₹^€π$¶£¢£ மதிக்கலைன்னா *** போச்சு.. போடா. சொல்ல வந்துட்டான். ¢€¢€∆£°\^..

இந்தா.. பசிக்குதா? எதாது வாங்கித்தரவா.? சாப்பிடறியா?

ஒரு #&&#¢£$®©√` வேணாம். பொழப்ப பாத்துட்டு போடா.

மனது கேட்கவில்லை. அதே கடையில் ஒரு ஜூஸ் வாங்கி அருகே வைத்தேன்.

"குடிக்கிறியா? இல்ல கீழ ஊத்தப்போறியா?"

சட்டென்று எழுந்து என்னை ஒரு முறைப்பு. எட்டாம் வகுப்பு கணக்கு டீச்சரிடம் பம்மிய மாணவனாய் நானும் பம்மிவிட்டு நகர முயல.

"டேய்.!!!!
இங்க வா. யார் நீ?" அதி'கார'த்தோடு

"பக்கத்துல எங்க வீடு. உன்னைய பாத்தா பாவமா இருந்துச்சு. ஆமா ஏன் எல்லாரையெம் திட்டிட்டு திரியற? எவனாவது அடிச்சுப்புட்டான்னா என்ன பண்ணுவ.."

"&&₹$¢€£¢ அடிச்சா அடிக்கட்டும். சாவுறேன். செத்தா அள்ளிப்போட ஆள் இல்ல. நாய் நரி தின்னுக்கும். "
சொல்லிவிட்டு பொறுமையாக அந்த ஜூசை எடுத்து திறக்க முயல.. மூடியை திறக்க முடியவில்லை.

"##₹¢¢€€√ என்ன *** மூடி. தெறக்கமாட்டுது. "

வாங்கி திறந்து தந்தேன்

நாலு மொடக்கு உள்ளே இறங்கியதும்,
"அதிராம்பட்டணம்ரா நாங்க. அய்யாவுன்னா எல்லாருக்குமே பரிச்சயம். அய்யாவுக்கு மூணாத்தவ. என் மூக்குத்தியே 4 பவுனுக்கு செஞ்சாக. மூணு புள்ள பெத்தும் பாத்தியா எங்க உட்ருக்குன்னு. ¢€€^€^£¶ மவனுக."

'ஏ நிறுத்து பாட்டி. இந்த கத்து கத்தினா யார் கூட வச்சூப்பா சொல்லு. வாய அடக்கு முதல்ல'.

நான் கூறியதும், அதற்கு துளி கூட சம்பந்தமில்லாமல்,

"பேசாத பேசு பேசுனா என்னைய.
%&3¢¢€€^ மவ!! அம்புட்டையும் வாரி சுருட்டிட்டு போயிட்டா. (அவர்களின் மருமகளாக இருக்க கூடும்) புள்ள அப்பத்தான்னு அளுவுறான். அவனையும் வுடல. உள்ளூர்ல தேச்சு வுட்டா திரும்பி வந்துருவேனாம். வேளாங்கன்னில கொண்டாந்து போட்டு திரும்பி வராதன்னு அனுப்பி விட்டானுவ. கைல காதுல எதையுமே விட்டு வைக்கல. மொத்தமா போச்சு."

"
புரியுது பாட்டி. முடிஞ்சுதுல்ல. திட்னா தீந்துச்சா. வாய் வலிக்கல. "

இன்னும் இரண்டு மொடக்கு ஜூஸ்..

"மனுசம்மார கண்டாலே பதறிவருது. ஆரையும் பக்கத்தால நெருங்க விடறதில்ல. உசுரு மாஞ்சாபோதும்ல. இருக்கற வரைக்கும்தானே ஆடுவானுக.. அந்த எச்சபொழப்புக்கு நாண்டுக்கலாம்ல.. சரிதானே?"

--சற்று புரிந்த்தது. அவர் கணவர் இருந்த வரை நன்றாக பார்த்துக் கொண்டு, அவர் போனதும், பிள்ளைகளால் பிய்த்து எறியப்பட்டு இருக்கலாம். பார்த்தால் புத்தி ஸ்வாதீனம் இல்லாது போலும் தெரியவில்லை. அதனால், ஒரே ஊரில் கழட்டிவிட்டால் திரும்ப வந்துவிடலாம் என்று பயந்து வேளாங்கன்னிக்கு கொண்டுவந்து அங்கே இவர்களை அத்துவிட்டுப் போயிருக்கிறார்களோ.. இதெல்லாம் உண்மையோ பொய்யோ.. யார் கண்டார்!!--

"ஏ.. எதாவது உளறாத, சரி, இங்க வயசானவங்கள பாத்துக்க நிறைய இடம் இருக்கு.. சேத்து விடவா."

சின்னதாய் சிரிப்பு. அதுவும் முழுமை பெறுவதற்குள் ஒரு பொறுமல்.. முகத்தில் வெறுமை..

எனக்கு என்னவோ போல் இருக்க.. "பஸ் டிக்கட்டாச்சும் எடுத்து தரவா? ஊருக்கு போறியா? "

காதில் வாங்காதவாரு கிளம்பத் தயாராகிறார். புரிகிறது. இடுப்பு ஒடிவது போன்று ஒரு படார் சத்தத்தோடு சொடக்கு விழ எழுந்து, திரும்பி நடக்க..

" மதியம் சாப்பாடாச்சும் சாப்பிடறியா? வாங்கித்தரவா?"

"வேணாம்யா, உங்கிட்ட ரூவா இருந்தா கொடு. "

100 ரூபாய் எடுத்து நீட்டினேன். வாங்கி என் தலையை இரண்டு முறை சுற்றிவிட்டு என்னிடமே கொடுத்துவிட்டு
'வீட்ல சாமியுள்ள வெய்யீ. போ. தனிச்சு கிடக்காத. கெட்டசீர் வேணாம். நல்லபுள்ளையா இருக்க.'

சரி பாட்டி.. பாத்துப்போ!! என்றேன்.

"பாட்டியா? ஆத்தான்னு சொல்லுய்யா" என்றுவிட்டு சிரித்துப் போனாள்.

//மனுசம்மார கண்டாலே பதறிவருது. ஆரையும் பக்கத்தால நெருங்க விடறதில்ல.// என்று அந்தப்பாட்டி கூறியது நினைவில் வந்து சென்றது!!

கால்போன போக்கிலே மனம்.!! இறுதியாய் ஒரு நாடோடிவாசம்!!

ப்ரார்த்தனைகளுடன்,
#குரு