Tuesday, January 31, 2017

!!மனைவிக்கு(ம்) மரியாதை!!


புத்தர் பற்றிய ஒரு கட்டுரையினைப் படிக்க நேர்ந்தது. படித்தவுடன், புத்தரின் மேல் இத்தனை நாள் கொண்டிருந்த  நன்மதிப்பு சற்று நசுங்குபடவே செய்திருந்தது.  புத்தர் இல்லாமல் போயிருந்தால் வரலாற்றில் எந்தவித பெரிய பாதிப்பும் இருந்திருக்கப் போவதில்லை. திருமணம் ஆகியிருக்காத எவ்வளவோ புத்தர்கள் தோன்றியிருப்பர். யாருக்கும் எந்த பாதிப்புமின்றி அவர்கள் பௌத்த சந்நியாசத்தை ஏற்றிருப்பர். ஆனால் ஏன் புத்தர் ஏற்றார்? ஏன் அவர் தனது மனைவியான யசோதராவை விட்டுச் சென்றார். அவரது மகனான ராகுலன் நிலை என்னவாகியிருக்கக் கூடும். கணவனை இழந்து அத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் ஆண்களின் வன் ஆண்மையிடத்துத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தன் முடியை மழித்து சந்நியாசியைப்போல தன்னை காண்பித்துக்கொண்ட அந்தப் பெண் புத்தரை விட உயர்ந்து நின்றாள்!! வாழ்க யசோதரா புகழ்!!

அத்தனைக் கோடி ஆண்களிருக்க அந்தப் பாழாய்ப்போன போதிமரம் புத்தரை ஏன் ஆட்கொண்டது. பிறவியிற் துறவியுமில்லை, அரசிளங்குமரன் சித்தார்த்தன். பிறகேன் இந்தப் பட்சாதாபமற்றத் துறவறம் புத்தருக்கு. ஞானவித்து தேடிவந்து புத்தரின் சிந்தைக்குள் புதைந்து ஏன் தன்னைத்தானே விருட்சமாக்கிக் கொண்டது. விதி😡😡

இன்று  , அருகிலிருக்கும் காபி ஆரிப்போவதும் தெரியாமல், கையில் மொபைலைப்பிடித்தபடி, அலையும் ஆயிரங்கோடி ஆண்களைக் கொண்ட பெண்களின் கதறல், யசோதராவை கண்முன் நிறுத்திச் செல்கிறது. புத்தனாவது புனிதம் பூண்டான். இன்றோருக்கு பொழுதுபோக்கே பௌத்தம் ஆகிப்போகிறது. அருகிலிருந்தவளை, அணைக்க வந்த குழந்தைதனை, உற்சாகப்படுத்தும் ஆயிரமாயிரம் உறவுகள், இப்படி மொபைல் இருட்டில் மூழ்கிப்போன மக்கட்தொகையோ வானளவு. ஏனிப்படி என்று கேட்டுப்பாருங்களேன், வேலையென்பர், தலையெழுத்தென்பர், இதுவே இனி வாழ்க்கை முறை, நீயும் வாழப்பழகு என்பர். வஞ்சகர்கள்!! கொண்டவளையும், குடும்பத்தையும் பற்றி அகத்தில் ஆயிரம் சிந்தனைகள் ஓடியபோதும், வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் திரியும் ஆணினம், இந்த அலைப்பேசிச் சூட்டினில் ,தான் தொலைத்த பொழுதுகளை எண்ணி என்றாவது ஒருநாள் ஏங்கிச்சாகும்.

இப்படியெல்லாம் எழுத எனக்கும் ஆசைதான். இதோடு இனி வரப்போகும் பாகத்தையும் சேர்த்துச்சொல்ல ஆசை!! 😇😇

மனைவிமார்கள் ஒன்றினைப் புரிந்து கொள்ளவேண்டும். அன்றிருந்த ஓர் போதிமரமே ஒரு ராஜ்ஜியத்தை ஆட்டியிருக்கிறது. இன்று திகட்டத் திகட்டக் கிடைக்கும் மீதி மரங்களான , அள்ள அள்ளக்குறையாத டேட்டா , வைஃபை கிடைக்கப்பெற்ற நாங்கள் என்ன செய்வோம்? இப்படித்தானே இருப்போம். தினமும் கற்கிறோம். நல்லது சில படிக்கவும், படைக்கவும் செய்கிறோம். அதையும் கவனிப்பீர் தோழிமார்களே!! அதற்குக் கொடுக்கப்படுகிற விலையின் பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் இழப்பே!!

திருமணத்திற்குப்பிறகு , நீங்கள் புக புதுக்குடி அமைத்துத்தர, படிப்பைத் தொடர, புதுப்பணி அமர, என்ற எல்லாப்பணிகளிலும் தோள்நிற்கும் ஆணினத்தை, சட்டென்று மொபைல் பைத்தியங்கள் என்று கூவலிட்டு ஓரங்கட்ட எப்படி மனம் ஒப்புகிறதோ!! எனது வேலைகளைப் பார்த்துக்கொண்டே படித்தேன் என்று மல்லுக்கு நின்றீர்கள் என்றால், இப்பொழுதும் நாங்கள் எங்கள் பணிகளை செய்து முடிப்பதில்லையா. !!

எந்தமேடை கண்டபோதும், எனை ஏற்றிய பெரும்பங்கு என் மனைவிக்கும் உண்டு என்று தனது துணைவியை முன்னிருத்திப் பேசும் கணவர்களும் இங்குண்டு. அடுத்த தலைமுறையினருக்கு தனக்குக் கிடைக்காத அறிவும் ஞானமும் கிடைக்கவேண்டும் என்று, ஏகப்பட்ட துறைகளில் தனது அறிவினை வளர்த்துக் கொள்ளத் துடிப்புடன் செயல்படும் ஆண்கள் இன்று அதிகம்.ஆங்கிலத்தில்  Versatility என்பர். எங்களிடம், என்ன வேண்டும் கேளுங்கள் செய்கிறோம். அதை எப்படிச் செய்வது என்பதைச் சொல்லுங்கள் பரவாயில்லை. மொபைலை முன்னிருத்தி  அதை ஒழித்தால்தான் உருப்படும் என்ற கருத்து சரியானதாகத் தோன்றவில்லை!!

கேவலம் லைக்குகளுக்காக  நேரங்கழிக்கும் கூட்டத்தினரோடு எங்களையும் சேர்த்துப் பேசுவது தவறல்லவா!! லட்சியங்களும் உண்டு எங்களுக்கு என்பதையும் அறிக!!
எத்தனை சண்டைகள் வந்தபோதும், தன் மனைவி  இவ்வளவுதான் என்று வெளியில் புலம்பாத கணவர்களின் மதிப்பினை, தன் தோழமைக் கூட்டங்களில் "அவர் கைல எப்போப்பாரு மொபைல்" என்ற ஒரே வாக்கியத்தில் அடித்து நொறுக்கிவிடுகிறீர்களே நியாயமா!!  டைம் டேபிள் போட்டு குடும்பத்தோடு அன்பு போற்றும்படி ஆக்கிவிடாதீர்கள். சீக்கிரமே கசந்துவிடும் . நேரம்வரும்போது, உங்களை ஏந்துவோம் உள்ளங்கைகளில். அதுவரை பொறுத்தாள்க!!

- குருப்ரம்மா -

Friday, January 27, 2017

!!மாத்தி யோசி!!

நம்ம நாட்ல கிண்டலுக்கு ஆளாகறவங்க பட்டியல் நீண்டுட்டேதான் போகுது. அன்று அரசியல்வாதிகள், சினிமாத்துறையினர் இன்று காவல்துறையினர். தப்போ ரைட்டோ, பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கித் தள்ளிட்டுருக்கோம். சிக்கின எல்லாரையுமே சிதைச்சு அனுப்பறோம். இது பெருமைப் படக்கூடிய விஷயங்களான்னு பாத்தா. லேசா முட்டுது.

இன்னைக்கு நாம எழுதற ஒவ்வொரு விஷயமும், நம்முடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பாத்து பெருமைப்பட்டுக்குவாங்களா? அட்லீஸ்ட் நாம முன்னிறுத்தின கொள்கைகள் வலியுறுத்தப்படுமா? நம்மோட இந்த புரட்சியை நாளைய தலைமுறையினரும் கொண்டாடுவாங்களா? மையக்கருத்து அவங்களுக்குப் போயி சேருமா?
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.!!

எங்கப்பா அம்மா ஒரு இனத்துக்கான போராட்டத்துல, ஒரு தமிழனா நின்னு குரல் கொடுத்தாங்க. பல துரோகங்களைத் தாண்டி அந்தப்போராட்டம் ஜெயிச்சுதுன்னு வரப்போற தலைமுறைய சொல்லிக்க வச்சுருக்கோம். ஆனா ரெண்டு மூணுநாளா, அதையும் தாண்டின வெறுப்பும், இழிவுகளும், வசவுகளுமே சமூக வலைத்தளங்கள ஆக்கிரமிச்சுருக்கு. துரோகங்கள மீறி ஜெயச்சோம்னு மார்தட்டிக்க வேண்டிய இந்த நேரத்துல, துரோகிகள ட்ரெண்டாக்கி விடற இந்த நிலை தேவையான்னு யோசிச்சா, இல்லைன்னே தோணுது.

கொடிகாத்த குமரந்தான் நின்னாப்ல, அவரை அடிச்ச ஒரு போலீஸ்காரன் பேரும் நமக்கு தெரியாதில்லையா. அதே போல நாமதான் நம்ம வரலாறுகள்ல தலையங்கமா இருக்கனுமே தவிற, துரோகிகளுக்கு இடமே கொடுக்கக் கூடாதுங்கறது என்னோட விண்ணப்பம்.

எழுதறது என் இஷ்டம் , நீ யாருய்யா கோமாளின்னு டக்குன்னு தலைப்பாவ கட்டாதிங்க. என்னோட தடத்தை விட்டுட்டுப் போகனும்னு நான் நினைக்கறேன். சுதந்திரப்போராட்டம் எப்படி இருந்துருக்கும்னு, இந்தப் போராட்டம் ஒரு முன்னோட்டம் காமிச்சுட்டுப் போயிருக்குது. இன்றைய போராளிகள், நாளைய தலைவர்களா சித்தரிக்கப் படனும்ங்கற ஆசை எனக்கு இருக்கு. அதில வேற எந்த அந்நியர்களுக்கும் இடம் கொடுத்துடாதிங்கன்னு கேட்டுக்கவே இந்தக்கட்டுரை.

துரோகங்கள் சுட்டிக்காட்டப்படலாம், துரோகிகளை தூக்கி விடவேண்டாம். துஷ்டனைக் கண்டால், தள்ளிவிட்டுட்டு முன்னேறிப் போயிக்கிட்டே இருப்பமே என்ன இப்போ!!

வாழ்க தமிழ்!!

- குருப்ரம்மா -

Thursday, January 26, 2017

!! காதல் தேடல் !!

சோலைப் பூக்களின் சாயலில் உன்முகம்,
மனதிலே பதியுதே, உன்னிடம் பணியுதே,
பூவையுன் நினைவிலே நான் வாழும் காலமே,
கறையுதே, குறையுதே, நொடிகளும் இறுகுதே !!

உன்னைக் காணாமல் என் கண்கள் நோகுமென்றால்,
என்னைச் சேராமல் உன் உயிர் வாடுமடி,
யாருமில்லாத தீவொன்றில் வாழ்வதுபோல்,
நீயும் இல்லா என் நாட்களும் தேம்புதடி!!

என்னையும் தேற்றவே , இங்கு நீ தேவையே,
ஓடிவா, ஓடிவா என்னிடம் ஓடிவா!!

(சோலைப் பூக்களின் சாயலில் உன்முகம்,
மனதிலே பதியுதே, உன்னிடம் பணியுதே,
பூவையுன் நினைவிலே நான் வாழும் காலமே,
கறையுதே, குறையுதே, நொடிகளும் இறுகுதே !! )

நீயும் இல்லாத நானிங்கு பாதியென்பேன்
எந்தன் வாழ்வின் ஆதாரம் நீ மீதியென்பேன்,
ஓடும் நம் காலம் வேறாகிப் போகுமென்றால்,
வாடும் பயிராக உன் முன்னே உதிர்ந்திடுவேன்!!

தேடலின் சுகத்திலே, காதலும் விளங்குதே
தேடிவா, தேடிவா சீக்கிரம் தேடிவா!!

(சோலைப் பூக்களின் சாயலில் உன்முகம்,
மனதிலே பதியுதே, உன்னிடம் பணியுதே,
பூவையுன் நினைவிலே நான் வாழும் காலமே,
கறையுதே, குறையுதே, நொடிகளும் இறுகுதே !! )

- குருப்ரம்மா -

Saturday, January 21, 2017

!!சுய தமிழ்ப்பெருமை!!

எங்களது உறுதிமொழி!!

அறக் கயிறுகளை தனக்குத் தானே கட்டிக்கொண்டு,
ஆண்மையதின் பொருளதனை நன்குணர்ந்து,
குலம் பேசப் பல பெருமைகளீட்டுவதாய்,
உளமாற உறுதி பூண்டு,
வீரமதன் விளைநிலமாம் தமிழகத்தின்,
தீரமது பெண்மையைப் போற்றுதலாம் என்பதறிந்த,
இளைஞர் படை இன்றெங்கள் முன்னிற்கிறது!!

மென்மையுடைத் தமிழ் மாதர்குலமே பெருமைகொள்
உன் பெண்மை காத்திட இங்கு கோடி ஆண்கள் துணையுண்டு!!

இனி என் தமிழ்த்திருநாட்டில்
"பயிர்களை வேலிகள் மேயாது,
பெண் உயிர்களை ஆணினம் வதைக்காது"
                       - குருப்ரம்மா-

!!எடுத்துக்காட்டான எங்கள் தலைமுறை!!

நேற்றிரவு நல்லிருட்டினில் மெரினாவில் கண்ட காட்சி

ஆங்காங்கே கூடி நின்ற கும்பல்களில் ஒன்றினில் நான் நிற்க, அங்கே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இரண்டு பெண்கள் கோஷமிட்டு போராடிய வேளையில், திடீரென்று ஓரு பெண் குரலிட்டாள்

" அண்ணா ஒரு நிமிஷம்ணா. என் ஹேண்ட் பேக் (கைப்பை) மிஸ்ஸாகிடுச்சு.

கோஷத்தை உடனடியாக நிறுத்திய இளைஞர்கள் சற்றே பதற்றமாக " ஏம்மா, நீ கவனிக்கலையா?"

"இல்லைங்கண்ணா, ஆபீசுலருந்து நேரா வந்தேன், லஞ்ச் பேக்லதான் இருந்துச்சு. மொபைல வெளிய எடுக்கறதுக்காக எடுத்தேன். திரும்ப உள்ள வச்சேனான்னு தெரியல"

"பணம் எதும் வச்சிருந்தியாம்மா"

"ஆமாணா, முன்னூறு நானூறு ரூபா இருக்கும். உள்ள என்னோட ஐடி கார்டும் இன்னொரு மொபைலும் இருக்குது. "

அப்போ உடனடியா அந்த மொபைலுக்கு ட்ரை பண்ணும்மா" என்று சொல்லி முடிப்பதற்குள் இருபதடி தூரத்தில் ஒரு சலசலப்பு.. ஓரு ஆரஞ்சு நிற கைப்பை உயர்த்திக்காட்டப்பட்டது. அருகில் வரவழைத்து அந்தப்பெண் கையில் கொடுத்து "இதுதானேம்மா, பணம் சரியா இருக்கா பாத்துக்க" என்றவரிடம்

"அதல்லாம் இருக்கும்ணா" என்று பையை பிரித்துப்பார்க்காமல் சிரித்துக்கொண்டே சொன்னார் அந்தப்பெண்.

"ஆபீசுலருந்து நேரா வரேன்னியே, சாப்பிட்டியா" அடுத்த கேள்வி.

"ஆச்சுங்கண்ணா, ரொம்ப தேங்க்ஸ்"

"வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்"!! தொடர்ந்த்தது போராட்டம்.

இதில் எதை உயர்வென்பது?
பையோடு பணமும் மொபைலும் கிடைக்கப்பெற்றும் , அதை  திரும்பக்கொடுத்த இளைஞர்களின் நாணயத்தையா..

இல்லை அதைக்கையில் வாங்கியவுடன் சோதித்துப் பார்க்காத அந்தப்பெண்ணின் நன்றி மேலோங்கிய நம்பிகையையா.. இரண்டுக்குமே தலைவணங்கியே ஆகவேண்டும்.

எங்களைப் பொறுக்கிகள் என்று ஏளனமிட்டவருக்கு ஓரு விஷயத்தை தெளிவு படுத்திக் கொள்கிறோம்.

தனியாய்க் கிடைத்த #நிர்பயா மீது பாய்ந்து வெறி தீர்த்த உத்தமர்கள் வாழும் இதே திருநாட்டில்

பதட்டத்தில் வெளிறிய பெண்களை நிற்கவைத்து பயம்போக்கித் தேற்றும் பாங்குணர்ந்த பொறுக்கிகளும் வாழ்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

#தமிழர்கள்

Sunday, January 8, 2017

!! வாழ்வோட்டம்!!


மாரத்தான் ஓட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நானும் சில மாரத்தான் ஓட்டங்களைக் கடந்திருக்கிறேன். எனது வாழ்க்கையோடு அது எந்த வகையில் ஒத்துப்போகிறது என்று ஒரு சிறு பார்வை. அட்வைசெல்லாம் இல்லை. நம்பிப் படிக்கலாம்.

இனிய தொடக்கம்:

நல்ல பயிற்சிக்குப் பிறகு, ஓடத் துவங்கும் முன் அன்றைய சீதோஷண நிலை, மற்றும் கடக்கும் பாதை, தூரம் இதையெல்லாம் கருத்தில் கொண்டு உடையணிந்து செல்கிறோம். பிறகு ஓட்டத்திற்கு முன் Stretches செய்வது வழக்கம். அதாவது, ஓடும்பொழுது எந்தெந்தப் பாகங்களுக்குத் தேய்மானம் அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டு அவைகளுத் தகுந்தார்ப்போல அந்தப்பாகங்களை flexible ஆக மாற்றிக்கொள்ள சில பயற்சிகளை மேற்கொள்வோம். அதாவது, இன்று நான் யார் என்று தன்னிலை அறிந்து, எனது வாழ்க்கைப்பயணம் எப்படி இருக்கப்போகிறது என்று forecast செய்து அதற்கு தகுந்தாற்போல எனை நானே வளைத்துக்கொள்வது. உதாரணத்திற்கு, வருங்காலத்தில், எனது வாழ்க்கைத்தரம் எவ்வாறு அமைய வேண்டும் என்று யோசித்து, அதற்கேற்றாற்போல எனது படிப்பு, வாழ்க்கை முறை ஆகியனவற்றை வடிவமைத்தல்.

தன்னையறிந்தால்:

Pacer எனப்படுகிற expert மக்கள் நம்முடனே ஓடி வருவர். உதாரணத்திற்கு, 42 கிலோமீட்டரை நான் கடக்க வேண்டும். நம்மால் அது 6 மணிநேரத்தில் முடியுமா, 5 மணிநேரத்தில் முடியுமா, என்று நம்முடைய வேக சராசரியை நாமே கணக்கிட்டு, அவர்களோடு ஓடி வருவோமாயின் எல்லைக்கோட்டினை குறித்த நேரத்தில் தொட்டுவிட முடியும். அதற்கு தேவைப்படுவது, நிலையறிந்து முடிவெடுத்தல் என்கிற நற்குணமே. நம்முடைய காலத்தில், எல்லா கட்டத்திலும், குரு எனப்படுகிற ஆசான்கள், நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு உந்து சக்தியாக உடன் வந்துகொண்டே இருப்பர். யார் எனது குரு என்று முடிவெடுப்பதே என் வேலை. அதை சிறப்பாக செய்வேனாயின், முடிவும் சிறப்பாக அமைந்துவிடும். படிப்பு, வேலையில் கிடைக்கும் சான்றோரை இதற்கு உதாரணமாக ஒப்பிடலாம்.

ஓட ஆரம்பிக்கும்போது, நமக்கு முன்னால் உள்ளவர்கள் ஓடும்வரை காத்திருந்து, கூட்ட நெரிசலில், முதலில் நடக்க  ஆரம்பித்து, பிறகு பொறுமையாக வேகத்தைக்கூட்டி ஓடத்துவங்கவேண்டும். வாழ்விலும், நமக்கு முன் அடி எடுத்தோருக்கு வழிவிட்டு, பிறகே நாம் முன்னேற எத்தணித்தல் நலம். எடுத்த உடன் ஓடினால், இடித்து விழுவோமே தவிற, முன் செல்ல முடியாது.

வேகத்தைக்கூட்டுகிறோம் சரி, எடுத்த உடன் வேகமாக ஓடலாமா?? கூடவே கூடாது. ஏன் கூடாது. நமது உடல்நிலை நாமறிவோம். எனக்கே உண்டான வேகத்தை மனதில் கொண்டு அடிமேல் அடி எடுத்து , ஓடுகிற பாதையின் வடிவத்திற்கேற்றாற்போல ஓடத்தொடங்கும்போது, எனது வேகத்தை சீராகத்தொடர முடிகிறது. நடைமுறையிலும் "ஓவர் நைட் ஒபாமா" என்பது கண்டிப்பாக கனவே. இன்று நான் எந்நிலையில் உள்ளேனோ, அதையே சீராகச் சிறிது காலம் தொடர்ந்தே ஆகவேண்டிய சூழ்நிலை!! வேகமாக முன்னேறத் தோன்றினாலும், ஒரு கட்டத்தில் மூச்சிறைக்க நின்றே ஆகவேண்டும் என்கிற பயம், எனக்குள் இருக்குமேயானால், எனது பயணத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள, நல்ல foundationஐ அமைத்துக்கொள்வேன்.

யாதும் யாவரும்:

நாம் ஓடும்பொழுது, நம்முடன் பலரும் உடன்வருவர். சிலர் அவர்களது potentialக்கு ஏற்றவாரு வேகமாக நமைத் தாண்டிச் செல்வர், சிலர் பின்தங்குவர், முன்னே செல்பவரைத் தாண்ட நினைத்து திட்டமின்றி வேகமாக ஓடினால், தாக்குப்பிடிக்க முடியாமல் போய்விடலாம். பின்னால் வருவோர் கண்டு மெத்தனம் காட்டினால், நமது ஓட்ட நேரத்தை நாமே கூட்டிக் கொள்வோம். வாழ்விலும், தெரிந்தவர் தெரியாதவர் என்று யாராக இருப்பினும்,  எனது அடிகள் அளந்து செயல்படுவேனாயின் நான் கடக்க நினைத்த தூரத்தை இலகுவாக கடக்க முடியும்.

ஓடும்பொழுது குறிப்பிட்ட தூரங்களில், நம்மை refresh செய்துகொள்ள refreshment சென்டர்கள் அமைத்திருப்பர். தண்ணீர், வாழைப்பழம், ஆரஞ்சு, அங்கே வழங்கப்படும். கடக்கும் தூரம் அதிகம் என்று, அவை அனைத்தையும் தவிர்த்தேன் எனில், ஒரு கட்டத்தில் சுருண்டு விழுந்துவிட நேரிடும். அதை நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் எனலாம். எனது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக இறைவனால் அனுப்பப்பட்ட உற்றாரை தவிர்த்து முன்னேற நினைத்தால்.. கண்டிப்பாக ஒரு கட்டத்தில் அந்த முன்னேற்றம் தடைபட்டே ஆகும். அவர்களுக்கென்று ஒதுக்கப்பட வேண்டிய நேரம், ஒதுக்கப்பட்டே அகவேண்டும். எப்படி, எவ்வளவு என்பது நமக்கு தெரிந்திருத்தால் வாழ்க்கை சுவர்க்கமே.

"ஊக்குவித்தால், பாக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்" என்றார் வாலி. ஓட்டத்தின்போது எனது குறிக்கோள் முடிவுக்கோடாக இருந்தாலும், உடன் ஓடி வருபவரை ஊக்குவித்துக் கொண்டே ஓடுவது வழக்கம். தேங்கி நின்றோர், எனது கைத்தட்டல் கேட்டு வேகமாக ஓடத்துவங்கலாம். நான் கைத்தட்டுவதைப் பார்த்து, இன்னொருவர் கைத்தட்டத் துவங்கலாம். அதனால் ஒரு கட்டத்தில், நான் மூச்சு வாங்கி நிற்கும்போது எனைத் தேற்றி விட இருகைகள் வரலாம். இதற்கு ஆரம்பம் நானே. பாராட்டைத் தாண்டி ஒரு உதவி இல்லை. வாழ்விலும், பல நேரங்களில் தேங்குபவனைத் தூக்கிவிடத் தேவையிருக்காது. "உன்னால் முடியும் நண்பா, இப்படித்தான் இருக்கும். கொஞ்சம் முயற்சி பண்ணு. ஜெயிச்சுடலாம்" என கைத்தட்டிக்கொண்டே ஓடுவேனாயின் "பூமராங்" போல, நானும் ஒரு கட்டத்தில் பலனடைவேன். அடைந்து கொண்டும் இருக்கிறேன்.

கோடிட்ட இடத்தை தாண்டி:

முடிவுக்கோட்டை தொட்டுவிட்டேன். மெடல் வாங்கிவிட்டேன். அப்படியே திரும்ப வீட்டிற்கு சென்றுவிடுவேனா? கண்டிப்பாக மாட்டேன். Post run stretches செய்தே ஆகவேண்டும். ஏன்? ஓடிய தேய்மானத்தில் உடற்பாகங்கள் ஆங்காங்கே பிடித்துக்கொண்டும், வலித்துக்கொண்டும் இருக்கும். அந்த நேரத்தில் அது தெரியாவிடிலும், கண்டிப்பாக மறுநாளோ அல்லது அந்த வாரத்திற்குள்ளோ, வேறு சில பெரிய பிரச்சனைகளை இழுத்துவிடலாம். ஏனென்றால் அடுத்த ஓட்டம் இன்னும் சிறிது காலத்தில் ஓடியாக வேண்டும். மனோரீதியாக, வலியைப் பிரதானமாக உணர்ந்தால், கண்டிப்பாக இனி ஓடவே கூடாது என்று எனக்குள் எண்ணம் வந்துவிடும். ஆனால் என் இலக்கு ஓடக்கொண்டே இருக்க வேண்டும் என்பதேயில்லையா?? , மாரத்தானுக்கு இலக்குண்டு. ஓட்டத்திற்கு இல்லை. எனது பணி என்னை நான் செதுக்கிக் கொள்வதே.

ஏன் வம்பு, பத்து நிமிடம் ஒதுக்கி, கை கால்களை நன்றாகச் அமுக்கிவிட்டு, தாஜா செய்து வலியைக் குறைத்தபின்னரே வீட்டிற்கு செல்வது சிறப்பு. இயல்பு வாழ்விலும், கனவுக்கு எல்லையுண்டு, முன்னேற்றத்திற்கு இல்லை. அடுத்த அடி எடுத்து வைக்கும் முன், கண்டிப்பாக சிறிது ஓய்வு தேவை. வார இறுதியில் விடுமுறை தினங்கள் அமைக்கப்பட்டதே அதற்குத்தானே. விடுப்புதான் எடுப்போமே!! உழைத்துக்கொண்டே இருக்கவா உருவமெடுத்திருக்கிறோம்? வாழத்தானே வாழ்க்கை.!!

மாரத்தான் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. மாரத்தான் ஓடினால்தான் இது புரியும் என்பதில்லை. உலகில் அனைவருமே ஓடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.
" அனுபவித்து வாழுங்கள், நாட்களைக் கடத்தாதீர்கள்"  என்பதே சாராம்சம். !!

வாழ்க வளமுடன்.

குருப்ரம்மா

Thursday, January 5, 2017

!!க்லோபலிசைசேஷன்!!

இன்னைக்கு இசைப்புயல், இந்தியாவோட ஐகான், அல்லா ரெக்கா ரெஹ்மானுக்கு பிறந்தநாள்.

நம்ம புயல் இருக்காப்லையே, அவரை ரொம்ப ரொம்ப பிடிக்க காரணமாக இருந்த படம் 'டூயட்". ஃப்யூஷனை கையாளத்தெரிஞ்ச வெகுசில பேர்ல, புயலும் ஒருத்தர். Sax அப்படிங்கற இசைக்கருவி, கர்னாடக சங்கீதத்துக்குன்னே டிசைன் செய்து படைக்கப்பட்ட ஒன்னு!! அதை கைல எடுத்து, மெட்டுப்போடு, என் காதலே என் காதலின்னு இரண்டு பாடல்களோட உயிரோட்டமா அதைக்கொடுத்து, டிஜிட்டல் டிமனா தன்னை பிரம்மாண்டமா காமிச்சு, மத்தவங்கள திரும்பிப்பாக்க வச்சாப்ல.

அது மட்டுமா?? பாட்டுக்குள்ள ஸ்வரங்கள கோர்வையா கொண்டு வந்து, அதை நவீன இசைல புகுத்தற வித்தை, ஞானிக்கும் , புயலுக்கும் அத்துப்படி. அவரு கூட்டத்திலே கோயில்புறால, இவரு மெட்டுப்போடுல.. கேட்டாலே புல்லறிக்கும். கேட்டுப்பாருங்க..

அலைபாயுதேல "மாங்கல்யம் தந்துனானேனால "ஆரம்பிச்சு, "என்றென்றும் புன்னகைல" தொடர்ந்து, கேக்கற அத்தனை பேரு முகத்துலையும் புன்னகை இழையோட விட்டுருப்பாப்ல.

இந்தியன்னு படம், சேனாதிபதி, விடுதலை போருக்காக கிளம்புவாப்ல, அப்போ சுகன்யாக்கா தடுத்து எப்போ வருவிங்கன்னு கேக்கும். இரு ஆத்தான்னு சொல்லி கைல கொஞ்சம் குங்குமத்த அள்ளிக்கொடுத்துட்டு, நெத்தில பொட்டும் வைப்பாப்ல, சீனே சோகத்துல வயித்தப்பொறட்டும், திடீர்னு ஒரு ஷெனாய் எடுத்துட்டு வந்து கலங்கடிச்சுருப்பாப்ல நம்ம புயலார். அந்த ஷெனாய் பீசு இதோ..

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட க்ளைமேக்ஸ்ல என்ன சொல்லப்போகிறாயவும், கல்யாண கெட்டிமேளத்தையும் மிக்சில போட்டு அடிச்சு விருந்து வச்சிருப்பாரு. ட்ரிக்சான மூசிக் அது!! தலைக்கு தில்ல பாத்தியா??

ஹீப்ரிஷ் க்றிஸ்டியானிட்டிக்கும், நாதஸ்வரத்துக்கும் என்னய்யா சம்பந்தம் "
அன்பில் அவன்னு " ஒரு பாட்டு, விண்ணைத்தாண்டி வருவாயா படம். கேட்டிங்கன்னா அந்த சிங்க் புரியும்.. என்ன ஒரு மூளைப்பா. சாமி..

அதே படத்துல ஓமனப்பெண்ணே, கல்யாணிமேன்னோட பேஸ் குரலோட க்ளாசிக்கல் வோக்கல் கார்டுக்கு டிஜிட்டலைசுடு அவுட்ஃபிட் மாட்டி அழகுபாத்துருப்பாரு!!

ஸ்லம் டாக் மில்லியனர், இந்த இசைக்குழந்தையோட சாதனைக்கு பரிசா  ரெண்டு ஆஸ்கர் பொம்மைகள பரிசா தந்த படம், "Mausam and Escape" பிட்ல, க்ளாசிக்கல் சித்தாரோட பேஸ் கிட்டார் பிசைஞ்சு ஊட்டி, வயிறும் மனசும் நிறைய விட்டுருப்பாப்ல..

இது போக, ரிதம், ரோஜா.. நான் அடிக்கடி லயிக்கற இசை கோர்வை.. ரிதம்ல கடைசியா அந்த பையன் ஊரை விட்டுப் போர் அர்ஜுன பாக்க வரப்போ ட்ராஃபிக்ல பஸ் மாட்டிக்கும்.. அந்த தவிப்ப நமக்குள்ளையும் வயலின் கம் கிட்டார் மூலமாக புகுத்தி பின்னிருப்பாப்ல!!

ஜோதா அக்பர், ராக்ஸ்டார், ரங்கீலா, ஹிந்தில நான் ரொம்ப ரசிச்ச இவரோட பின்னணி இசை உள்ள படங்கள். எல்லாத்துக்கும் மேல மணிமகுடமா "வந்தே மாதரம்". ப்பா!!
அவரோட கோர்வைகள் ஆயிரக்கணக்குல இருக்கு. எழுதினா இருபத்தி அஞ்சு ட்விட்டர், பத்து ஃபேஸ்புக்கு தேவைப்படும்.

புதுப்புது பின்னணிப் பாடகர்கள அறிமுகம் செய்யறாரு. இதில்லாம KM music observatoryன்னு ஒரு காலேஜ் ஆரம்பிச்சு புது இசைய சொல்லித்தராப்ல. தலைக்கனம் இல்லாத மனிதர்.  நல்லாருங்கய்யா.

இசைங்கறது மக்குப்பயகூட பல்லக்காட்டிட்டே கேக்கற ஓரு சமாச்சாரம். உலக இசை மேதைகள்லாம் திரும்பிப் பாக்க வைக்கற இசையமைப்பாளர்கள் வாழ்ந்த ஒரு எரால நானும் இருந்தேன்னு சொல்லிக்கறது பெருமை. அந்த வகைல இவர் எனக்கு ரொம்பவே நெருக்கமானவர்.  கொடுத்துட்டே இருங்க, சாப்பிட்டுட்டே இருக்கோம். வேண்டாம்னு சொல்லவே மாட்டோம்.

ஒரு தெய்வம் தந்த பூவே!! ரெஹ்மானே!! வாழ்க வளமுடன் சார்!! நாதமும், ஸ்வரமும் உள்ள காலம் வரை, நீடூழி வாழ்க!!

குருப்ரம்மா