Sunday, June 6, 2021

மீண்டும் நான்

#மீண்டும் நான்: 

"ஏசப்பா!! ஒரு வழியா தூங்கப்போனான். இவன தூங்கவைக்கறதுக்குள்ள நமக்கு டயர்டாகிடுது. இவன விட்டுட்டு அப்படி என்ன "ணொண்ணன் (அண்ணன்) housewarming வேண்டிக்கெடக்கு அவளுக்கு!! 

புலம்பியபடி வந்து சோபாவில் சாய்ந்து. "ப்ளே" பட்டனை அமுக்கினான்.

டிவியில் படம் ஓடிக்கொண்டிருந்தது. தனியாக உட்கார்ந்து திகில் படம் பார்ப்பது என்பது தாமசுக்கு (Thomas) ஒரு கிக்தான். வியாழன் இரவு, அடுத்தநாள் மெடிக்கல் லீவின் காரணமாக ஆபீஸ் போக வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், அவனுடைய 10 வயது மகனுடன் மாரடித்து ஓட்ட வேண்டிய நிர்பந்தம். ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்பா தாமஸ்.
காலில் அடிபட்டிருந்தபடியால், எமியின் அண்ணன் விழாவிற்கு அழைத்தும் செல்ல முடியவில்லை. வீட்டில் மனைவி இல்லையென்றால் குஷிக்குப் பஞ்சமா என்ன!! 

 அன்று, அக்டோபர் 12, அவனது மூத்த சகோதரன் ஜாஸனின் (Jason) நினைவு நாள்கூட. திடீரென்று அவன் நினைவு நிழலாடியது தாமசுக்கு!!

- - 

உயிரோடு இருந்த வரை எவ்வளவு பிரச்சனை, சொத்துத் தகராறென்றாலும், அரக்கன் போல தாமசைத் தாக்கியிருந்தான் அவன். ஆனாலும், அவனது துர்மரணம் தாமசுக்கு ஒரு இழப்பாகத் தான் இருந்தது. உதகையில் ஏற்பட்ட ஆக்சிடென்ட் ஒன்றில், தனது மனைவியுடன், காரிலேயே எரிந்து சாசொன்னதுகிப் போயிருந்தான் ஜாஸன். அவன் இறந்து 13 வருடங்களாகிறது. அவனது சொத்துக்களும் தாமசுக்கே கிடைத்தது. அவனது தாயாருக்கு ஜாஸன் என்றால் ஒரு தனி அக்கறை. ஜாசனுக்கும், அவனது தாய் மேல் உயிர். அவன் உயிரோடிருந்தவரை அம்மாவை அவனுடனேயே வைத்துப் பார்த்துக்கொண்டான்.

அந்தக் கோர நிகழ்வுக்குப் பிறகு, தாமஸ், அம்மா மற்றும் தன் மனைவி எமியுடன் திருச்சியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டான். பிறகென்ன, தாயார் மரணம்,  குழந்தை, வேலை, வாழ்க்கை என்று ஒவ்வொன்றாக வர,  பிசியாகிப் போனான் எல்லாவற்றையும் மறந்து. ஊருக்கு வெளியே, ஒரு பழைய வீட்டை லோனில் வாங்கி செட்டில் ஆகியிருந்தான். ஒதுக்குப்புறமான வீடு. அமைதியான வாழ்வு!! ஆனால் இந்த வருடம் என்னவோ போலிருந்தது.
- - 
அக்டோபர் 13!! நேரம் 12:05 AM.

படம் ஆரம்பித்தவுடன், சோபாவில் என்னவோ முதுகுப்பக்கம் இடிக்க, கைகளால் வெளி எடுத்தான். 
"The Holy Bible". திடீரென்று எதோ துர்நாற்றம்!!

 சட்டென்று கரண்ட் போக, கும்மிருட்டில், செய்வதறியாது
"எபி!! (Ebbie)" என்று குரலிட்டான். எபி தாமசின் 10 வயது மகன். படு சுட்டி. அவனைக் காண்போர் அனைவருமே, "அப்படியே பெரியப்பா சாயல்" என்று சொல்லும்போதெல்லாம், தாமசுக்கு கோபமாய் வரும். கோபமும் அப்படியே அவன் பெரியப்பனைப் போலத்தான். முறைத்தால் கண் சுருங்கும், கன்னம் சிவக்கும். 

"எபி".. தூங்கறியாடா? 

பதிலில்லை.. தூங்கிட்டான் போல!! முனகிக்கொண்டே தாமஸ் சோபாவிலேயே கண்ணசற.. நிசப்தம். 

" டமார்" என்னமோ பெரிய சத்தம் மாடியில் இருந்து. 

"எபி.. டேய் என்னடா பண்ற", என்று பதறிய தாமஸ், எமர்ஜென்சி டார்ச் எடுக்க, பெட்ரூம் போனான்.

"வச்சது வச்ச இடத்துல இருக்காதே, அதானே இருந்துட்டா அது நம்ம வீடே இல்லையே. நம்மள சொல்லுவாளுக பொறுப்பில்லைன்னு.. இவளுக..

சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

அந்த இருட்டினில், காலை உரசிக்கொண்டு எதோ ஓடியது. 
" அம்மா!!" என்று அலறியேவிட்டான் தாமஸ். திடீரென்று காலருகே, சூடான ஒரு திரவக்கசிவு. தொட்டுப் பார்த்தவன் பதறிப்போனான். பிசுபிசுவென, ரத்தம் போன்ற ஒரு வாடை. அவன் அடிபட்ட காலில் இருந்து வருகிறதா என்று சோதித்துப் பார்த்தான். இல்லை. அவன் முனகிக்கொண்டே தாமஸ்  

"ஐயோ!! எபிக்கு எதுவும் ஆகியிருக்குமா? "

"எபி.. டேய் எங்கடா இருக்க" என்று படுக்கையில் தேடினான். எபி அங்கு இல்லை.

மாடியில் சத்தம் கேட்டதே என்று நினைத்துக்கொண்டே, தீப்பெட்டி மட்டும் எடுத்துக்கொண்டு இருட்டில் மாடிப்பக்கம் ஏறினான். படிக்கட்டுகள் வந்தபோது குச்சி அணைந்தது. இன்னொரு குச்சி ஒன்றை எடுத்துப் பற்றவைத்து நிமிர, தூரத்தில் படியில் இரு பளிச் கண்கள் அவனை நோக்கித் தாவ,  பதறிப்போய் கீழே விழுந்தான் பயத்தில். பட்ட காலிலேயே மீண்டும் அடிபட, எழ முடியாத வலியில் துடித்தான். 

"எபி.. எபி கண்ணா. எங்கடா இருக்க!!" வலியில் சத்தமும் கம்மியாகத்தான் வந்தது. ம்ஹூம், சுற்றி நிறைந்திருந்த இருட்டின் ஊளைச் சத்தம் மட்டுமே பதிலாகக் கிடைத்தது. 
 
தீப்பெட்டி சிதறிக்கிடந்தது. ஒரு வழியாக, எழுந்து குச்சிகளைத் தேற்றி பற்றவைத்தான், அந்த தூரத்துக் கண்கள் இப்பொழுது இல்லை, சற்றே பிடிப்பு வந்தவனாய் அடுத்த அடி நகர, மீண்டும் காலைக் கிழித்தபடி எதோ ஒன்று ஓட, தாமசுக்கு கிலி பிடித்துக்கொண்டது. 

வேகமாக மாடியை நோக்கி முன்னேறினான், 

"எபி!! எபி!! 

அப்பா..!! 

திடீரென்று சத்தம் கீழிருந்து மேலே வர, 
எபி!! என்று கத்திக்கொண்டே தாமஸ் படியிறங்கி ஓடினான். அங்கே எபி இல்லை. 

தாமஸ் அழவே தொடங்கிவிட்டான், எபி இனி உன்னைத்திட்ட மாட்டேன்டா. வந்துடுடா.. ப்ளீஸ் என்று கலங்கி நின்றான். 

சட்டென்று என்னவோ பொறி தட்ட, சோபா பக்கமாக ஓடினான், பைபிளைத்தேடி.
வைத்த இடத்தில் பைபிள் இல்லை. தாமசுக்கு இப்பொழுது மெல்ல கவனம் தன் அண்ணன் பக்கம் சென்றது. 
நேற்று அவன் நினைவு தினம். அவன் கல்லறைக்குக் கூட சென்று பார்க்கவில்லை. என்னதான் இருந்தாலும் அண்ணன். அவன் எதிர்ப்பார்க்க மாட்டானா?  

அவன்தான் ஆவியாக வந்திருக்கின்றானோ என்று குழம்பியபடியே திரும்ப, பின்னால் எபி தாமசை முறைத்தபடி நின்றிருந்தான். கையில் கத்தி!! 

"டேய் எபி" என்று கலங்கியபடி கட்டிப்பிடிக்க வந்த தாமசை விலக்கிவிட்டு ஓடினான். இருட்டில் சட்டென்று மறைந்த அவனை பின்தொடர்ந்தான் தாமஸ். 

டங்!! 

கடிகாரப் பெண்டுலம் அயராது அதன் பணியைச் சரியாகச் செய்து கொண்டிருந்தது. எபியின் பின்னால் ஓடிய தாமஸ் மூச்சிரைத்தபடி வீட்டின் கொல்லைப்புறத்தில் நிற்க, சிறிது தூரத்தில் எபி, எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான்!! தாமஸ், பக்கத்தில் சென்று பார்த்துவிட்டு, மூக்கைப்பொத்திக் கொண்டு, என்ன என்று பார்க்க, ஓரு கருப்புப் பூனை, கழுத்து அறுந்த படி செத்துக்கிடந்தது. 

எபியின் கைகளில் ரத்தம் படிந்த கத்தி. தாமஸ் பயத்தில் சப்தநாடியும் ஒதுங்கிப்போய் நிற்க, மெதுவாக தாமசை முறைத்தபடி கூரான பார்வையுடன் திரும்பினான் எபி! தாமஸ் மெதுவாக பின்னோக்கி நகர, காலில் எதோ தட்டியது. தடவிப் பார்த்தான்.

The Holy Bible. எதோ பிடிப்பு வந்தவனாய் அதைக் கையில் எடுத்துக்கொண்டு, எபியின் அருகில் சென்றான்!! கத்தியைக் கீழே போட்டுவிட்டு அப்படியே மயங்கிச் சரிந்தான் எபி. பிள்ளையைத் தூக்கிக்கொண்டு உடனே வீட்டினுள் ஓடிக் கதவைச்சாத்தினான் தாமஸ். இருட்டில் அங்கும் இங்கும் இடித்துக்கொண்டாலும், கையில் Bible இருக்கும் நம்பிக்கையில் ஓடினான். ஹாலில் தான் அமர்ந்திருந்த சோபாவில் உட்கார்ந்தவன். பிள்ளையை மடியில் போட்டபடி அவன் முகத்தில் தண்ணீரால் துடைக்க, எபி எழுந்தான். 

அப்பா!! என்று தாமசைப் பார்த்து எபி அழைக்க, தாமஸ் அவனைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டான். எபியை ஆசுவாசப்படுத்திவிட்டு, 

"சோபாவிலையே இரு எபி, மாடிப்படிக்கிட்ட தீக்குச்சி இருக்கு. எடுத்துப் பத்தவைச்சுட்டு வரேன். நீ பத்து செகண்டுக்கு ஒரு முறை அப்பா, அப்பானு கூப்பிட்டுட்டே இரு. சரியா?" 
என்று எபியிடம் கூறிவிட்டு, மாடிப்படி நோக்கி நகர்ந்தான். குச்சிகளைப்பொறுக்கி, பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, ஒன்றைப் பற்றவைத்து மேல்நோக்கிப் பார்க்க, அங்கே அந்தக் கண்கள் இல்லை. 
மாடியிலிருந்து சப்தம் வந்ததே, என்னவென்று பார்த்துவிடத் துணிந்தான்.

அப்பா!!

கைகளில் Bible உள்ள தைரியத்தில், படிகளைத்தாண்டி, மாடியேறினான், 

அப்பா!! 

அங்கே அவனது தாயாரின் புகைப்படக் கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கி, சுக்குநூறாகியிருந்தது. "அம்மாவுக்குமா என்மேல  கோபம், அவங்களை நல்லாத்தானே பாத்துக்கிட்டேன்" என்று மனதில் நினைத்தபடி, அதை அருகில் கிடந்த தொடைப்பத்தால் அள்ளி cleaning Panல் போட்டுவிட்டுத் திரும்ப, எதோ ஒன்று அசுறவேகத்தில் மோதி படிக்கட்டில் உருண்டு கீழே விழுந்தவன் மயங்கிப்போனான். 

அப்பா!! 

மயங்கியவேளையில், அவன் கண்களில் எபியின் முகம் வந்து மறைந்தது.

கண்விழித்துப் பார்த்தவன், மருத்துவமனையில் கிடந்தான், அருகில் எமி. பதறி எழுந்தவன் கண்களில் கேலண்டர் தெரிந்தது. 
"அக்டோபர் 14 சனி."

"எங்கேடி எபி" என்று அழுதபடிக்கேட்க
"ஸ்கூலுக்குப் போயிருக்காங்க" என்ற எபியின் பதில் கேட்டு அமைதியானான். 

"ஒரே ஒருநாள் நான் ஊர்ல இல்லை, என்னங்க ஆச்சு? " என்று பயத்துடன் எமி கேட்க, 
எங்கே நடந்த எல்லாவற்றையும் சொன்னால் எமியும் பயப்படுவாளோ என்று எண்ணி, 

"ஒன்னுமில்ல டீ, கரண்டு போச்சு, மாடில எதோ விழற சத்தம் கேட்டுது, சரின்னு பாக்கப்போயி கீழே விழுந்துட்டேன்." இந்த வாரம் ஜாஸன் சமாதிக்குப் போயி பாத்துட்டு வரனும்டி!! என்று கூறிவிட்டு, எமியின் தலைக்கோதி விட்டான் தாமஸ்.

எமிக்கு என்னவோ உறுத்தியது. தாமஸ் கண்களில் பயம் தெரிந்ததை, எமி கண்டிருந்தாள். 

பள்ளியிலிருந்து எபி வந்தவுடன் அவனைத் தனியாக அழைத்துச்சென்று விசாரித்தாள். ஒன்றும் இல்லை என்றான். 
ஒரு மிரட்டு மிரட்டி விசாரிக்க, பயந்தபடியே சொல்ல ஆரம்பித்தான்,

"அம்மா, நேத்து ஸ்கூல்லருந்து வந்து வேகமா வீட்டுக் கதவைத்திறந்தேனா, ஒரு குட்டி கருப்புப் பூனை ஒன்னு கதவுக்கிடுக்குல மாட்டிக்கிச்சும்மா, கழுத்து பாவம் நசுங்கிடுச்சு, செத்துப்போச்சுது. சரின்னு அதை எடுத்து கொல்லைப்பக்கமா போட்டேன், எடுத்துட்டுப் போகும்போது, வழியல்லாம் ரத்தம் ஆகிடுச்சு, துடைச்சுட்டே இருக்கும்போது, அப்பாவோட கேட் திறக்கற சத்தம் கேட்டுச்சா, சொன்னா அடிப்பாருங்கற பயத்துல, அதுக்கு மேல ஈரச்சாக்க போட்டுட்டேன். 

சிரில் சொன்னான்மா, செத்துப்போன எந்த விஷயமும் பூமிக்கு மேல இருக்கவே கூடாது, உடனே புதைச்சுடனும்னு பைபிள்ல இருக்குன்னு. சாயங்காலம் பைபிள்ல கூட இதைப்பத்தி தேடினேன். அதுக்குள்ள அப்பா படிக்கச் சொல்லி திட்டினாருன்னு போயிட்டேன். 

நைட்டு படுத்துட்டு இருந்தப்போ ரொம்ப ஸ்மெல் அடிக்க ஆரம்பிச்சுடுச்சும்மா, முதல்ல , செத்த பூனைய புதைக்கலாம்னு மாடிக்கு கத்தி எடுக்கப் போனேன்மா. அந்த நேரம்னு பாத்து அப்பாயி படம் கீழ விழுந்துடுச்சு. 

எமி முறைக்க

" சத்தியமா நான் தள்ளலம்மா" என்றான். 

"ம்ம்.. மேல சொல்லு" எமி!!

உடைஞ்சதும் அப்பா சத்தம் கேட்டுச்சா, அப்படியே விட்டுட்டுப் போயிட்டேன். 

அப்பா, என்னைத் தேடிட்டே இருந்தாரும்மா. சிக்கினா இன்னுமா  தூங்கலைன்னு உதைப்பாருன்னு, சிக்கவே இல்லையே அவர்கிட்ட!!" சிரித்தான். எமியும்.

"ஒரு வழியா அப்பா டோர் பக்கம் இல்லாதப்போ போலாம்னு நகர்ந்தேன். என்னைப்பாத்துட்டார். நடுங்கிட்டேன்மா. கொல்லைப்பக்கமா ஓடிட்டேன், பின்னாடியே வந்தாரு, போறவழில பாத்தா பூனை கிடக்கு. ஆனா நான் அதை நம்ம ஷெட் பக்கம்தான்மா போட்டுருந்தேன், பாத்தா இடம் மாறி தோட்டத்துப் பக்கம் கிடந்துச்சு. அப்பாதான் கொண்டாந்து போட்டுருப்பாருன்னு நினைச்சுட்டே திரும்பினேனா, அப்பா எதிர்த்தாப்ல நிக்கறாரு!! 

என்ன செய்யறதுன்னே தெரிலம்மா, அப்படியே மயங்கினாப்ல விழுந்தேன். அப்பாதான் தூக்கிட்டு உள்ள போனார். அப்புறம் என்னை பத்து செகண்டுக்கு ஒரு தடவ அப்பா அப்பான்னு கூப்பிடுடான்னு சொல்லிட்டு என்னோட "கணக்கு" புக்க தூக்கிட்டு மாடிப்பக்கம் போனார். விழுந்துட்டார்."! 

இதைக்கேட்ட எமிக்கு, அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ஓரளவு நடந்த விஷயங்களை யூகிக்க முடிந்தது. தாமஸ் நல்லா பயந்துருக்காரு என்று மனதில் நினைத்தபடி, எபியை ஒரு முறை முறைத்துவிட்டு, வார்டுக்கு சென்றாள். அங்கே வாயைப்பிளந்தபடி தூங்கிய தாமசைப்பார்த்து "வெளிய விரைப்பா திரியறாரு, இவ்வளோ பயமா.. கணக்கு புக்க பைபிள்னு நினைச்சு தூக்கிட்டுத் திரிஞ்சுருக்காரே"  சிரிப்புதான் வந்தது எமிக்கு!! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதே. சந்தோஷம்!!

!!தாமஸ் வீடு!!

எல்லோரும் மருத்துவமனையில் இருந்ததால் வெறிச்சோடிக்கிடந்தது..

"ஏம்மா பேசமாட்ற,  நான் வாரிசில்லாம செத்துப்போனது போல தாமசுக்கும் வாரிசு இருக்க கூடாதுன்னு நினைச்சேன். என்னை மன்னிச்சுடும்மா, அதுக்காக என்னோட பேசாம இருக்காதம்மா.. நான் எபியைக் கொல்லப்போனது தப்புதான். அம்மா.. அம்மா.. ப்ளீஸ் மா. சாரிம்மா!! அதான் நீ கண்ணாடிய உடைச்சு தாமஸை அலர்ட் பண்ணிட்டியேம்மா." ஜாஸன் அம்மாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்..

"அப்புறம் ஏன்டா தாமசைத் மாடீல இருந்து தள்ளின??" அம்மா முறைக்க.. 'ஐயோ, அது நான் இல்லம்மா என்று ஜாசன் முடிக்கும் முன்னமே,

"அது நாந்தான் அத்தை, ஜாசன் இல்லை" என்றபடி வந்து நின்றாள் ஜாசனின் மனைவி. கையில் தன்னுடைய செல்லப்ராணியான கருப்புப் பூனையுடன்.. 
பேச்சுச்சத்தம் தொடர்ந்தது.

ஹாலில், டிவிப்பக்கம் பறந்து விழுந்த சிடி கவர் சொன்னது!!

      "Jason Lives"

#குரு

Vidhya GM Usha Srinivasan Lakshmi Ravi Sriram R Ravindran J Sri Devi Sivanandam Amirthavalli SRaghavan Viji Kannan Bhasker Dev Anantha Prakash Sarvesh

No comments:

Post a Comment